பெற்ற மகள்களின் கண்முன் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்: நடந்தது என்ன?..

டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் திங்கட்கிழமை இரவு தனது இரண்டு மகள்கள் முன்னால் சுடப்பட்ட உத்தர பிரதேசத்தை சேர்ந்த பத்திரிகையாளர் இன்று காலை காலமானார். திங்கட்கிழமை இரவு விக்ரம் ஜோஷி தனது இரு மகள்களுடன் தனது இரு சக்கர வாகனத்தில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை தாக்கி, பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டது. இரு மகள்கள் உதவிக்காகச் சத்தமிடும் காட்சிகள் அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.
“காசியாபாத் போலீஸ் இந்த வழக்கில் இதுவரை ஒன்பது பேரை கைது செய்துள்ளனர். ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன,” என்று மூத்த காவல் கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது ஏ.என்.ஐ செய்தி முகமை.
சட்ட ஒழுங்கு
உத்தர பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு குறித்துப் பல கேள்விகளை எழுப்புகிறது அந்த சம்பவம். உத்தர பிரதேச அரசு விக்ரம் ஜோஷியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. விக்ரமின் குடும்பம் இந்த சம்பவத்திற்கு நீதி வேண்டி, பிரேத பரிசோதனை நடைபெறும் மருத்துவமனை வளாகத்தில் போராடி வருகின்றனர். போலீஸின் இயலாமைக்கு தன் உயிரையே விலையாக விக்ரம் ஜோஷி கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர் அவரது குடும்பத்தினர்.
ஏன் இந்த தாக்குதல்?
இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்ற நான்கு நாட்களுக்கு முன்பு, தனது உறவினர் ஒருவர் ஒரு கும்பலால் துன்புறுத்தப்படுவதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீஸ் இந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனை தொடர்ந்தே அவர் தாக்கப்பட்டுள்ளார்.
சிசிடிவி பதிவில் இருப்பது என்ன?
ஒரு கும்பலால் அவர் தாக்கப்படும் காட்சி தெளிவாக சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. ஒரு கும்பல் அவரை தாக்குகிறது. பின்னர் அவரை சுடுகிறது. விக்ரம் தரையில் விழுகிறார். அவரது மகள்கள் உதவி வேண்டி கதறுகிறார்கள். இந்த காட்சிகள் அந்த சிசிடிவி பதிவாகி உள்ளன. காசியாபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், புதன்கிழமை காலை மரணமடைந்தார்.
விக்ரம் ஜோஷிக்கு மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகிர்ந்த ட்வீட்டில், இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். சட்ட ஒழுங்கு குறித்த பல கேள்விகளை இந்த சம்பவம் எழுப்புவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தமது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தலைநகர் பகுதி அருகே இருக்கும் ஒருபகுதியிலே சட்ட ஒழுங்கு நிலைமை இப்படி இருக்கிறது என்றால், உத்தர பிரதேசத்தில் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என பிரியங்கா காந்தி ஒரு ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.