வயிற்று வலியால் 14 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி – சிகிச்சைக்கு பின் குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை மணல்மேடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று முன்தினம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வயிற்றுவலி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி நிறைமாத கர்ப்பமாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு மயிலாடுதுறை மருத்துவமனை நிர்வாகத்தினர் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் 14வயது சிறுமிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் ஆரோக்கியராஜ், மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். வைதீஸ்வரன் கோவிலைச் சேர்ந்த சிறுமியின் அக்காள் கணவர் தினேஷ் மற்றும் பலர் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து சிறுமியின் அக்காள் கணவர் தினேஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மாரியம்மாள் மீதும், சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வேறு சில நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.