கடுப்பில் உடைத்த அரசுப்பேருந்து கண்ணாடி… கல்லூரி மாணவர்களின் ஆவேசச் செயல் !!!
கல்லூரிக்கு செல்லும் நேரத்தில் நிற்காமல் சென்றதால், ஆத்திரமடைந்த மாணவர்கள் கட்டையால் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டாம் பகுதி சுற்றுவட்டார மாணவ, மாணவிகள் எல்லோரும் கும்பகோணத்தில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். தங்களது ஊர்களில் இருந்து கல்லூரிகளுக்கு பேருந்து மூலம் சென்று வருவது வழக்கம். ஆனால் பல மாணவ, மாணவிகள் சென்று வரும் அந்த ஊரில் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், அதுவும் சரியான நேரத்திற்கு வராததும் இதனால் கல்லூரிக்கு செல்ல தாமதமாவதும், தொடர் புகாராக நீண்டுகொண்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை மாணவர்கள் வழக்கம் போல ஜெயங்கொண்டாம் அருகே உள்ள சிலால் கிராமத்தில் பேருந்திற்காக காத்திருந்துள்ளனர், வெகுநேரமாகியும் ஒரு பேருந்து கூட வராததால் மாணவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். கடைசியாக வந்த ஒரு பேருந்தும் பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்றதால் ஏற்கனவே கடுப்பில் இருந்த மாணவர்கள், கீழே இருந்த கட்டையை தூக்கி பேருந்தின் மீது ஏறிந்துள்ளனர். இதனால் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும் தொடந்து மாணவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மற்றொரு பேருந்தில் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். பேச்சுவார்த்தையில் உடைந்த பேருந்து கண்ணாடியின் செலவை சிலால் கிராம மக்கள் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.