கோயம்பேட்டில் இரும்பு பைப்பிற்கு நடுவே சிக்கி தவித்த பழ வியாபாரி !!

சென்னையில் உள்ள பெரிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டின் நுழைவு வாயிலில் இருந்த இரும்பு நடைபாதை பைப்பிற்குள் சிக்கி தவித்த வியாபாரியை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் பழம், பூ, காய்கறி என அனைத்திற்கும் தனித்தனி கடைப்பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு சந்தைக்குள்ளும் நுழைய தனித்தனி வாயில்கள் உள்ளது. வாயில்களின் நுழைவு பகுதியில் இரும்பு பைப்களால் ஆன நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. சந்தைகளுக்குள் கால்நடைகள் நுழைந்து நாசம் செய்யாமல் இருக்கும் பொருட்டு இந்த பைப்புகள் கொண்ட நடைபாதை சிறு சிறு இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தள்ளுவண்டியில் கொய்யாப்பழம் வியாபாரம் செய்யும் முருகன் எனும் 40 வயது மதிக்கத்தக்க நபர் மார்கெட்டிற்கு வந்துள்ளார். அப்போது எண் 18ல் உள்ள நுழைவு வாயிலில் வழியே நடந்து வந்த அவர் கால்வழுக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவற்றில் இடது கால் இரும்பு பைப்பின் இடைவெளிக்குள் சிக்கி கொண்டது. இதனை கண்ட அருகில் இருந்த கூலி தொழிலாளர்கள் உடனே போய் முருகனை தூக்க முயன்றுள்ளனர். ஆனால் அரை மணிநேரமாக போராடியும் அவரை வெளியே கொண்டுவர முடியவில்லை. எனவே உடனடியாக தகவலை கோயம்பேடு தீயணைப்பு துறைக்கும், ஆம்புலன்ஸிற்கும் தகவல் தெரிவித்தனர். ராஜேந்திரன் தலைமையில் விரைந்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர், எந்திரங்களின் மூலம் இரும்பு பைப்பை பெரிதாக்கி 15 நிமிடத்தில் முருகனை பத்திரமாக மீட்டனர்.