குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – பரபரப்பான கடைசி நிமிட காட்சிகள்..!!!

December 9, 2021 at 1:07 pm
pc

கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி மைதானத்தில் இருக்கும் சிப்கானா கிளப்பில் தரையிறங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதனால் அங்கு தீயணைப்பு வாகனம் தயாராக இருந்தது.

இந்த நிலையில் ஹெலிகாப்டர் மேட்டுப்பாளையம் அருகே சென்ற போது பனிமூட்டம் அதிகமாக இருந்து உள்ளது. இந்த ஹெலிகாப்டர் எம்.ஐ.17 வி 5 வகை என்பதால் பனிமூட்டத் திலும் செல்லக்கூடிய வசதி இருப்பதால் தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தை கடந்து சென்றபோது ஹெலிகாப்டர் தள்ளாடியபடி சென்று உள்ளது. மேலும் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் ஹெலிகாப்டரால் உயரத்தில் பறக்கவில்லை. தாழ்வாக பறந்து சென்றது.

குன்னூர் காட்டேரி பூங்கா அருகே உள்ள இப்சேட் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது அங்கும் பனிமூட்டம் பரவி இருந்தது. இந்த நிலையில் திடீரென்று அங்கு இருந்த 40 அடி உயரம் கொண்ட மரத்தில் ஹெலிகாப்டரின் இறக்கை மோதியது.

இதையடுத்து அதன் வால்பகுதியும் மற்றொரு மரத்தில் மோதியது. தொடர்ந்து மற்றொரு மரத்திலும் மோதிய ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்தது. இதை நேரில் பார்த்த அந்த குடியிருப்பை சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். ஆனால் ஹெலிகாப்டர் டமார், டமார் என்ற சத்தத்துடன் வெடித்துக்கொண்டு இருந்ததால், அதற்குள் வெடிபொருட்கள் இருக்கலாம் என்று பயந்து பொது மக்கள் அருகில் செல்லவில்லை.

உடனே அவர்கள் இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரம் வரையே வாகனங்கள் செல்ல முடியும்.

எனவே அங்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங் கள் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து உள்ளே சென்ற மீட்பு படையை சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை துணியில் கட்டி டோலி போன்று தூக்கியபடி ஆம்புலன்ஸ் நின்ற பகுதிக்கு கொண்டு வந்தனர். 

இந்த ஹெலிகாப்டர் ஒயிட் பெட்ரோலில் இயங்கக்கூடியது என்பதால் தீப்பிடித்து எரிந்ததும் மளமளவென எரிந்தது. சுமார் 40 அடி உயரத்துக்கு தீ எரிந்தது. அத்துடன் பல அடி உயரத்துக்கு கரும்புகை சென்றது. இதில் அங்கிருந்த 40 அடி உயரமான 3 மரங்களும் சேதமானது. சுமார் 3 மணி நேரம் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி, அவரின் மனைவி மதுலிகா ராவத், மற்றும் உயர் ராணுவ அதிகாரிகள் என அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த துரதிர்ஷ்ட சம்பவம், நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கும் முன்னர் எடுக்கப்பட்ட பிரத்யேக வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கும் முன்னர் அப்பகுதியில் சுற்றுலா சென்ற ஒருவர் அந்த விபத்தை தனது மொபைலில் பதிவு செய்துள்ளார். உதகை மலை ரெயில் இருப்புப் பாதையில் சுற்றிப் பார்க்க வந்த குடும்பத்தினர், அப்பகுதியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், ஹெலிகாப்டர் பலத்த சத்தத்துடன் அவர்களை கடந்து செல்கிறது. அப்போது அந்த பகுதியில் அடர் பனிமூட்டம் நிலவுவதை காண முடிகிறது. சுற்றிலும் வெண்புகையாக காட்சியளிக்கிறது. மேலும் ஹெலிகாப்டர் இஞ்சினில் இருந்து வரும் சப்தம் வித்யாசமாகவும் இருக்கிறது.

ஹெலிகாப்டர் பறந்து சென்றது இயல்புக்கு மாறாக இருந்த நிலையில் அங்கிருந்தவர்கள் சத்தம் வந்த திசையை திரும்பிப் வானில் பார்க்கின்றனர், ஹெலிகாப்டர் தரையில் மோதியதைப் போல சத்தம் கேட்டதால், “என்னாச்சு உடஞ்சிருச்சா?” என ஒருவர் கேட்க அதற்கு வீடியோ எடுப்பவர் ஆமாம் என பதில் தருகிறார்.

விபத்துக்கு முன் எடுக்கப்பட்டு தற்போது வெளியாகி இருக்கும் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website