அரசுப்பேருந்து மோதி தனியார் கல்லூரி மாணவர் துடிதுடித்து பலி!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர் என்பவரது மகன் கபிலன் (22). இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் M.A முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் எப்போதும் கல்லூரிக்கு காலையில் அவரது காரில் செல்வது வழக்கம். அதேபோல இன்று காலையும் அவரது காரில் வழக்கம்போல் கல்லூரிக்கு தனது வீட்டிலிருந்து புறப்பட்டு செங்கல்பட்டு மார்க்கமாக சென்றுகொண்டிருந்தார்.
அதேசமயம் சென்னையிலிருந்து கல்பாக்கம் நோக்கி அரசு பேருந்து ஒன்று எதிர் திசையில் வந்துள்ளது. சரியாக கீரப்பாக்கம் பகுதியில் அந்தப் பேருந்து கபிலன் ஓட்டிவந்த காரின் மீது நேருக்கு நேர் மோதியது.
அரசுப் பேருந்து கார் மீது மோதியதில் கார் முழுமையாக சேதமடைந்து அப்பளம் போல நொறுங்கி கிடந்தது. அந்த காரை ஓட்டி வந்த கபிலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் தீயணைப்புத் துறையினரை வரவழைத்து அவர்களது உதவியுடன் அந்த வாலிபரின் உடலை மீட்டனர்.
தற்போது கபிலனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த கபிலன் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கழுக்குன்றம் தமிழ்மணியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரிக்கு சென்ற இளைஞர் அரசு பேருந்து மீது மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.