பத்தே நிமிசத்துல புதிய சுவையில் வெங்காய தொக்கு.. பத்து நாளு ஆனாலும் கெடாது..!!

உங்களுக்கு இட்லி, தோசைக்கு எப்பவும் சாம்பார், சட்னியே சாப்பிட்டு சலித்துப்போய் விட்டதா? உங்கள் வீட்டில் சின்ன வெங்காயம் இருக்கா? அப்படியென்றால் சுவையான, வித்தியாசமான, எளிமையான சைடு டிஷ் செய்யலாம். அதுதான் சின்ன வெங்காயம் தொக்கு . இது சாப்பாத்திக்கும் ரொம்ப நல்ல இருக்கும். இதுல என்ன ஸ்பெஷல் என்றால் ரெசிபி செய்யும் போது அதில் சேர்க்கப்படும் நல்லெண்ணெய் தான். இந்த தொக்கு பத்து நாட்கள் ஆனாலும் கெடாமல் அப்படியே இருக்கும். ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள் அவ்வளவு தான். இப்போது சின்ன வெங்காய தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 1 கப்
புளி – அரை டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்
வரமிளகாய் – 7
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் சின்ன வெங்காயம், புளி, பூண்டு, வர மிளகாய், சிறிதளவு உப்பு போன்றவற்றை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானது, அரைத்த வெங்காய பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வைத்து ஒரு 10 நிமிடம், கெட்டியாக நிறம் மாறும் வரை நன்றாக கிளறி விடவும்.
நாம் சேர்ந்த வெங்காய பேஸ்ட்டின் நிறம் மாறியது, அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
இப்போது மற்றொரு வாணலியை எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்ந்து தாளித்து, வெங்காயத் தொக்கை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்கினால், டேஸ்ட்டான சின்ன வெங்காயத் தொக்கு ரெடி