சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம்- 4 மருத்துவமனைகளை மூட உத்தரவு!

சிறுமியிடம் கருமுட்டை தானம் என்ற பெயரில் சட்டத்துக்கு புறம்பாக கருமுட்டை விற்பனை நடந்த விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 16 வயது சிறுமியின் புகாரின் பேரில், அவருடைய தாயார், தாயாரின் 2-வது கணவர், புரோக்கராக செயல்பட்ட மாலதி மற்றும் போலி ஆதார் அட்டை வழங்கிய ஜான் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு சிறுமியின் கருமுட்டையை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில் 4 மருத்துவமனைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கருமுட்டை தானம் குறித்த சாதக, பாதகங்கள் சிறுமியிடம் முறையாக விளக்கப்படவில்லை. விசாரணைக்கான ஆவணங்களை மருத்துவமனைகள் முறையாக கொடுக்கவில்லை. கருமுட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இருந்து 2 தனியார் மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது நீதிமன்றங்கள் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை வழங்கப்படுகிறது. சிறுமியை அவரது குடும்பத்தினரே நிர்பந்தம் செய்து கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஈரோடு சுதா மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனை, பெருந்துறை, சேலம் மருத்துவமனைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 4 மருத்துவமனைகளிலும் 15 நாட்களுக்குள் உள்நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என கூறினார்.