செந்நிறமாக மாறிய கடல்: அதிர்ச்சியை கொடுத்த ஆய்வு முடிவு!
புதுவையில் கடந்த 17 ஆம் தேதி திடீரென கடல் நீர் செந்நிறத்திற்கு மாறியது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பான ஆய்வு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த 17 ஆம் தேதி புதுச்சேரி கடற்கரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். காரணம் திடீரென பழைய வடி சாராய ஆலையின் பின்புறம் உள்ள குறிப்பிட்ட கடல் பகுதியில் உள்ள கடல் நீர் செந்நிறத்தில் காட்சியளித்தது. மற்ற பகுதியில் கடல் நீல நிறத்தில் வழக்கம் போல் காட்சியளித்த நிலையில், அந்தப் பகுதியில் மட்டும் செம்மை நிறத்தில் மாறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு செந்நிறத்தில் கடல் நீர் காணப்பட்டது. இது தொடர்பாக மீனவர்களிடம் கேட்ட பொழுது, ஆரோவில் பகுதியில் மழை பெய்ததால் செம்மண் மேட்டுப்பகுதியில் இருந்த மண் கரைந்திருக்கும். இதனால் செம்மண் நீர் நகர்ந்து கடலுக்குள் சென்றிருக்கும் எனத் தெரிவித்தனர். அந்த மண் கலந்த நீரின் அடர்த்தி அதிகம் என்பதால் கடலில் தனியாகத் தெரிகிறது. சில மணி நேரங்களுக்குப் பிறகு செம்மண் தேங்கி மீண்டும் கடல் பழைய நிலைக்கு மாறும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
மீனவர்களின் கருத்து இப்படி இருந்தாலும் மறுபுறம் ஆய்வாளர்கள் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செந்நிறம் கொண்ட நீர் மாதிரியை எடுத்துச் சென்று ஆய்வு செய்ததில், அதில் நச்சுத்தன்மை வாய்ந்த அலெக்சாண்டரியம் என்ற ஒரு வகை கடல் பாசி வளர்ந்தது தெரியவந்தது. பொதுவாக கிழக்கு கடற்கரைச் சார்ந்த பகுதிகளில் நச்சுத்தன்மை இல்லாத கடல்பாசிகள் வளரும் நிலையில் கடல் மாசு காரணமாக இந்த நச்சுத்தன்மை கொண்ட பாசிகள் வளர்ந்துள்ளது. அதிக நச்சுத்தன்மை கொண்ட நீர் கடலில் கலப்பதால் இவை வளர்வதாகவும் தெரியவந்துள்ளது.