இருமல் மருந்தால் இந்தியாவில் 12 குழந்தைகள் பலி: அதிர்ச்சி தகவல்!
12 months ago
December 21, 2023 at 7:08 pm Teadmin
இந்தியாவில் 12 குழந்தைகளின் உயிரை பலி வாங்கிய இருமல் மருந்தொன்றை, நான்கு வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு தடை விதித்துள்ளது. இந்தியாவில், 2019க்கும் 2020க்கும் இடையில், குறிப்பிட்ட இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவின் ஜம்மு பகுதியில் அந்த மருந்தை உட்கொண்டதால் உயிரிழந்த அந்த 12 குழந்தைகளும், இரண்டு மாதம் முதல் ஆறு வயது வரையிலானவர்கள்.இந்தியாவில் இப்படியென்றால், நான்கு இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்ட Gambia நாட்டுக் குழந்தைகள் 66 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு, உலக சுகாதார அமைப்பு அந்த மருந்துகள் தொடர்பில் உலகம் முழுமைக்கும் எச்சரிக்கை விடுத்தது.மேலும், உஸ்பெகிஸ்தான் நாட்டிலும் 2022 வரையிலான காலகட்டத்தில் இந்திய நிறுவனத் தயாரிப்புகளான இருமல் மருந்துகளால் 18 பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.அந்த மருந்துகளில், அளவுக்கதிகமான, டை எத்திலீன் கிளைக்கால் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட எத்திலீன் ஆல்கஹால் என்னும் ரசாயனங்கள் இருந்தது ஆய்வக சோதனையில் உறுதி செய்யப்பட்டது.இத்தனை உயிரிழப்புகளுக்குப் பின், தற்போது, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, நான்கு வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு அந்த மருந்தைக் கொடுப்பதற்கு தடை விதித்துள்ளது.மேலும், இந்த குறிப்பிட்ட மருந்தை விற்கும் நிறுவனங்கள், இந்த மருந்தை நான்கு வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாது என்னும் எச்சரிக்கையை மருந்து போத்தலின் லேபிலில் கட்டாயம் குறிப்பிடவேண்டும் என்றும் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.பிரச்சினைக்குரிய இருமல் மருந்தில், chlorpheniramine maleate மற்றும் phenylephrin என்னும் மருந்துகளின் கலவை உள்ளது. இவை, இருமல் மருந்துகள், மாத்திரைகள் மற்றும் ஜலதோஷ மருந்துகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளாகும்.