மகளின் குழந்தையை கடத்தி ரூ.2 லட்சத்திற்கு விற்ற பாட்டி!
மகளின் ஆண் குழந்தையைக் கடத்தி 2 லட்ச ரூபாய்க்கு விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், கிரேட்டர் நொய்டாவில் ஷாபெரி பகுதியைச் சேர்ந்தவர் ஷிவாங்கி. இவர் கடந்த மே மாதம் தனது தாய் மீது பொலிசில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரில் அவர், “என் ஆண் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக என் தாய் எங்களுடைய வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலயில், மே மாதம் 10 -ம் திகதி நானும், என் கணவரும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தோம். பின்னர், வீட்டிற்கு வந்து பார்த்த போது, எனது தாயும் குழந்தையும் காணவில்லை” என்று கூறியிருந்தார்.
பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் ஷிவாங்கியின் தாய் பபிதாவைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அபோது, குழந்தையை ஹாபூரில் உள்ள ஜமுனா என்ற பெண்ணின் உதவியுடன் ரூ.2 லட்சத்திற்கு விற்றதாக அவர் ஒப்புக் கொண்டார்.
இதனையடுத்து, தலைமறைவாக இருந்த ஜமுனாவை கைது செய்த பொலிசார் நடத்திய விசாரணையில், குழந்தை ஹாபூரைச் சேர்ந்த மருத்துவர் தீபக் தியாகியிடம் ஒப்படைக்கப்பட்டது தெரியவந்தது. அப்போது, தீபக்கை பிடித்து விசாரித்த போது அமர்வீர் என்ற நபருக்கு 2 லட்ச ரூபாய்க்கு விற்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.
இதன் பின்னர், எட்டு மாதங்களுக்கு பின்பு குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிசார் கூறுகையில், “ஜமுனாவும், பபிதாவும் தலா ரூ. 50,000 பெற்றுள்ளனர். மருத்துவர் தீபக் தியாகி ரூ. 1 லட்சம் பெற்றுள்ளார்” என்றனர்.
இதனிடையே, கடவுள் என் பிரார்த்தனைகளைக் கேட்டு, என் குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டுக் கொடுத்துள்ளார் என ஷிவாங்கி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.