கொரோனா: இந்தியா இன்னொரு இத்தாலி ஆகிவிட கூடாது – நடிகர் சூர்யா எச்சரிக்கை

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது இதுவரை 9 பேர் இந்த கொடிய வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைசியாக துபாயில் இருந்து திருநெல்வேலி திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
திரையுலக பிரபலங்கள் விழிப்புணர்வு வெளியிட்டு வருகின்றனர். தற்போது நடிகர் சூர்யா மக்களுக்கு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர் “கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நாம் பரப்ப வேண்டிய ஒரே விஷயம் விழிப்புணர்வு தான். நாம் இப்போது வீட்டில் இருந்தே போராட வேண்டும். சீனாவை விட இத்தாலியில் உயிரிழப்புகள் அதிகமாகக் காரணம் மக்கள் அறியாமையில் வெளியே சென்றது தான். இந்தியா, இத்தாலி போன்று ஆகிவிடக்கூடாது.
மக்கள் அனைவரும் கூட்டமாக கூடாமல் விலகி இருக்க வேண்டும் வெளியில் சென்று வந்தால் கை, கால்களை கழுவ வேண்டும் என்று சொல்கிறார்கள். இருமல், காய்ச்சல் வந்தாலே அது கரோனா கிடையாது. ஆனால் அது தொடர்ந்து இருந்தால் கண்டிப்பாக மருத்துவர்களை அணுக வேண்டும். பாதிக்கப்பட்டவர் தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாமல் வெளியில் சென்றால் அவரை சுற்றி இருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள். அப்படி ஒரு மன்னிக்க முடியாத தவறை நீங்கள் செய்ய மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்.
நமக்காகத் தான் அரசு அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள் உயிரை பணயம் வைத்து வெளியில் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்காக வீட்டிலேயே இருக்கலாம். உண்மையான தேவைக்கு மட்டுமே வெளியில் செல்லுங்கள். கூட்டம் கூட்டமாக செல்ல இது சுற்றுலா கிடையாது. குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நேரம் இது. பயப்பட வேண்டிய விஷயத்துக்கு பயப்படாமல் இருப்பது முட்டாள்தனம் என்று சொல்வார்கள்.
கரோனா வைரஸை தடுப்பதற்கு அடுத்த 2 வாரங்கள் முக்கியம் என்று சொல்கிறார்கள். எச்சரிக்கையோடு இருப்போம் என அறிவுரை வழங்கினார். சம்பத்தில் கமல் ஹாசன், ஷாருக் கான் போன்ற நடிகர்கள் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.