கூடுதல் அவகாசம் கேட்கும் நடிகர் விஜய் தரப்பு.., வருமான வரித்துறை சம்மனுக்கு விஜய் வருவாரா ?
வருமான வரித்துறை சம்மனுக்கு விளக்கம் அளிக்க தனக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.
நடிகர் விஜய் இன்றே ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு வருமான வரித்துறை அதிரடியாக சம்மன் அனுப்பி உள்ளது. விஜயின் சென்னை சாலிகிராமம், நீலாங்கரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது விஜய் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். பின்பு சோதனை முடிந்தபின் மீண்டும் நெய்வேலி படப்பிடிப்பிற்கு சென்றார்.
வருமான வரித்துறை சோதனையை அடுத்து விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கும், பிகில் பட தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரத்துக்கும் ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு முன்பு விஜய்க்கு 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. மூன்று நாட்களில் வருமான வரித்துறை அலுவலகத்தில் வந்து விளக்கம் கொடுக்கவேண்டும் என்று கூறியது. ஆனால் தற்போது 3 நாள் காலக்கெடு மாற்றப்பட்டு இன்றே ஆஜராகி விளக்கம் கொடுக்கவேண்டும் என வருமான வரித்துறை கூறியுள்ளது.
இதனால் விஜய் தரப்பில் காலஅவகாசம் கேட்கப்பட்டுள்ளது ஆனால் இதற்கு வருமான வரித்துறை சார்பாக அளிக்கப்பட்ட பதில் குறித்த தகவல் வெளியாகவில்லை. விஜய்க்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட வாய்ப்பில்லை எனவும் கூடுதலாக நாளை வரை அவகாசம் தர மட்டுமே வாய்ப்புள்ளது என செய்தி வெளியாகியுள்ளது.