தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பொன்காடு ஆனந்தவல்லிபுரம் வாய்க்கால் தென்கரை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவமனை சமையலர் சிவகுமார் – கோவிந்தம்மாள் தம்பதியின் மகள் அம்மு என்ற சிவஜோதி (வயது 19). சிவகுமார் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சமையலராகவும் கோவிந்தம்மாள் பேராவூரணி ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்கள். ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள சிவஜோதி வீட்டிலேயே இருந்துள்ளார்.
இவர்கள் ஏற்கனவே பேராவூரணி அரசு மருத்துவமனை எதிரே செக்கடித்தோப்பு என்ற பகுதியில் குடியிருந்தபோது, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புனல்வாசல் பகுதியைச் சேர்ந்த காளி என்ற காளீஸ்வரன்(23), பேராவூரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ்சில் ஓட்டுநராகவும், லாரி ஓட்டுநராகவும் பணியாற்றி வந்துள்ளார். அப்போது காளீஸ்வரனுக்கும் சிவஜோதிக்கும் காதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு பெண்ணின் பெற்றோர் சம்மதித்துள்ளனர். இதனால் சிவஜோதியை பார்க்க அவரது பெற்றோர், சகோதரர்கள் இருக்கும் போதே காளீஸ்வரன் அடிக்கடி சிவஜோதி வீட்டிற்கு சகஜமாக சென்றுள்ளார்.
இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு காளீஸ்வரன் பேராவூரணியை விட்டு சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். தூரத்தில் இருந்தாலும் காளீஸ்வரனும் சிவஜோதியும் தொலைபேசி மூலம் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரனுக்கு சொந்த ஊரில் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் ஆன தகவல் தெரிந்த பிறகு சிவஜோதி, காளீஸ்வரனுடன் பேசாமல் இருந்துள்ளார். செல்போன் மூலம் இருவரும் அடிக்கடி வாக்குவாதம் செய்துள்ளனர்.
தனக்கு திருமணமானாலும் காதலியை மறக்க முடியாத நிலையில் இருந்த காளீஸ்வரன், செவ்வாய்க்கிழமை மாலை பொன்காடு ஆனந்தவல்லி வாய்க்கால் பகுதியில் உள்ள சிவஜோதியை பார்ப்பதற்காக குடிபோதையில் வந்த காளீஸ்வரன், சிவஜோதியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு வற்புறுத்தியுள்ளார். திருமணம் ஆன உன்னுடன் வரமாட்டேன்; நீ போய் உன் மனைவியுடன் போய் வாழ்ந்துக்க என்று சிவஜோதி மறுப்பு தெரிவித்துள்ளார். வாய்த் தகராறு முற்றவே சிவஜோதியின் பெற்றோர், பேராவூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து வந்த காவலர்கள் காளீஸ்வரனை கண்டித்து அனுப்பியுள்ளனர். காதலியை விட்டுப் போக நினைக்காத காளீஸ்வரன், புதன்கிழமை அதிகாலை மீண்டும் வந்து தூங்கிக் கொண்டிருந்த சிவஜோதியிடம் தன்னுடன் வந்து விடுமாறு மீண்டும் அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிவஜோதி மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வீட்டுக் கதவின் பின்புறம் இருந்த கல்லை எடுத்து சிவஜோதி தலையில் காளீஸ்வரன் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிவஜோதி துடிதுடித்து இறந்தார். இதையடுத்து சிவஜோதியின் சகோதரர்கள் அவனைப் பிடிக்க முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி காவல்துறையினர், சடலத்தை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய காளீஸ்வரனை தேடி வருகின்றனர்.
மேலும் தடய அறிவியல் துறையினர் தடயங்களைச் சேகரித்தனர். மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு, அது சிறிது தூரம் ஓடி நின்றது. காதலித்த இளம்பெண், திருமணமான தன்னுடன் வராமல் தவிர்க்கவே ஆத்திரமடைந்த காதலன் கல்லை தலையில் தூக்கிப் போட்டுக் கொன்ற சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
“காளீஸ்வரன் முதல் நாள் சண்டை போட்ட போதே போலீசாருக்கு தகவல் சொன்னோம். அவங்க வந்து அவனை அழைச்சுட்டு போய் இருந்தால் எங்க புள்ளை உயிர் போயிருக்காது. வந்த போலீசார் அறிவுரை கூறி அனுப்பியதால் மீண்டும் போதையில் வந்து எங்க புள்ளைய கொன்னுட்டானே! எங்களுக்குன்னு கேட்க ஆள் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா…” என்று உறவினர்கள் கதறிய கதறல் மருத்துவமனை வட்டாரத்தில் அனைவரையும் கண் கலங்க வைத்தது.