மூடநம்பிக்கையால் பச்சிளங்குழந்தைக்கு 40 இடங்களில் சூடு வைத்த கொடூரம்..!
இந்திய மாநிலம், மத்திய பிரதேசத்தில் பிறந்து 45 நாளே ஆன குழந்தைக்கு 40 இடங்களில் இரும்புக்கம்பியை வைத்து சூடு வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிம்மோனியா காய்ச்சல்
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகில் உள்ள ஷாதோல் என்ற இடத்தில் அஜித் என்ற ஒன்றரை மாத குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு நிம்மோனியா காய்ச்சல் ஏற்பட்டதால், அவரது பெற்றோர் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, இரும்புக்கம்பியால் குழந்தைக்கு சூடு வைக்கப்பட்டுள்ளது. இதனால், மூச்சு விட முடியாமல் குழந்தை இருந்ததால் ஷாதோல் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் கொண்டு சென்றனர்.
40 இடங்களில் சூடு:
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தையின் கழுத்து மற்றும் வயிறு உள்பட 40 இடங்களில் இரும்புக்கம்பியை வைத்து சூடு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, குழந்தையின் உடல்நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, பொலிஸார் விரைந்துவந்து பெற்றோர்களிடம் வாக்குமூலம் வாங்கினர்.
மத்திய பிரதேச பழங்குடியினர் மத்தியில் நிம்மோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் 40 இடங்களில் இரும்புக்கம்பியை வைத்து சூடு வைக்கும் பழக்கம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அவர்கள் மூட நம்பிக்கையின் காரணமாகவும், போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தினாலும் இப்படி செய்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.