5 மாத குழந்தை அழுதுகொண்டே இருந்ததால்.. ஆத்திரத்தில் அடித்துக்கொன்ற தந்தை
5 மாத குழந்தையின் அழுகையை ஏற்க முடியாமல் ஆத்திரத்தில் தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 மாத குழந்தை
தமிழக மாவட்டமான நீலகிரி, ஓல்டு ஊட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பிரேம் (31) மற்றும் ரம்யா (21). இவர்களுக்கு ஏஞ்சல் என்ற 5 மாத பெண் குழந்தை இருந்தது.
இதில், பிரேம் காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து வேலைக்கு சென்று இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வருவார். ஆனால், நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
அவர் சென்று நீண்ட நேரம் ஆன பின்னரும் குழந்தையிடம் எந்தவொரு அசைவும் இல்லை. இதனால் பயந்து போன ரம்யா குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தந்தையே காரணம்
இதில் குழந்தை இறப்பில் சந்தேகம் அடைந்த ரம்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, சந்தேக வழக்கை பொலிஸார் பதிவு செய்தனர்.
பின்னர் மேற்கொண்ட விசாரணையில், கடந்த சில நாட்களாக குழந்தையின் அழுகை சத்தத்தை பிரேமால் தாங்க முடியாததால் குழந்தையை அடித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் ரம்யா துணி துவைத்துக் கொண்டிருந்த போது குழந்தை அழுதுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை பிரேம், குழந்தையை அடித்ததால் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடிபட்டு ரத்தம் உறைந்து குழந்தை இறந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பிரேமை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், அவருக்கு மனநல பாதிப்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.