சென்னை

சென்னை மக்களுக்கு நற்செய்தி..! அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு, மிதமான மழையே பெய்யும்:

Quick Share

சென்னையில் அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று பிற்பகலில் தொடங்கியது. ஆரம்பமே அதிரடியாக வட தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. நாளை காலை சென்னையில் கரையை கடக்கும் என்றும், சென்னைக்கு தென்கிழக்கே 440 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிக்கு இன்றும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. முன்னதாக கடந்த 2 நாட்களில் இந்த நான்கு மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்தது. சில இடங்களில் 30செ.மீ மழைகூட பதிவாகியிருந்தது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது சென்னைக்கு அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தெற்கு ஆந்திரா நோக்கி கரையைக் கடப்பதால் சென்னையில் அதி கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். சென்னையில் மிதமான மழையே பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 20செ.மீ மேல் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.

சென்னையில் கனமழை: சாலைகளில் சூழ்ந்த மழைநீர்!

Quick Share

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது சென்னைக்குக் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாகச் சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதே சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன் காரணமாகச் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதியடைந்துள்ளனர். அந்த வகையில் பெரம்பூரில் உள்ள முரசொலி மாறன் மேம்பாலத்தின் கீழ்த்தளத்தில் மழை நீர் நிரம்பியுள்ளதாதல் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பெரம்பூர் ஹை ரோடு, பெரம்பூர் பஸ் நிலையம் அருகில் உள்ள நெல்வயல் சாலை, வியாசர்பாடி ஜீவா ரயில்வே ஸ்டேஷன், கன்னிகாபுரம் ஆகிய இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளன. அதே போன்று கொளத்தூர் முதல் பிரதான சாலை, பெரவள்ளூர் கே -5 காவல் நிலையம், கொளத்தூர் ஜவகர் நகர் 6வது பிரதான சாலை, கொளத்தூர் அகதீஸ்வரர் நகர் கங்கா திரையரங்கம் அருகிலும் மழைநீர் சூழ்ந்துள்ளன.

கருங்காலி மரங்கள் கடத்தல்: சென்னையில் 5 பேர் கைது!

Quick Share

தேனி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இயற்கை வளங்களும் காடுகளும் வயல்களும் மழைப் பகுதிகளும் நிறைந்த பகுதியாகும் மலைப் பகுதிகளில் விலை உயர்ந்த தேக்கு, சந்தனம் கருங்காலி, நெல்லி, வாலா, உசுலு உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட வகை மரங்கள் வளமுடன் உள்ளன. இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள காடுகளிலும் வனப்பகுதியிலும் உள்ள கருங்காலி மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர். அதன் பின்னர் அம்மரத்தின் வைரம் வாய்ந்த பகுதியை மட்டும் செதுக்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து குரங்கனி – கொட்டகுடிமலை கிராமத்தைச் சேர்ந்த இந்த மூன்று நபர்களும், வத்தலக்குண்டு சேர்ந்த இரண்டு நபர்களும் சேர்ந்து புஷ்பா திரைப்படம் பாணியில் ஆற்று வெள்ளத்தின் வெட்டிய மரங்களை தூக்கி எரிந்துள்ளனர். ஆற்றின் வெள்ளப் போக்கில் கடத்தி வரப்பட்டு போடி பகுதியில் வெட்டிய மரங்களை ஆட்டோ மூலம் கொண்டு செல்லப்பட்டு சென்னையில் விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.

அப்போது நுண்ணறிவு போலீசார் சுமார் 400 கிலோ எடை கொண்ட கருங்காலி மரத்தைப் பறிமுதல் செய்து கடத்தலுக்குப் பயன்படுத்திய ஆட்டோ மற்றும் ஐந்து பேரையும் கைது செய்து போடி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக போடி வனத்துறை அதிகாரிகள் வெட்டி கடத்திவரப்பட்ட மரங்கள் எங்கிருந்து கடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை செய்து வரும் நிலையில் குற்றம் சாட்டப் பட்ட ஐந்து நபர்களை ரகசிய இடத்தில் விசாரணைக்காக வைத்துள்ளனர்.

அதே சமயம் தொடர்ந்து தேனி மாவட்டத்தின் கஞ்சா அபி புகையிலை மது பாட்டில் கடத்திப்பட்டு வரும் நிலையில் தற்போது கருங்காலிக் கட்டை சந்தனக் கட்டை கடத்தல் கும்பல் அதிகரித்து வருகின்றது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துக் கடத்தல் கும்பலை ஒட்டுமொத்தமாகக் கைது செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இச்தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை!

Quick Share

வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதாவது சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 180 இடங்களில் கூடுதல் கண்காணிப்புகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே சமயம் அதிக கனமழை எச்சரிக்கை காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15.10.2024) விடுமுறை அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

அதோடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டது. மேலும் சென்னையில் நாளை நடைபெற இருந்த பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வும் ஒத்திவைக்கப்பட்டன. அதாவது தாவரவியல், விலங்கியல், வேதியியல் மற்றும் இயற்பியல் துறை மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் மாற்றப்பட்டன. அதன்படி வரும் 21ஆம் தேதி இந்த கலந்தாய்வு நடைபெறும் எனக் கல்லூரிக் கல்வி ஆணையர் அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

அதன்படி சென்னை மடிப்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், திருவான்மியூர், அடையார், ஆவடி, அம்பத்தூர், நங்கநல்லூர், மீனம்பாக்கம், பள்ளிக்கரணை, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மேடவாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, வில்லிவாக்கம், அயனாவரம், ஐசிஎப், மைலாப்பூர், ஆழ்வார்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, காமராஜர் சாலை, வள்ளுவர் கோட்டம், வடபழனி, சைதாப்பேட்டை, தியாகராயநகர், மேற்கு மாம்பழம், கோடம்பாக்கம் தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

‘மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளம்’ – துணை முதல்வர் திறந்து வைத்...

Quick Share

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 114க்கு உட்பட்ட மெரினா கடற்கரையில் ரூ.1.37 கோடி மதிப்பில் மெரினா நீச்சல் குளம் புதுப்பிக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (08.10.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மெரினா நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்தல் மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான க்யூ.ஆர். கோடு (QR Code) கட்டண சேவையைத் தொடங்கி வைத்தார்.

மேலும் நீச்சல் குளத்தினை சுற்றி பார்வையிட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மெரினா நீச்சல் குளமானது, 1942ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது உருவாக்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை மாநகராட்சியிடம் இந்த நீச்சல் குளம் ஒப்படைக்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 77 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனியார் பராமரிப்பில் விடப்பட்ட இந்த நீச்சல் குளம் தற்போது ரூபாய் 1 கோடியே 37 இலட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியால் நேரடியாக பராமரித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தின் நடைபாதையை சீரமைத்து வர்ணம் பூசுதல், நடைபாதையில் புதிய கற்கள் மற்றும் ஓடுகள் பதித்தல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள், பார்வையாளர்கள் அமரும் இடத்தில் மேற்கூரை அமைத்தல், குளத்தைச் சுற்றியுள்ள சுவரில் வண்ண ஓவியம் வரைந்து அழகுபடுத்துதல், ஒப்பனை அறை, குளியலறை, உடைமாற்றும் அறைகளை பழுதுபார்த்து மேம்படுத்துதல், போதிய மின்விளக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நீச்சல் குளம் 100 மீட்டர் நீளமும். 30 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. குறைந்த அளவாக 3.5 அடியும். அதிக அளவாக 5 அடி உயரமும் உடையது. மேலும், இந்த நீச்சல் குளமானது காலை 05.30 மணி முதல் மாலை 07.30 மணி வரை செயல்படும். காலை 08.30 மணி முதல் 09.30 மணி வரை பெண்களுக்கான நேரமாகும். இந்த நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்தல் மற்றும் கட்டணம் செலுத்துவதற்காக க்யூ.ஆர். கோடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்தில் 1 மணி நேரத்திற்கு பெரியவர்களுக்கு ரூ. 50 எனவும். இதனை ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு சிறப்புச் சலுகையாக ரூ. 45 என நிரணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 வயது முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ரூ.30 எனவும், ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு சிறப்புச் சலுகையாக ரூ.25 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நீச்சல் குளமானது, பராமரிப்புப் பணி காரணமாக திங்கட்கிழமை அன்று வார விடுமுறை விடப்படுகிறது. இந்த நீச்சல் குளம் நாளை (09.10.2024) முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செயல்படும். இந்த நீச்சல் குளத்தில் 10 உயிர் பாதுகாவலர்கள், 8 தூய்மைப் பணியாளர்கள், 10 சுத்தம் செய்யும் பணியாளர்கள். 2 கண்காணிப்பாளர்கள், 6 பாதுகாவலர்கள், 2 எலக்ட்ரீஷியன் மற்றும் பிளம்பர் என மொத்தம் 38 பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றிட நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா. சுப்பிரமணியன், பி. கே. சேகர்பாபு, கோவி. செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் ஆர். பிரியா. மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, துணை மேயர் மு. மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ. குமரகுருபரன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பெரும் சோகம்..மகள் ஆசை பட்டதால் மெரினாவுக்கு அழைத்துச் சென்ற தந்தை மரணம்!

Quick Share

சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மகளை அழைத்துச் சென்ற தந்தை உயிரிழந்துள்ளார்.

தந்தை மரணம்

இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெயில் மற்றும் கூட்ட நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த 5 பேரில் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் தொழில் நுட்ப வல்லுநராக வேலை பார்த்து வந்த சீனிவாசனும் ஒருவர். இவருடைய மனைவி வனிதா. இவர்களுக்கு மகன் ஹேமந்த் (15), மகள் வர்ஷா (11) என்று இவர்கள் உள்ளனர். 

இந்நிலையில், இவருடைய மகள் வர்ஷா,மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்று ஆசை பட்டார். இதனால், வேலைக்கு விடுப்பு எடுத்து விட்டு மகளை அழைத்துக் கொண்டு மெரினாவுக்கு சென்றார்.

பின்னர், நிகழ்ச்சி முடிந்ததும் மகளுடன் பைக்கில் வீட்டுக்குத் திரும்பிய போது சேப்பாக்கம் எம்எல்ஏ ஹாஸ்டல் சாலை அருகே பைக்கில் இருந்து மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.

அப்போது அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று கூறினர். 

இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

உலக சாதனை படைத்த மெரினா சாகசம்!

Quick Share

இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியில், விமானப்படையில் உள்ள பல்வேறு வகையான 72 விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டன. இந்த விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் விமான சாகசங்களை கண்டு களித்தனர். மெரினா சாலைகள், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 5 லட்சம் பேர் வரை இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சி, லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. உலகத்திலேயே அதிக பார்வையாளர்களுடன் நடைபெற்ற சாகச நிகழ்ச்சி என்று உலக சாதனை படைத்துள்ளது.

சென்னையில் பயங்கரம்.., பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த இளைஞர்

Quick Share

சென்னை துரைப்பாக்கத்தில் இன்று அதிகாலை பெண் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து அடைக்கப்பட்ட சூட்கேஸ் கிடைத்துள்ளது.

சூட்கேஸ் கண்டுபிடிப்பு

சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு அருகே துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. மேலும் அதில் இருந்து ரத்தம் வழிந்தோடியதால் அங்கிருந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சூட்கேஸை திறந்து பார்த்த போது அதில் பெண் ஒருவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி அடைக்கப்பட்டிருந்தது. 

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் பெண்ணின் உடலைக் கைப்பற்றி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்றும், கொலை செய்தது யார் என்றும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, சென்னை மாதவரத்தை சேர்ந்த 32 வயதான தீபா என்ற பெண்ணை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக காணாமல் போனதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியில் வசித்து வரும் மணி என்ற இளைஞர் சூட்கேஸை வீசி சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து, போலீசார் மணியின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

‘விநாயகர் சிலைகள் அமைதியான முறையில் கரைக்கப்பட்டன’ – சென்னை காவல்துறை!

Quick Share

சென்னையில் விநாயகர் சிலைகள் அமைதியான முறையில் கரைக்கப்பட்டதாகச் சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் சென்னை மாநகர காவல் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த 07.09.2024 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், காவல்துறை அனுமதி பெற்று, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்களில் 1,524 விநாயகர் சிலைகளை நிறுவி உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடித்து வழிபாடு செய்து வந்தனர்.

இவ்வாறு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று (15.09.2024) காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் வாகனங்களில் ஏற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்று பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய இடங்களில் கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

அதன்படி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில் விநாயகர் சிலை ஊர்வல பாதைகள் மற்றும் சிலை கரைக்கும் இடங்களில், சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்து, சிறப்புப்பிரிவு, ஆயுதப்படை, ஆயுதப்படையின் அதிவிரைவுப் படை என 16 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் 2 ஆயிரம் ஊர்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிபாடு செய்த 1, 524 விநாயகர் சிலைகளில் 1, 277 விநாயகர் சிலைகளும், தாம்பரம் காவல் ஆணையரகத்திற்குட்பட்ட இடங்களில் வழிபாடு செய்த 591 விநாயகர் சிலைகளில் 405 விநாயகர் சிலைகளும். ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட இடங்களில் வழிபாடு செய்த 366 விநாயகர் சிலைகளில் 196 விநாயகர் சிலைகள் உட்பட மொத்தம் 1, 878 விநாயகர் சிலைகள் இன்று (15.09.2024) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நீலாங்கரை, பல்கலைநகர் காசிமேடு, மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர், பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய இடங்களில் கடலில் அமைதியான முறையில் கரைக்கப்பட்டது.

இன்று (15.09.2024) சிறப்பாகப் பாதுகாப்புப் பணிகள் மேற்கொண்டு அமைதியான முறையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் ஊர்காவல் படையினரை வெகுவாக பாராட்டினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக சென்னை பாலவாக்கம் கடற்கரையில் லாரியில் இருந்த விநாயகர் சிலையை கிரேன் மூலம் தூக்கியபோது கீழே விழுந்து சேதமடைந்தது. அதிக எடைகொண்ட விநாயகர் சிலை கீழே விழுந்து சேதமடைந்ததால் அங்கிருந்தவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதே சமயம் விநாயகர் சிலை கீழே இறக்கப்படும் போது காவல்துறையினர் அவசரப்படுத்தியதால் தான் கீழே விழுந்து உடைந்ததாகக் குற்றச்சாட்டையும் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

மகாவிஷ்ணுவுக்கு போலீஸ் காவல் விதிப்பு!

Quick Share

சென்னையில் உள்ள இரு அரசுப் பள்ளிகளில் அண்மையில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த சொற்பொழிவை நடத்திய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். மாற்றுத்திறனாளிகளை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கடந்த 7ஆம் தேதி (07.09.2024) போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட மகாவிஷ்ணு இன்று (11.09.2024) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஏற்கனவே மகாவிஷ்ணுவின் தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன், மகாவிஷ்ணுக்கு முன் ஜாமீன் கோரி மனு அளித்த நிலையில் தற்போது ஜாமீன் மனு மீதான விசாரணையும், போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதற்கான அனுமதி கோரியுள்ள மனு மீதான விசாரணையும் விசாரணைக்கு வர இருந்தது. 

இதனையடுத்து இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்றம் தெரிவித்த நிலையில், புழல் மத்தியச் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட மகாவிஷ்ணு சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்ற நான்காவது அமர்வு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் தான் கொடுத்த ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்த மகாவிஷ்ணு, போலீஸ் தரப்பு கேட்ட கஸ்டடி மனுவில் எனக்கு எந்த ஆட்சியப்பனையும் இல்லை. போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன் எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில் மகாவிஷ்ணுவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்து நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை…அதிர்ச்சி தரும் ஒரு கிராம் தங்கத்தின் விலை!

Quick Share

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ரூ.6,710-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை இன்று மாற்றம் ஏதும் இன்றி ஒரு கிராம் ரூ.92-க்கும், ஒரு கிலோ ரூ.92,000-க்கும் விற்கப்படுகிறது. சில நாட்களாக தங்கம் விலை குறைந்து ஆறுதல் அளித்த நிலையில், மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது.

“வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…” – சென்னை போக்குவரத்து போலீசார் முக்கிய அறிவிப்பு!

Quick Share

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் அவரது உருவம் பொறித்த நூறு ரூபாய் நினைவு நாணயத்தை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளித்திருந்தது. இத்தகைய சூழலில் சென்னையில் இன்று (18.08.2024 கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார்.

இந்நிலையில் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், வாலாஜா சாலை, அண்ணாசாலை மற்றும் கலைவானர் அரங்கம் விழா நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படும். இதனால் பொதுமக்கள் தங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு பயணத்தினை திட்டமிட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மற்ற மூத்த கலைஞர்கள் கதீட்ரல் சாலை, ஆர்.கே.சாலை, காமராஜர் சாலை, அண்ணாசாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக கலைவானர் அரங்கம் விழா நடைபெறும் இடத்தை அடையலாம்.

கலைவானர் அரங்கம், கலைஞர் நினைவிடம், வாலாஜா சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் மாற்று வழியைத் தேர்வு செய்துசெல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பல்வேறு மாவட்ட கனரக வாகனங்களில் இருந்து (பேருந்துகள் மற்றும் மாக்சிகேப்) பிற கட்சி வாகனங்கள் அண்ணா சிலை வழியாகப் பெரியார் சிலை, தீவுத்திடல் மைதானம், பொதுப்பணித்துறை (PWD) மைதானம் வழியாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தை நோக்கிச் செல்லுமாறு அனுமதிக்கப்படுவார்கள்.

பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாவை, எம்எல்ஏ விடுதி சாலை, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் அனைத்து இலகுரக வாகனம் மற்றும் தன்னார்வலர்களின் மோட்டார் வாகனங்களும் அனுமதிக்கப்படும். வாலாஜா சாலை. காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, போர் நினைவுச் சின்னம், கொடிப் பணியாளர் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கியமான பகுதிகளில் வணிக வாகனங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தைப் பொதுமக்களுக்கு இடையூறாகவும் மற்றும் விவிஐபிகள் வரும் வழித்தடத்திலும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.

தொண்டர்கள் மற்றும் கட்சியினர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் காமராஜர் சாலை மற்றும் வாலாஜாசாலை முழுவதும் தற்காலிகமாக வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




You cannot copy content of this Website