கருப்புப்பட்டையுடன் கோசம்.., ஜல்லிக்கட்டில் பரபரப்பு
தமிழகத்தின் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி. காலை 8 மணிக்குத் துவங்கிய இந்த போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், 420 வீரர்கள் அவற்றை அடக்கப் பாய்ந்தனர். காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஜல்லிக்கட்டின்போது திடீரென இரண்டு மாடுபிடி வீரர்கள் கையில் கருப்புப்பட்டை அணிந்து, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் போலீசார் உடனடியாக அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி வெளியேற்றினர். இதனால் சிறிது நேரம் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டில் எழுந்த குரல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி மற்றும் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்வில் சிறப்பு பார்வையாளர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.