கால்லூரி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி இளைஞன் செய்து வந்த மோசமான செயல்!
தமிழகத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டி வந்த நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியின் தந்தை ஒருவர், அடையாறு பொலிஸ் துணை கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், கல்லூரியில் படிக்கும் எனது மகளிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
அதன் பின் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், குறித்த இளைஞன் என் மகளை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளான்.
இதை நம்பிய என் மகள் அவன் மீது கொண்ட காதலால், நிர்வாண புகைப்படத்தை அனுப்பியுள்ளார். இந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு, அவன் இப்போது என் மகளை மிரட்டி வருகிறான்.
மேலும் சில பெண்களின் எண்களை வாங்கியுள்ளான். கடந்த சில வாரங்களாக மகளுடன் படிக்கும் தோழிகளின் செல்போன் எண்களுக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியுள்ளான்
அடிக்கடி எனது மகளின் நிர்வாணப் படத்தை சமூகவலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், விசாரணை மேற்கொண்ட போது, அந்த நபர் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த அருண் கிறிஸ்டோபர் (25) என்பது தெரியவந்தது.
நேற்று முன்தினம் அவரை கைது செய்த பொலிசார், விசாரணை மேற்கொண்ட போது, அவர் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பொறியியல் பட்டதாரி என்பதும், தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
பொலிசார் அவரிடம் இருந்து, 2 செல்போன்கள், லேப்டாப், கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவற்றை பரிசோதித்தனர். அப்போது, ஈஸி வால்ட், கிளவுட் ஆகிய ஆப்களில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகளின் புகைப்படங்கள், ஆபாச வீடியோக்களை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக, பொலிஸ் துணை கமிஷனர் விக்ரம் கூறுகையில், கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் முன்பின் தெரியாதவர்களிடம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளம் மூலம் பழக வேண்டாம்.
தங்களுடைய புகைப்படங்களை எந்த காரணத்துக்காகவும் பகிர கூடாது. யாராவது போட்டோக்களை பகிர சொல்லி மிரட்டினால் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் படி கூறியுள்ளார்.