சென்னை அரும்பாக்கம், மூலக்கடை, மாதவரம், கொடுங்கையூர், நொளம்பூர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு, வரும் ஜூன் முதல், குழாய் வாயிலாக, இயற்கை எரிவாயு வினியோகம் செய்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. பொதுத் துறையை சேர்ந்த ‘இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்’ ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு எல்.பி.ஜி., எனப்படும் திரவ நிலை எரிவாயு சிலிண்டரை வினியோகம் செய்கின்றன.எளிதில் தீப்பற்றாது இந்த காஸ், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின்போது வெளியேறும் மூலப்பொருளில் தயாரிக்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதியால் செலவினம் அதிகரிப்பதுடன், சுற்றுச்சூழலும் மாசு அடைகிறது.மத்திய அரசு, எல்.பி.ஜி., எரிவாயுக்கு மாற்றாக, இயற்கை எரிவாயு பயன்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளது. தரையில் இருந்து பல கி.மீ., ஆழத்தில் இருந்து எடுக்கப்படும் இந்த எரிவாயு, காற்றை விட எடை குறைவானது.குழாயில் எடுத்து செல்லப்படும்போது எதிர்பாராத விதமாக கசிவு ஏற்பட்டாலும், உடனே காற்றில் கலந்து விடும்; எளிதில் தீப்பற்றாது; சுற்றுச்சூழலையும் பாதிப்பதில்லை.
கர்நாடகா, குஜராத், புதுடில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இயற்கை எரிவாயு, சி.ஜி.டி., எனப்படும் நகர வினியோக நிறுவனங்களால் வீடுகளுக்கு குழாய் வாயிலாக வழங்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எண்ணுாரில், இந்தியன் ஆயில் நிறுவனம், எல்.என்.ஜி., எனப்படும் திரவ நிலை இயற்கை எரிவாயு முனையம் அமைத்துள்ளது.அந்த முனையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து, கப்பல்களில் திரவ நிலை இயற்கை எரிவாயு எடுத்து வரப்படுகிறது.இந்த எரிவாயு, வாகனங்களுக்கு சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு என்ற பெயரிலும், வீடுகளுக்கு பி.என்.ஜி., என்ற பெயரில் குழாய் வாயிலாகவும் வினியோகம் செய்யப்பட உள்ளது.
எண்ணுாரில் இருந்து துாத்துக்குடி வரை எரிவாயு எடுத்து செல்ல குழாய் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் குழாய் வழித்தடத்தில் எரிவாயு வினியோகம் செய்ய, ஏழு நிறுவனங்களுக்கு, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி சென்னை, திருவள்ளூரில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணியை, ‘டோரன்ட் காஸ்’ என்ற தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது.
இந்நிறுவனம், எட்டு ஆண்டுகளில் வாகனங்களுக்கு வினியோகம் செய்ய, 222 சி.என்.ஜி., ஸ்டேஷன்கள் அமைப்பதுடன், 33 லட்சம் வீடுகளுக்கு எரிவாயு வினியோகம் செய்ய உள்ளது.இதற்காக எரிவாயு எடுத்து வர, எண்ணுார், கொசஸ்தலை ஏரி, வீச்சூர், புழல், அம்பத்துார், அசோக் நகர், சைதாப்பேட்டை இடையில், 12, 18 அங்குலம் இரும்பு குழாய் தரையில் 5 அடிக்கு கீழ் பதிக்கப்பட்டு வருகிறது.டோரன்ட் நிறுவனம், தமிழகத்தில் முதல்முறையாக நாகையில் உள்ள சாத்தமங்கை, திருமருகள் கிராமங்களில் 200 வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் எரிவாயு வினியோகம் செய்கிறது.40 ஆயிரம் வீடுசென்னையில் 55 பெட்ரோல் பங்க்குகளில் சி.என்.ஜி., முனையம் செயல்படுகிறது.
அங்கு வாகனங்களுக்கு சி.என்.ஜி., எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது.வரும் ஜூன் மாதம் சென்னையில் அரும்பாக்கம், மாதவரம், மூலக்கடை, கொடுங்கையூர், அருள் நகர், அலெக்ஸ் நகர், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு, குழாயில் எரிவாயு வினியோகம் செய்யப்பட உள்ளது.அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள், சென்னையில் 40 ஆயிரம் வீடுகளுக்கு எரிவாயு வினியோக திட்டமிடப்பட்டு உள்ளது.
செலவு குறைவு இதன் செலவு 14.20 கிலோ எல்.பி.ஜி., சிலிண்டர் விலையுடன் ஒப்பிடும்போது, 200 ரூபாய் குறையும்.வீடுகளுக்கு குழாய் வாயிலாக தொடர்ந்து காஸ் வினியோகம் செய்யப்படுவதால், ஒவ்வொரு முறையும் முன்பதிவு செய்து, காத்திருக்க வேண்டியதில்லை. பயன்பாட்டு அளவை கணக்கெடுக்க ‘மீட்டர்’ பொருத்தப்படும்.வாடிக்கையாளரிடம் இருந்து ‘டிபாசிட்’ கட்டணமாக 6,000 ரூபாயும், எரிவாயு முன்பணமாக 500 ரூபாயும், இணைப்பு கட்டணமாக 590 ரூபாயும் வசூலிக்கப்படும். அதில், 6,500 ரூபாய், வாடிக்கையாளர் திரும்ப பெறக் கூடியது.
நடவடிக்கை பாயுமா? நாகை மாவட்டம், திட்டச்சேரி பகுதியில், 900 வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் எரிவாயு வினியோகம் செய்வதற்கான கட்டமைப்பு பணிகள் முடிவடைந்து, தயார் நிலையில் உள்ளன.அங்குள்ள எல்.பி.ஜி., காஸ் ஏஜன்சிகள், வாடிக்கையாளர்களை இழக்கக் கூடாது என்பதற்காக, குழாய் வழித்தட எரிவாயு வினியோகம் தொடர்பாக, மக்களிடம் பீதியை கிளப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன.இதேபோல், மற்ற பகுதிகளிலும் நடப்பதாக கூறப்படுகிறது. எனவே, மக்களிடம் வீண் வதந்தி பரப்புவோர் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.