இந்தியா

அம்பானி வீட்டில் பிரமாண்டமாக நிகழ்ந்த விநாயக சதுர்த்தி – தங்க புடவையில் ஜொலித்த ப...

Quick Share

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் வீட்டில் கொண்டாடப்பட்ட விநாயக சதுர்த்தியின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிதா, அவர்களது குழந்தைகள் இஷா மற்றும் ஆனந்த் மற்றும் கோகிலாபென் ஆகியோர் தலைமையில் அம்பானி குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி விநாயக சதுர்த்தியை கொண்டாடினர். 

ஒவ்வொரு முறையும் போல இந்த ஆண்டும் விழா வித்தியாசமாகவே கொண்டாடப்பட்டுள்ளது. காரணம், இது ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணமான முதல் கணேஷ் சதுர்த்தி ஆகும்.

இந்த கொண்டாட்டத்தில், அம்பானி குடும்பத்தின் இளைய மருமகள் ராதிகா மற்றும் மகன் ஆனந்த் வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டனர்.

ஆண்டிலியாவின் பிரமாண்டமான லாபி மலர் அலங்காரங்கள் மற்றும் அழகான விநாயகப் பெருமானின் சிலையால் நிரம்பியது.  

காலை 11:30 மணிக்கு பூசாரிகள் பூஜை நடத்தி, அதைத்தொடர்ந்து மனமார்ந்த ஆரத்தியுடன் சடங்குகள் தொடங்கியது.

ஆனந்த் அம்பானி 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ எடையுள்ள தங்க கிரீடத்தை லால்பாக்சா ராஜாவுக்கு வழங்கினார்.  

குடும்பத்தின் பக்தி மற்றும் செழுமையை வெளிப்படுத்தும் வகையில், கிரீடத்தை முடிக்க கைவினைஞர்களுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன.

மேலும் இந்த விழாவில் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

ராதிகா மற்றும் நீதா அம்பானியின் புடவை

நீதா அம்பானியின் புடவை தோற்றம்

நிதா அம்பானியின் புடவை தோற்றம் ஒவ்வொரு விழாவிலும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் அவர் ஒரு ஊதா நிற புடவையை அணிந்திருந்தார். 

அதில் உள்ள சிறப்பு என்னவென்றால், அதன் கை மற்றும் பின்புற வடிவமைப்பில், விநாயகப் பெருமானின் புகைப்படம் ஒரு வட்ட சட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் புடவை வித்தியாசமாகவும், சிறப்பானதாகவும் இருக்கும்.

இந்த புடவையுடன் அவர் முத்து வடிவமைப்பு கொண்ட நீண்ட நெக்லஸ் அணிந்துள்ளார்.

ராதிகாவின் புடவை தோற்றம்

இந்த ஆண்டு அம்பானி குடும்பத்தின் இளைய மருமகளின் தோற்றத்தைப் பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.  

திருமணத்திற்கு பிறகு அவர்கள் கொண்டாடும் முதல் பண்டிகை இது. அத்தகைய சூழ்நிலையில், சிறப்பு தோற்றமளிப்பது அவசியம்.

இந்த பூஜைக்காக, சர்தோசி வேலைப்பாடு எம்பிராய்டரியுடன் கூடிய பட்டுப் புடவை அணிந்திருந்தார்.

அதன் விளிம்பில் தங்க வேலை செய்யப்பட்டுள்ளது. இந்தப் புடவைக்கு பொருத்தமான தங்க ரவிக்கையும் அணிந்திருந்தார்.

தலைகுனிந்து சிவாஜியிடம் மன்னிப்பு கேட்கிறேன்: சிலை இடிந்ததற்கு மோடி வேதனை!

Quick Share

சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கோரியுள்ளார். இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டில் திறந்து வைத்தார். இந்த சிலையின் உயரம் 35 அடியாகும். சிந்துதுர்க்கில் கனமழை பெய்தும், சூறாவளி காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில், மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி முழுமையாக உடைந்து கீழே விழுந்தது. இதில், தலை, கை, கால் என அனைத்து பாகங்களும் விழுந்து சிதறின.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “பாஜகவின் ஆட்சியின் ஊழல் மிகப்பெரிய உச்சத்தில் உள்ளது. மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்தது. பாஜகவின் ஊழலில் பெரிய மனிதர்களின் சிலைகள் கூட தப்பவில்லை” என்று பதிவிட்டது.

இந்நிலையில், சிலை இடிந்து விழுந்தது தொடர்பாக தலை குனிந்து சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று மராட்டியத்தில் நடந்த அரசு விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

மேலும், “இடிபாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்திய தாயின் மகனான சிவாஜியை அவமதிக்கும் கூட்டம் நாங்கள் அல்ல. காற்று, மழையால் சிலை சேதமடைந்ததற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.

ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா தேர்வு!

Quick Share

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக 2வது முறையாக தற்போது பதவி வகித்து வரும் கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இத்தகைய சூழலில் தான் கடந்த 20ஆம் தேதி தற்போதைய ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே மூன்றாவது முறையாக ஐசிசி தலைவராக பதவியேற்க மாட்டார் என்றும், நவம்பரில் அவரது பதவிக்காலம் முடிவடையும் போது பதவி விலகுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இளம் வயதில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெருமையை ஜெய் ஷா பெற்றுள்ளார். பிசிசிஐயின் கவுரவச் செயலாளராக தற்போது பதவி வகித்து வரும் ஜெய் ஷா, ஐசிசியின் தலைவராக டிசம்பர் 1ஆம் (01.12.2024) பதவி ஏற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் ஐசிசியின் தலைவராகும் 3வது இந்தியர் ஜெய்ஷா ஆவார். ஏற்கனவே ஜக்மோகன் டால்மியா மற்றும் சரத்பவார் ஆகியோர் ஐசிசி தலைவராக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெய் ஷா இது குறித்துத் தெரிவிக்கையில், “ஐசிசிஉறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவேன். கிரிக்கெட்டை உலகமயமாக்க உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

Quick Share

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த 9ஆம் தேதி (09.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், கொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.

இதன் காரணமாக அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அந்தவகையில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதனிடையே கொல்கத்தா உயர்நீதிமன்றம் கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது. 

இந்த சூழலில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பெண் மருத்துவர் கொலைத் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றம், “எங்களுக்கும் மருத்துவர்கள் மீது நலனும் அக்கறையும் உள்ளது. எனவே இச்சூழலை அரசியலாக்க வேண்டாம். சட்டம் தன் கடமையைச் செய்யும். அதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். 

அமைதியான முறையில் போராடிய மருத்துவர்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அனைத்து மருத்துவமனை நிர்வாகத்துக்கும் உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவின்படி பணிக்குத் திரும்பும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து மாநில அரசு தலைமைச் செயலாளர்கள், காவல்துறை டிஜிபிக்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட வேண்டும்.

இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் மருத்துவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டு பணிக்குத் திரும்புவதாக மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பயிற்சி மருத்துவர் கொடூர முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற உறவினர்கள்-200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி..

Quick Share

இந்தியாவின் லடாக் பகுதியில் 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். லடாக்கின் லே மாவட்டத்தில் பேருந்து ஒன்று 27 பயணிகளுடன் சென்றது. அதில் பயணித்தவர்கள் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள அழைத்துச் செல்லப்பட்டனர். துர்புக் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது.

அப்போது அங்கு பணியில் இருந்த இந்திய ராணுவத்தினர் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

ராணுவ ஹெலிகாப்டர்கள், 14 விமானங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு, முதலில் டாங்ஸ்டேயில் உள்ள ராணுவ வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், 17 பெண்கள் மற்றும் 3 பிள்ளைகள் என உட்பட 21 பேர் காயமடைந்ததாகவும் இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

10 -ம் வகுப்பு விடுமுறை நாளில் திடீரென தோன்றிய ஐடியா.., தற்போது கோடியில் சம்பாதிக்கும் ...

Quick Share

10 -ம் வகுப்பு விடுமுறை நாளில் தோன்றிய யோசனையால் தற்போது இளம்பெண் ஒருவர் கோடிகளில் சம்பாதித்து வருகிறார். 

யார் அவர்?

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, அகமது நகரை சேர்ந்த சிறுமி ஸ்ரத்தா தவான். இவருடைய தந்தை எருமை மாடுகளை வாங்கி விற்பனை செய்து வருபவர் ஆவார். இவருக்கு சொந்தமாக விவசாய நிலமும் உள்ளது. மேலும், இவரது வீட்டில் எருமை மாடுகளும் உள்ளன. 

10 -ம் வகுப்பு விடுமுறை காலத்தில் சிறுமி ஸ்ரத்தா தவான் இருந்தபோது, தனது தந்தைக்கு எப்படி உதவலாம் என்று நினைத்தார்.

அப்போது, எருமை மாடுகளை எப்படி வாங்குவது, விலையை எப்படி நிர்ணயம் செய்வது என்ற தொழில் யுக்தியை கற்றுக் கொண்டார். 

அந்த நேரத்தில் தான் அவருக்கு நாம் ஏன் பால் விற்பனை செய்யக்கூடாது என்று சிந்தித்துள்ளார். பின்னர் அவர், பள்ளிப்படிப்பை தொடர்ந்து கொண்டே பால் விற்பனையும் செய்தார். அப்படியே கல்லூரி படிப்பையும் முடித்தார்.

இதற்காக அவர் காலையில் 4 மணிக்கு எழுந்து பால் கறந்து அதனை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு கல்லூரிக்கு செல்வார். பின்னர், மாலையில் மாடுகளை பராமரித்துக் கொள்வார். 

கோடியில் வருமானம்

2013 -ம் ஆண்டில் தொழில் தொடங்கிய ஸ்ரத்தா 2017 -ம் ஆண்டில் ஸ்ரத்தா ஃபார்ம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அப்போது அவரிடம் 30 எருமை மாடுகள் மட்டுமே இருந்தன.

மேலும், உள்ளூர் வேலையாட்களை வைத்து தொழில் செய்தார். பால் மட்டுமன்றி நெய், மோர், லஸ்ஸி, தயிர், பன்னீர் ஆகியவற்றையும் விற்பனை செய்தார்.

தற்போது, இவருக்கு 130 எருமை மாடுகள் உள்ளன. குறிப்பாக, இவர்கள் தயாரிக்கும் நெய் இயற்கை முறையில் இருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. மாட்டுச்சாணம் ஆகியவற்றை பயன்படுத்தி மின்சாரமும் தயாரித்து வருகின்றனர். 

2024 -ம் நிதி ஆண்டில் இவரின் நிறுவனம் 1 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. பால் சம்மந்தப்பட்ட தொழில் பயிற்சியை 5000 பேருக்கு வழங்கியுள்ளார்.     

தேசத்தை உலுக்கிய பெண் மருத்துவர்..நீதி கிடைக்குமா இன்று?

Quick Share

ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட (ஆக. 9) கொடூரச் சம்பவம் தேசத்தையே உலுக்கியிருக்கிறது. இதில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் காவல்துறையுடன் இணைந்து செயல்படும் தன்னார்வலர் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி.

இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு பயின்றுவந்த பெண் மருத்துவர் (வயது 28) ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். மருத்துவமனையில் அமைந்திருக்கும் கருத்தரங்கக் கூடத்தில் அதிகாலை 3 மணியளவில் அவர் உறங்கச் சென்றார். மறுநாள் காலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

அவரின் பிறப்பு உறுப்பு, வயிறு, வலது தொடை, கழுத்து, வலது கை, உதடு ஆகிய இடங்களில் காயங்கள் இருந்தன. கழுத்து எலும்பு முறிந்திருக்கிறது. இந்தக் கொடூரத்தைக் கண்டு ஆவேசமடைந்த சக மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும், செவிலியர்களும் போராட்டத்தில் இறங்கினர். ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கிய போராட்டம், மேற்குவங்கம் முழுவதும் பரவியது. அதனால், மேற்குவங்கத்தில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு இழைக்கப்பட்ட அந்தக் கொடுமைக்கு எதிராக டெல்லி உள்பட பல இடங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். டெல்லியில் மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, ஆர்.எம்.எல் மருத்துவமனை, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி, வி.எம்.எம்.சி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை, தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனை, டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி, தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சூழலில்தான், கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தை முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார். அப்போது, மருத்துவரின் குடும்பம் விரும்பினால், இந்த கொலை வழக்கின் விசாரணையை மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைப்பதற்கு தயாராக இருப்பதாக அவர் கூறினார். மேலும், ‘ஆகஸ்ட்18-ம் தேதிக்குள் மாநில போலீஸார் இந்த வழக்கு விசாரணையை முடிக்கத் தவறினால், சி.பி.ஐ-யிடம் வழக்கு ஒப்படைக்கப்படும்’ என்றும் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, பெண் மருத்துவர் கொலை தொடர்பாக அவருடன் பணியாற்றிய சக ஜூனியர் மருத்துவர்கள் நான்கு பேர் போலீஸ் விசாரணைக்கு ஆளாகியிருக்கிறார்கள். அந்த நால்வரும்,
கொலை சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு கொலை செய்யப்பட்ட அந்த பெண் மருத்துவருடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிட்டவர்கள். நான்கு மருத்துவர்களும் அங்கிருந்து சென்ற பிறகு, அந்த பெண் மருத்துவர் மட்டும் கருத்தரங்கு கூடத்தில் தூங்கியிருக்கிறார். அப்போது, அதிகாலை நான்கு மணியளவில் முக்கியக் குற்றவாளி என்று தற்போது சந்தேகிக்கப்படும் சஞ்சய் ராய், உள்ளே நுழைந்து பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் என்று போலீஸ் தரப்பு கூறுகிறது.

மேலும், ‘பெண் மருத்துவரின் கழுத்து நெரித்து, அந்த நபர் கொலை செய்திருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஏழு மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். 60 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது’ என்றும் போலீஸார் கூறுகிறார்கள். மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு உடனடியாக மத்திய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக, ஜி.ஆர்.கர் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அந்த மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். முதல்வர் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிலையில், ‘பெண் மருத்துவர் கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்களை சந்தீப் கோஷ் அழித்துவிட்டார். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று போராடிவரும் மருத்துவர்கள் வலியுறுத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் கொலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Quick Share

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 20) நடக்கிறது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவம் குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க உச்ச நீதிமன்ற உத்தரவுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் கல்வி கட்டணம் உயர என்ன காரணம்? – பிரபல தொழிலதிபர் கூறும் விளக்கம்!

Quick Share

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் கல்வி கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் பெரிய விவாதமே நடந்து கொண்டு வருகிறது. ஐதராபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படிப்பதற்கான கல்வி கட்டணம் ரூ.2.3 லட்சத்தில் இருந்து ரூ.3.7 லட்சமாக அதிகரித்துள்ளது என்று பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் அவிரால் பாட் என்பவர் தந்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

மேலும் அவர் தனது பதிவில், “கடந்த 30 ஆண்டுகளில் பள்ளிக் கட்டணம் 9 மடங்கும், கல்லூரிக் கட்டணம் 20 மடங்கும் அதிகரித்துள்ளது.

நாம் வீட்டு விலையில் கவனம் செலுத்தும் போது, ​​உண்மையான பணவீக்கம் கல்வியில் ஏற்பட்டுள்ளது. கல்வி என்பது மலிவு விலையில் இல்லை” என்று கூறியுள்ளார்.

இவரின் கருத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், சோஹோ Zoho நிறுவனதின் சிஇஓ -ஆன ஸ்ரீதர் வேம்பு பதில் அளித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், ” நகர்ப்புற ரியல் எஸ்டேட் மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதால் கல்வி கட்டுபடியாகாத அளவு ஆகிவிட்டது. இதனால், கல்வி கட்டணமும் உயர்ந்துள்ளது.

இது கல்வி, சுகாதாரம், வீடு மற்றும் சில்லறை வணிகத்தையும் பாதிக்கிறது. அரசியலில் இருந்து ஏராளமான ஊழல் பணம் ரியல் எஸ்டேட்டில் குவிக்கப்படுகிறது.

இதுவே பணவீக்கத்தை அதிகரித்து மார்க்கெட் விலையை எகிறச்செய்துள்ளது. ஒருவகையில் நாம் அனைவரும் ஊழலுக்கு பணம் செலுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஏழைகளை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்!!7 ரூபாய் கட்டினால் போதுமே.. வாழ்நாள் பூராவுமே ரூ.60,...

Quick Share

 தினந்தோறும் வெறும் 7 ரூபாய் எடுத்து வைத்தாலே, உங்களுடைய 60 வயதில் கோடீஸ்வரராக மாறிவிடலாம்.. எப்படி தெரியுமா? இந்த திட்டத்தின் பலன் என்ன? இந்த திட்டத்திற்காக மத்திய அரசு தரும் சலுகைகள் என்னென்ன தெரியுமா?

மத்திய அரசால் கூலித்தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்களுக்கான, உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதிய திட்டம்தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம்.. இது 2015-16ம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்டது..

இதுவரை 7 கோடிக்கும் அதிகமான நபர்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளார்கள்.. இந்த திட்டமானது, வயதானவர்களுக்கு, பொருளாதார பாதுகாப்பை வழங்கக்கூடிய உத்தரவாதமான திட்டமாகும். 7 ரூபாய்: அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரையிலான நபர்கள் முதலீடு செய்யலாம். நீங்கள் 18 வயதாகும்போது குறைந்தபட்சம் மாதம் ரூ.210 முதலீடு செய்யலாம்… தினமும் வெறும் 7 ரூபாய் சேமித்து வந்தாலே, அதாவது மாதம் ரூ210 சேமித்து வந்தாலே, 60 வயதாகும்போது ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் வரை ஓய்வூதியமாக நீங்கள் பெற முடியும்.. எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும் என்பதை பொறுத்து பென்சன் தொகை அதிகமாக இருக்கும். மாதம் 5 ஆயிரம் ரூபாயை ஓய்வூதியமாக பெற வேண்டுமானால், 18 வயதிலிருந்து ஒவ்வொரு மாதமும் நீங்கள் ரூ.210 செலுத்த வேண்டும். இதே தொகையை 3 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தினால், 626 ரூபாயும், 6 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தினால், 1,239 ரூபாயும் செலுத்த வேண்டும். மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் பெற விரும்பினால், 18 வயதிலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.42 செலுத்த வேண்டும்.

நாமினிகள்: சந்தாதாரர் திடீரென இறக்க நேர்ந்துவிட்டால் அவரின் வாழ்க்கை துணைக்கு அந்த பென்ஷன் வழங்கப்படும்… ஒருவேளை 2 பேருமே இறந்துவிட்டால், அந்த பென்ஷன் தொகை சந்தாதாரரின் நாமினிக்கு வழங்கப்படும்.. 60 வயதிற்கு முன்பாகவே சந்தாதாரரால் இந்த திட்டத்திலிருந்து வெளியேற முடியாது. எனினும் ஒருசில விதிவிலக்குகள் உண்டு.. அதிக தொகையை கட்டி பென்ஷனை அதிகரித்துக்கொள்ளும் வசதியும் இந்த திட்டத்தில் இருக்கிறது. வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபிட் வசதி மூலம் சந்தா செலுத்தும் வசதியும் உள்ளது. வருமான வரி செலுத்தாத இந்திய குடிமகன் அனைவருமே இந்த சமூக பாதுகாப்பு நல திட்டத்தில் சேர்ந்து பயன் பெற இயலும். பெஸ்ட் சாய்ஸ்: பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தபால் அலுவலகங்களில் அடல் பென்ஷன் திட்டத்தை நீங்கள் ஆரம்பிக்கலாம். ஆன்லைன் மூலமும் நீங்கள் கணக்கை துவங்கலாம். இதற்கு வங்கிக்கணக்கு, ஆதார் கார்டு போன்றவை ஆவணமாக வழங்க வேண்டும். மொத்தத்தில், அமைப்புசாரா துறையுடன் தொடர்புடையவர் மற்றும் வேறு எந்த ஓய்வூதிய திட்டத்திலும் முதலீடு செய்யாதவர்களுக்கு இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டமானது பெஸ்ட் சாய்ஸாக இருக்கும்.

இந்தியாவில் ரூ.7,035 கோடி முதலீடு செய்துள்ள கனேடிய நிதி நிறுவனம்!

Quick Share

கனேடிய நிதி நிறுவனமொன்று இந்தியாவில் முதல் காலாண்டில் ரூ. 7,035 கோடி முதலீடு செய்துள்ளது. 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், கனடாவின் முக்கிய நிதி நிறுவனமான கனடா ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியம் (CPPIB), கனடா ஓய்வூதிய திட்டத்தில் (CPP) இருந்து 838 மில்லியன் டொலர் (ரூ. 7,035 கோடி) மதிப்புள்ள பணத்தை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது.

இந்த முதலீடு முக்கியமாக கட்டமைப்பு (infrastructure), தொழில்நுட்பம், உற்பத்தி (manufacturing), மற்றும் நுகர்வோர் உற்பத்திகள் (consumer goods) போன்ற துறைகளில் மையமாகியுள்ளது.

குறிப்பாக, நீண்டகால வளர்ச்சியுடன் கூடிய திட்டங்களில் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா என்பது வளர்ச்சியடைந்த பொருளாதாரமாக மாறுவதற்கு நிறைய சாத்தியங்கள் உள்ள நாடாக கருதப்படுகிறது.

அதனால், கனடா நிறுவனம் இந்திய சந்தையில் தங்கள் இடத்தை பலப்படுத்துவதற்காக இந்த முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மத்திய அரசின் முதலீட்டு சீர்திருத்தக் கொள்கைகள், சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இந்தியா ஒரு ஈர்க்கக்கூடிய இடமாக மாறியுள்ளது. இதனை பிரதிபலிப்பதாகவே கனடா நிறுவனத்தின் இந்த முதலீடு பார்க்கப்படுகிறது.

கனடா நிதி நிறுவனம், அடுத்தடுத்து மேலும் பல துறைகளில் அதிகளவில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.

இந்த தகவல், இந்தியாவில் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளதை காண்பிக்கிறது, மேலும் இந்தியாவின் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்கிறது.

தமிழ்நாட்டிற்கு வெறும் 1000 ரூபாய் தான்: ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிய இந்திய அரசு!

Quick Share

தமிழ்நாட்டில் முக்கிய ரயில் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் ரயில்வே பிங்க் புத்தகம் மூலம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுபெற்ற பின் இன்றைய தினம் ரயில்வே திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான பிங்க் புத்தகம் வெளியாகியுள்ளது.

இதில் தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு அப்பட்டமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ. 976 கோடி ஒதுக்குவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், இன்று வெளியிடப்பட்டுள்ள பிங்க் புத்தகத்தில் அத்தொகை ரூ. 301 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இரட்டைப்பாதை திட்டங்களுக்கு ரூ 2,214 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ரூ. 1,928 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய வழித்தடங்களான திண்டிவனம் – செஞ்சி- திருவண்ணாமலை வழித்தடத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்திப்பட்டு- புத்துருக்கு ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டிவனம்- நகரிக்கு ரூ. 350 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது 153 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு பழனிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை- மகாபலிபுரம்- கடலூர் கடற்கரை பாதைக்கு ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இப்போது வெறும் ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி- இருங்காட்டுக்கோட்டை -ஆவடி லைனுக்கு ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மொரப்பூர் – தர்மபுரிக்கு ரூ.115 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ரூ.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல இரட்டை பாதை திட்டங்களில் காட்பாடி – விழுப்புரத்துக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் -கரூர்- திண்டுக்கல் இரட்டை பாதைக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு -கரூர் இரட்டை பாதைக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் வந்த பிங்க் புத்தகத்தில் ரூ. 350 கோடி, ரூ. 150 கோடி என்று ஒதுக்கியது வெறும் தேர்தலுக்காக தான்.

உண்மையான பிங்க் புத்தகம் வந்த பிறகு தான் அது வெட்ட வெளிச்சமாகும் என்று நான் நாடாளுமன்றத்திலேயே கூறினேன். இப்போது உண்மை வெளிவந்து விட்டது.

பொது பட்ஜெட் முடிந்ததும் வெளியிடப்பட வேண்டிய இரயில்வே பிங்க் புத்தகத்தை வெளியிடாமலே மோடி அரசு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்தது.

இடைக்கால பட்ஜெட்டில் தேர்தலுக்காக இவர்கள் செய்த போலி அறிவிப்புகள் நாடாளுமன்ற விவாதத்தின் வழியே நாட்டுமக்களுக்கு தெரிந்துவிடும். இவர்களின் போலி அரசியல் அம்பலமாகிவிடும் என்பதால் இவர்கள் பிங்க் புத்தகத்தையே வெளியிடாமல் விவாதத்தை நடத்தி முடித்தனர்.

பொது பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் அப்பட்டமான துரோகத்தை செய்த மோடி அரசு இரயில்வே திட்டங்களிலும் அதே துரோகத்தை அரங்கேற்றியுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட நிதியும் பறிக்கப்பட்டது.

பிங்க் புத்தகம் வெளியிடாமல் அது சார்ந்த உண்மையும் மறைக்கப்பட்டது. அதன் மீது நாடாளுமன்றத்தில் நடைபெற வேண்டிய விவாதமும் பறிக்கப்பட்டது. மோடி அரசு தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகத்தின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது.

இது சம்பந்தமாக நான் குற்றச்சாட்டை முன்வைத்த போது எனக்கு எதிராக பேசிய பாஜக தலைவர்கள் திருமதி வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்கள் இப்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்?பொதுபட்ஜெட்டில் சென்னை மெட்ரோ உள்ளிட்ட தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இப்பொழுது ரயில்வேயின் புதிய வழித்தடங்கள் அனைத்துக்கும் இழைக்கப்பட்டுள்ளது. இந்த அநீதிக்கு எதிரான எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.




You cannot copy content of this Website