அரசியல்

தவெக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றிய 26 தீர்மானங்கள்!

Quick Share

விஜய் தலைமையில் இன்று தவெக நிர்வாகிகளிடம் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு விஜய் நேரில் வந்தார். தவெக ஆலோசனை செயற்குழு கூட்டத்தின் போது 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

26 தீர்மானங்கள் என்னென்ன?

கொள்கைகள், கொள்கை தலைவர்களை உறுதியாக பின்பற்றும் தீர்மானம்

கொள்கை திருவிழா மாநாட்டை மாபெரும் வெற்றி பெற வைத்த கழக நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம்

மதசார்ப்பற்ற சமூக நீதிக் கொள்கைகள் பற்றிய விளக்க தீர்மானம்

ஜனநாயக கொள்கை தீர்மானம்

பெண்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம்

சமூக நீதிக் கொள்கை தீர்மானம்

மாநில தன்னாட்சி உரிமை கொள்கை தீர்மானம்

விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம்

கோவை மெட்ரோ ரயில் திட்ட பணிகளை விரைந்து தொடங்க கோரும் தீர்மானம்

ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தீர்மானம்.

மொழி கொள்கை தீர்மானம்

மக்கள் மீது நிதிச் சுமை திணிப்பு சார்ந்த தீர்மானம்

சட்டம் – ஒழுங்கு சீர்கேடு சார்ந்த தீர்மானம்

மின்சார கட்டணத்தை மாற்றியமைக்க தீர்மானம்

மதுக்கடைகளை மூட வலியுறுத்தல் கொள்கை தீர்மானம்

உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வலியுறுத்தும் தீர்மானம்

தமிழ்நாட்டின் தொன்மப் பெருமை பாதுகாப்பு தீர்மானம்

விடுதலை போராட்டத் தியாகிகளுக்கு பெருமை சேர்க்க வலியுறுத்தும் தீர்மானம்

கண்ணயமிகு காயிதே மில்லத் பெயரில் அரசு விருது வழங்க வலியுறுத்தும் தீர்மானம்

முதியோர் நல்வாழ்வை உறுதி செய்ய தீர்மானம்

இயற்கை வளப் பாதுகாப்பு கொள்கை தீர்மானம்

இஸ்லாமியர் உரிமைத் தீர்மானம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானம்

தகைசால் தமிழர் விருது வழங்கும் அரசை வரவேற்கும் தீர்மானம்

ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்தை வரவேற்கும் தீர்மானம்

கட்சி நிர்வாகிகள் உயிரிழப்பிற்கு இரங்கல் தீர்மானம்

நம்முடைய அரசியல் பயணத்தை இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள்.. விஜய்யின் ஆவேச அறிக்கை..!

Quick Share

நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள். இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள் என தவெக தலைவர் விஜய் ஆவேசமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வணக்கம். மாநாடு குறித்து உங்களுடன் பேச, இது நான்காவது கடிதம். வாஞ்சையில் நனைந்த வார்த்தைகளில் ஒரு நன்றிக் கடிதம். அரசியலில், கடித முறை என்பது ஆகப்பெரும் ஆயுதம். பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள், நம் அனைவருக்கும் சொந்தமானது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் நாமும் அதைக் கையில் எடுத்தோம். இந்தக் கடிதம் எழுதும்போது, என்னென்னவோ எண்ண அலைகள் இதயத்தில் அலைமோதுகின்றன. என் நெஞ்சம் நிறைந்ததில் எதைச் சொல்வது? எதை விடுப்பது? மாநாடு நடத்த, பல்வேறு காரணங்களால், நமக்குக் கிடைத்தது மிகக் குறைந்த கால இடைவெளிதான். அதிலும் அடைமழை வேறு குறுக்கிட்டது. இருந்தும், எல்லாவற்றையும் சமாளித்து, சூறாவளியாகச் சுழன்று நம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை வெற்றிபெறச் செய்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

குறிப்பாக, மாநாட்டுப் பணிகளுக்காக, இடம் தேர்வில் இருந்து திடல் பணிகள் வரை மட்டுமல்லாது, மாநாடு வெற்றிகரமாக நிறைவுறும் வரையிலும், கழகத்தின் நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதி சிரத்தையுடன் பணியாற்றிய பொதுச் செயலாளர் என்.ஆனந்த் திடல் வடிவமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு, பொதுச் செயலாளருடன் பணிகளைப் பகிர்ந்துகொண்ட பொருளாளர் பி.வெங்கட்டராமன் கட்சியின் மீதான உறுதியான பற்றை இதயத்தில் தாங்கி மாநாட்டிற்காகக் கடுமையாக உழைத்த ஆர்.பரணிபாலாஜி, (கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்), என்.மோகன்ராஜ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), ஜி.பி.சுரேஷ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), ஏ.வடிவேல் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), ஈ.ரமேஷ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), கே.அரவிந்தன் (விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர்) மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, பகுதிக் கழக நிர்வாகிகள், மாநாட்டுக் குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்துக் குழுக்களின் உறுப்பினர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமை நிலையச் செயலகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, திடல் வடிவமைப்புப் பணிகளால், வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்கான இடமாகத் திடலை மாற்றிக் காட்டிய பந்தல் வடிவமைப்பாளர் ஜே.பி.விஸ்வநாதனுக்கும் நன்றி. மாநாட்டில். நாம் அனைவரும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆற்றிய பணியை மறக்கவே இயலாது. அவசர கால உதவியில் அசத்திய இவர்கள் அனைவருக்கும் அளப்பரிய நன்றி. கட்டுப்பாட்டு அறை சார்ந்த கண்காணிப்புப் பணிகளைச் செய்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி. எப்போதும் விவசாயப் பெருமக்களை வணங்கிப் போற்றும் இயக்கமாக இருக்கும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்கள் கரம் பற்றி நன்றி சொல்லவே எனக்கு விருப்பம். இருந்தும், இப்போது நெஞ்சம் நெகிழ அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், வி.சாலை. விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கும் நன்றி சொல்லத் தோன்றுகிறது. அவர்கள் அனைவருக்கும் நன்றி.

மாநாட்டிற்கான நெறிமுறைகளை செவ்வனே செயல்படுத்திட அனுமதி மற்றும் ஒத்துழைப்பு நல்கிய, சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. கடிதங்கள் வாயிலாக வெளியிட்ட என் வேண்டுகோள்களை ஏற்று, தங்கள் வீடுகளில் இருந்தே வெற்றிக் கொள்கைத் திருவிழாவைக் கண்டு களித்த அனைத்துத் தாய்மார்களுக்கும், முதியோர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி. இதனிடையே, மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். இரவெல்லாம் கண்விழித்து, தூக்கமின்றி, அயற்சியைப் பொருட்படுத்தாமல், மதியம் வரை சுட்டெரித்த வெயிலையும் தாங்கிக்கொண்டீர்கள். சிலர் உடல் உபாதைகளைக்கூட பொறுத்துக்கொண்டு கலந்துகொண்டீர்கள். இதயங்கள் இடையேயான அன்பின் முன், இன்னல்கள் பெரிதில்லை என்பதை உணரச் செய்தீர்கள். உங்களை எப்படி ஏற்றிப் போற்றுவதென்றே எனக்குத் தெரியவில்லை.

இப்படித் தன்னெழுச்சியாக, பொங்குமாங்கடலென மாநாட்டிற்குத் திரண்டு வந்த கட்சி தோழர்கள் என் மீது கொண்டுள்ள பாசத்திற்கு ஈடாக, இந்த உலகத்தில் வேறு எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை. அதேபோல, தமிழக அரசியல் களத்தில் நமக்காக நம் தோளோடு தோள் சேர்ந்து நிற்பதை உறுதி செய்வதுபோல, தங்களின் பேரன்பையும் பேராதரவையும் தெரிவிக்கும் வகையில், நமது மாநாட்டிற்குப் பேரலைகளாக எழுந்து வந்த பொதுமக்களுக்கு நன்றி சொல்ல, வார்த்தைகளைத் தேடித் தேடி, கண்டுபிடிக்க இயலாமல் மவுனமொழி பேசி. கண்கள் கலங்க நிற்கிறேன். எதைப் பற்றியும் யோசிக்காமல், இந்த மண்ணைச் சேர்ந்த ஒற்றை மகனுக்காக, இத்தனை லட்சம் மனங்கள் திரண்டு நின்றது என் மனதை நெகிழச் செய்துவிட்டது.

உங்களை உறவுகளாகப் பெற்றது என் பாக்கியமன்றி வேறென்ன? நாடே வியக்கும் வகையில் நம் மாநாட்டை மாபெரும் வெற்றிபெறச் செய்த உங்கள் ஒவ்வொருவரின் மனதையும் கோடிப்பூக்களைத் தூவி, போற்றி மனம் நிறைகிறேன். உங்கள் ஒவ்வொருவரின் அன்பிலும் மனம் நெகிழ்ந்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் தேங்க, அரசியல் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம். இப்பயணத்தின் இலக்கை, நம் தமிழ்நாட்டு மண் இனிவரும் நாள்களில் பார்க்கும். அது உறுதி. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கண்ட காட்சிகள் எல்லாம், கண்களிலும் மனதிலும் கல்வெட்டுகளாகவே பதிந்துவிட்டன.

தமிழக அரசியல் வரலாற்றில், காலாகாலத்திற்கும் அழிக்கவே இயலாத பதிவுகள் அவை. ஆம். நமது மாநாட்டில், அலைகள் கை தட்டும் ஆர்ப்பரிக்கும் கடலைக் கண்டேன். கதிர்கள் வெடித்துவிழும் ஒளிப்பிழம்புகளைக் கண்டேன். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோடு. தமிழகத்தின் வெற்றிக்கான வெள்ளோட்டத்தையும் கண்டேன். தீர்க்கமான அரசியல் வெற்றிக்கான திசைகள் திறக்கக் கண்டேன். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும், மனம் திளைத்ததை. மகிழ்ச்சியில் தித்தித்ததை இதற்குமேல் எப்படிச் சொல்ல? இவை எல்லாவற்றையும். அப்படியே வார்த்தைகளில் வடித்தெடுக்க நானொன்றும் கவிஞன் இல்லை. உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்த மட்டுமே தெரிந்த சாதாரண மனிதன்.

இருந்தும் நினைவுகளைப் பகிர்வதும்கூட ஓர் அழகிய கவிதைதானே. அதனால்தான், மனதிலும் நினைவிலும் சேகரமானதில் சிலவற்றை மட்டுமே பகிர்ந்தேன். இந்த வேளையில், உங்கள் ஒவ்வொருவரையும் எண்ணி மனம் நெகிழ்கிறேன். உங்களை என் தோழர்களாக, தூய குடும்ப உறவுகளாகப் பெற்றது என் வாழ்நாள் வரம். வழியெங்கும் வசந்தத்தை விதைக்கிற வைரநெஞ்சங்கள் நீங்கள். நம் மக்களோடு சேர்த்து, உங்களையும் உயரத்தில் வைத்து அழகு பார்க்கவே இந்த அரசியல் பயணம்.

என் எல்லா வார்த்தைகளுக்கும் நீங்கள் உயிர் கொடுத்தீர்கள். அதனால்தான், நமது மாநாட்டின் வாயிலாக, பொறுப்புணர்வுடன் கூடிய கடமையுடன், கட்டுப்பாடான. கண்ணியமான, ஆரோக்கியமான உத்வேகமான, உரிமைகளை மீட்டெடுக்கும் அரசியலை இந்த மண்ணிலே விதைத்திருக்கிறோம். மாநாட்டில் நம்மைக் கண்ட நம் தமிழக மக்களும் அதை உணர்ந்திருப்பர். நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள். இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்.

அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல். அதைச் சாத்தியப்படுத்துதல் மட்டுமே நம் ‘தீவிர அரசியல் செய்தலாக இருக்கும். நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம். தங்கள் மண்ணைச் சேர்ந்த மகன்களான, மகள்களான நம்மைத் தக்க இடம் நோக்கி, தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்துச் செல்வர். ஆகவே, அவர்களின் மனதில் நிறையும் அளவிற்கு, அதிக நம்பிக்கையுடனும் நன்றியுடனும் ரெட்டைப் போர்யானைகளின் பலத்துடன் உழைப்போம்.

வாகைப் பூக்கள் நமக்காகவே நாடெங்கும் பூத்துக் குலுங்கப் போகின்றன. நமது மாநாட்டின் மூலம், வி.சாலை நமது வியூகச் சாலையாகவும், விவேக சாலையாகவும் மற்றும் வெற்றிச் சாலையாகவும் ஆனது. போலவே, நம்மை யாராலும் வெல்ல இயலாத வித்தியாசமான, யதார்த்த அரசியல் சாலைக்கும் நம்மை அழைத்துச் செல்லும். எப்போதும் ஆக்கபூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026-ல் நம் இலக்கை அடைவோம். வெற்றி நிச்சயம்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.


விஜய் கட்சியுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமி பதில்..!

Quick Share

விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், நேற்று முன்தினம் கட்சியின் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தி முடித்தார். இந்த மாநாட்டில் அவர் திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்த நிலையில், எம்ஜிஆர் பற்றி புகழ்ந்து பேசினார். அதுமட்டுமின்றி, அவர் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம், “2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணியா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “யூகங்களுக்கு இப்போது பதில் அளிக்க முடியாது,” என்று தெரிவித்தார்.

“தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் மாநாடு நடத்துகின்றன. அந்த அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் ஒரு மாநில மாநாட்டை நடத்தி இருக்கிறார். அவருடைய அழைப்பை ஏற்று அவரது ரசிகர்களும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்,” என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

“விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லையே?” என்ற கேள்விக்கு, “அப்படி என்றால் அதிமுக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதாகவே அர்த்தம்,” என்று பதிலளித்தார். “அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் துணை முதல்வர் பதவி கொடுப்பீர்களா?” என்ற கேள்விக்கும், “கற்பனையான கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்ல முடியும்?” என்று அவர் கூறினார்

விஜயின் மாநாடு குறித்து ராதிகா சரத்குமார் கூறியது என்ன?

Quick Share

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில் ராதிகா சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராதிகா பேட்டி

கடந்த ஒக்டோபர் 27 -ம் திகதி அன்று தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மாநாடு குறித்து நடிகை ராதிகா சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று யார் நினைத்தாலும் மகிழ்ச்சி. அவரவர் கொள்கைகளை முன்னெடுக்கின்றனர்.அவர் ஒரு பெரிய நடிகர் என்பதையும் மீறி அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. அவரை சிறு வயதில் இருந்தே எனக்கு தெரியும். அதிகமாக பேசமாட்டார். ஆனால், மாநாட்டில் வேறு ஒரு விஜயை பார்ப்பது போல இருக்கிறது.

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியின் வண்ணமானது சமத்துவ மக்கள் கட்சி கொடியின் வண்ணம் தான். அதனை விஜய் பயன்படுத்துவது மகிழ்ச்சி தான்.

பாஜகவை தாக்குவதற்கு விஜய் யோசித்து பேசுவார் என நினைக்கிறேன். அவருடைய கண்ணோட்டம் வேறு” என்றார். 

இந்த மூன்றையும் கொடுக்க முடியாத அரசாங்கம் இருந்தா என்ன? போனா என்ன? – விஜய் ஆவேசம்!

Quick Share

நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் பாடல் பின்னணியில் இசைக்க, மாநாடு மேடைக்கு வருகை தந்த த.வெ.க. தலைவர் விஜய், தொண்டர்களை நோக்கி நடந்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாமன்னர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த விஜய், 100 அடி கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.

அதன்பிறகு மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை வழியில் த.வெ.க. செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய விஜய், பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகிய 5 தலைவர்களைத் தான் நம்முடைய கொள்கைக்கு வழிகாட்டியாக வைத்துக் கொள்ளப் போகிறோம் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் நீண்ட நேரம் பேசிய விஜய், மருத்துவ மாணவி அனிதாவின் மரணம் எனது தங்கை வித்யாவின் மரணத்தை போன்ற வலியையும் வேதனையையும் கொடுத்தது என்றார். 

விஜய் பேசுகையில், “எங்களுடைய இந்த அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போவது பெண்கள். என்னுடைய அக்கா தங்கைகள், என்னுடைய அம்மாக்கள், என்னுடைய நண்பிகள். என் கூடபிறந்த தங்கை வித்யா இறந்தபோது எனக்குள்ள பெரிய பாதிப்ப ஏற்படுத்தியது. அதில் கொஞ்சம் கூட குறையாத பாதிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியதுதான் தங்கை அனிதாவின் மரணம்.

தகுதி இருந்தும் தடையாக இருக்கிறது இந்த நீட் தேர்வு. அப்போதுதான் முடிவு எடுத்தேன். விஜய் அண்ணா விஜய் அண்ணா என்று மனதார அழைக்கும் இந்த பெண் பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கை என்று அனைத்திலும் நிரந்தர பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இனிமே கவலைபடாதீங்க… உங்கள் அண்ணா, உங்கள் தம்பி, உங்கள் தோழன், உங்கள் விஜய் களத்திற்கு வந்துவிட்டேன். உங்களின் உறவா, நட்பா என்ன பார்க்கும் குட்டீஸ் முதல் பாட்டிஸ் வரை அனைவருக்குமான ஆளா நான் இருப்பேன். 

என்னுடைய அரசியல் குறிக்கோள் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். வாழ்வதற்கு வீடு, வயிற்றுக்குச் சோறு, வருமானத்திற்கு வேலை. இதுதான் எங்களது அடிப்படை குறிக்கோள். இந்த மூன்றிற்கும் உத்தரவாதம் கொடுக்க முடியாத அரசாங்கம் இருந்தால் என்ன? போனால் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

விஜய்க்கும் எங்களுக்கு ஒத்துப்போகாது: சீமான் திட்டவட்டம்!

Quick Share

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வருகை தந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் அறிவித்த கொள்கைகளுக்கு பல கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விஜயின் கொள்கைகளை குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

சீமான் கூறியதாவது.., 

விஜய் என்னை விமர்சனம் செய்கிறார் என ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்?

அவரின் கொள்கை கோட்பாடு எங்களின் கொள்கையோடு ஒத்துப்போகவில்லை.

நான் கூறுவது என் நீண்ட கால இன வரலாறு. இங்குள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என்பது.

திராவிட கொள்கைக்கு மாற்றாக வந்தவர்கள் நாங்கள். தமிழ் நேயர்கள்.

கட்சி ஆரம்பித்து அரசியல் அதிகாரத்திற்கு வரவேண்டும் என நான் வரவில்லை. படம் எடுத்து பிழைக்க வந்தவன்.

வரலாறு, காலம் எனக்கு இந்தப் பணியை கொடுத்தது. காரணம் என் இனத்தின் மரணம்.

எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டேன். அதை செய்கிறேன்.

திராவிடமும், தேசியமும் எனது இரு கண்கள் என விஜய் சொன்னால், அது எங்களது கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று கிடையாது. அது வேறு. இது வேறு. 

இது எனது நாடு. எனது தேசம். இங்கு வாழும் மக்களுக்கான அரசியல் தமிழ் தேசிய அரசியல்.

விஜய் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை. பெரியாரின் கொள்கைகளை முன்னெடுப்பேன் என்ற விஜய் பேச்சிலும் ஒத்துப் போகவில்லை. 

என்.டி.ராமாராவ், தெலுங்கு தேசம் கட்சி என பெயர் வைத்தபோது யாரும் எதிர்த்துப் பேசவில்லை

நாங்கள் தமிழ் தேசம்பெயர் வைத்த போது பாசிசம், பிரிவினைவாதம் என சொல்கிறீர்கள். இது ஏற்புடையது அல்ல.

என் பயணம் என் கால்களை நம்பித்தான்; யார் காலையும் நம்பி பயணிக்காதவன். நான் மிகுந்த தெளிவான பயணத்தை கொண்டவன். நான் தனித்துப் போட்டியிடுவேன் என ஏற்கனவே சொல்லிவிட்டேன்; நாங்கள் யாரோடும் கூட்டணி இல்லை என தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜயின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்கள்- பவன் கல்யாண்

Quick Share

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் அரசியல் பயணத்திற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தவெக முதல் மாநாடு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்கள் வருகை தந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் கட்சி கொள்கைகளை அறிவித்தார். இதற்கு பல கட்சிகளின் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விஜயின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்து கூறிய பவன் கல்யாண் 

பவன் கல்யாண் அவரது பதிவில், “துறவிகள் மற்றும் சித்தர்களின் பூமியான தமிழ்நாட்டில் ஒரு அரசியல் பயணத்தைத் தொடங்கியதற்காக நடிகர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.     

தவெக மாநாடு… கொள்கை பாடலில் இடம் பெற்ற விஜய் குரல்… உச்சகட்ட உற்சாகத்தில் ர...

Quick Share

கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி வைத்தார். மேலும் கடந்த மாதம் கட்சியின் கொடி மற்றும் கொள்கை விளக்க பாடலை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் தவெக முதல் மாநில மாநாடு நடத்த முடிவு செய்து பல்வேறு இடங்களில் இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது, ஆனால் இறுதியாக விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் அனுமதி பெறுவதற்கு தாமதம் ஏற்பட்டது.

‘ஒரு கட்டத்தில் போலீசார் அனுமதி வழங்கிய நிலையில் மாநாட்டிற்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இன்று மாலை மாநாடு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முதலே தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வி.சாலையை நோக்கி படையெடுக்க தொடங்கினார்கள்.

மாலை 4 மணி அளவில் விஜய் மாநாடு மேடைக்கு வருகை தந்த பிறகு மாநாடு பந்தல் நடுவே அமைக்கப்பட்ட மேடையில் நடந்து சென்ற விஜய் தொண்டர்கள் வீசிய கட்சி துண்டை தனது கழுத்தில் போட்டுக் கொண்டார் அதன் பிறகு விஜய் மாநாடு மேடையில் அமைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்கள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் திராவிட இயக்க தலைவர்கள், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வ உ சி மற்றும் பாரதியார் உள்ளிட்ட தலைவர்களின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அரசியல் களத்தில் இறங்கியது ஏன்? – த.வெ.க மாநாட்டில் விஜய் கொடுத்த விளக்கம்!

Quick Share

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாடு அரசியல் களத்தில் பலராலும் உற்று நோக்க கூடியதாக உள்ளது. மாநாட்டில் விஜய் என்ன பேசுவார்? எதை பற்றி பேசுவார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதில் அவர் பல விசயங்களை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அதில் முக்கியமாக அரசியலுக்கு வந்தது ஏன் என விஜய் விளக்கம் கொடுத்து பேசுயுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “இந்த அரசியலெல்லாம் நமக்கு எதற்கு? சினிமாவில் நடிக்கலாம் பணம் சம்பாதிக்கலாம் என்று தான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் நாம் மட்டும் நன்றாக இருப்பது என நினைப்பது சுயநலம். நம்மை வாழவைத்த இந்த மக்களுக்காக எதுவும் செய்யாமல் இருப்பது விசுவாசமாக இருக்குமா?

ஒரு லெவலுக்கு மேல் காசு சேர்த்து என்ன செய்யப் போகிறோம். நமக்கு இந்த வாழ்க்கையை கொடுத்த மக்களுக்கு என்னதான் செய்யப் போகிறோம். இப்படி ஏகப்பட்ட கேள்விகள் என் மனதிற்குள் வந்து கொண்டே இருந்தது. இப்படி எல்லா கேள்விகளுக்கும் ஒட்டு மொத்தமாக ஒரு விடையை யோசித்த பொழுது தான் அரசியல் எனும் விடை கிடைத்தது. வாழவைத்த மக்களுக்கு நன்மை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன்.

இந்த அரசியல் எப்படிப்பட்டது நம்மால் சமாளிக்க முடியுமா இது நம் இயல்புக்கு செட் ஆகுமா இன்னும் ஏகப்பட்ட கேள்விகள் வந்து கொண்டே இருந்தது. அரசியல் நமக்கு ஒத்து வருமா என்ற பூதக்கண்ணாடி வைத்து யோசித்தால் சரி வராது. பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் இறங்கி அடிச்சா தான் நம்மளை நம்புகிறவர்களுக்கு நல்லது செய்ய முடியும் என தோன்றியது, அதான் இறங்கியாச்சு.

இனி எதைப் பற்றியும் யோசிக்க கூடாது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நிதானம் யோசனை இருக்கிறது. நாம் யார், நாம் எவ்வளவு ஸ்டராங் என்பதை சும்மா வாயில் சொல்ல கூடாது செயலில் காட்ட வேண்டும். அதை நிரூபிக்க அரசியலில் நாம் என்ன நிலைபாடு எடுக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியம். ஏனென்றால் அதுதான் நம்முடைய எதிரிகள் யாரென்று சொல்லும். களத்தில் வெற்றியை தீர்மானிப்பது எதிரிகள் தான்.

பிறப்பை வைத்து ஏற்றத்தாழ்வு கூடவே கூடாது என கட்சி தொடங்கிய அன்றே நமது கொள்கையை கையில் எடுத்து விட்டோம். நமது கொள்கைகளை அறிவித்ததும் சிலரின் கதறல்கள் இன்னும் வேகமாக கேட்கும்
வெறுப்பு அரசியலை எப்போதும் கையில் எடுக்க மாட்டோம்.

ஊழலை எந்த அளவிற்கு ஒழிக்க முடியும் என தெரியவில்லை. பிளவுவாத சக்திகளை கூட எளிதாக கண்டுபிடித்து விடலாம். ஆனால் ஊழல் எங்கு ஒளிந்துள்ளது, எப்படி ஒளிந்துள்ளது என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. ஊழலுக்கு முகமே இருக்காது முகமூடி தான் இருக்கும். முகமூடி போட்ட ஊழல்வாதிகள் தான் இப்போது நம்மை ஆண்டு கொண்டுள்ளனர். நம்முடைய ஒரு எதிரி பிளவுவாத சக்தி, இன்னொரு எதிரி ஊழல் கபடதாரிகள்” என பேசியுள்ளார்.

ஆவேசமான பேச்சு…உணர்ச்சியை வெளிப்படுத்திய விஜய்!! மக்களை சுரண்டும் சுயநல குடும்ப ...

Quick Share

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய் திமுக அரசை மேக்கள் விரேத அரசு என சாடினார். அவர் பேசியதாவது, நாங்கள் கூட்டமாக குடும்பமாக சேர்ந்து கூட்டணி சேர்ந்து ஏமாற்ற வந்த கூட்டம் அல்ல. கொள்ளை அடிக்க வந்த கூட்டம் அல்ல. அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு தங்களுக்கு அடிப்பணியாதவர்களை பகை தீர்க்க வந்த கூட்டம் அல்ல. பக்கா பிளானோட பப்ளிக் பப்ளிக் இன்ட்ரஸ்ட்டோட வந்த கூட்டம்.

ஏதோ சோசியல் மீடியாவில் கம்பு சுத்த வந்த கூட்டம் அல்ல. சமூகத்திற்காக வாளேந்தி நிற்கும் கூட்டம். இது மாஸ் கூட்டம். பணத்திற்காக வந்த கூட்டம். அல்ல நல்ல நோக்கத்திற்காக வந்த கூட்டம். அல்லு சில்லு வைத்து இந்த அவதூறு பரப்புவது ஏ டீம் பீ டீம் என பொய் பிரச்சாரம் பண்ணி இந்த படையை வீழ்த்தலாம் என்று மட்டும் கனவு கனவில் கூட நினைத்து பார்க்க வேண்டாம்.

இங்கு இருப்பவர்கள் மட்டும் தான் எங்களின் சொந்த பந்தம் என்று நினைக்க வேண்டாம். இவர்கள் தான் நம் தோழர்கள் என்று முடிவுக்கு வந்து விடாதீர்கள். நம் உறவு சொந்தம் நட்பு எல்லாம் இன்னும் இருக்காங்க. இங்கு வர முடியாமல் தமிழ்நாடு முழுக்க இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களில் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் இருக்கிறார்கள். நமக்காக ஒரு முடிவோடு காத்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் சேர்ந்ததுதான் நம் வகையறா.

இங்கு யாராவது வந்துவிட மாட்டார்களா எதாவது செய்திட மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு இருக்கிறார்கள். 2026 ஆம் ஆண்டு அந்த நாளை தேர்தல் ஆணையம் அந்த தேதியை குறிக்கும் போது தமிழக வெற்றி கழகத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களும் தங்களின் ஒற்றை விரலால் போடும் அணுகுண்டு எல்லாவற்றையும் மாற்றும். இங்கு ஒரு கூட்டம் ஒரே கொஞ்ச காலமாக ஒரு பாட்டை பாடி கொண்டிருக்கிறது.

யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது ஒரு நிறத்தை பூசி விட்டு பூச்சாண்டி காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். ஆனா இவங்க மட்டும் அண்டர் கிரவுண்ட் டீலிங் போட்டு, தேர்தல் நேரத்தில் அறிக்கை சவுண்டு எல்லாம் விட்டுக் கொண்டு இருப்பார்கள். இவர்களுக்கு எப்போது பார்த்தாலும் பாசிசம் பாசிசம் பாசிசம் அவ்வளவுதான்..

ஒற்றுமையாக இருக்கும் நம் மக்கள் மத்தியில் சிறுபான்மை பெரும்பான்மை என ஒரு பிரிவினையை ஏற்படுத்தி ஃபுல் டைம் ஆக ஒரு சீன் போடுவதை வேலையா போச்சு. அவங்க பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா? நீங்களும் அவர்களுக்கு கொஞ்சமும் சளைக்காதவர்கள் தானே.. மக்கள் விரோத ஆட்சியை திராவிடம் மாடல் ஆட்சி என்று கூறி மக்களை ஏமாற்றுகிறீர்கள்.

அதனால் இனிமே உங்களை எதிர்ப்பவர்களுக்கு இந்த நிறத்தை பூசுறது அந்த நிறத்தை பூசுறதுன்னு என்னதான் நீங்க மோடி மஸ்தான் வேலை செய்தாலும் ஒன்னும் நடக்கப் போவதில்லை. நாங்க இப்பவும் சொல்றோம் நாங்கள் முடிவு செய்துள்ள இந்த கலரை தவிர வேறு எந்த கலரும் எங்களுக்கு பூச முடியாது. இங்கு கோட்பாடு பிறப்பால் அனைவரும் சமம் என்பதுதான். இந்த நாட்டையே பாழ்படுத்தும் பிளவுபட்ட அரசியல் செய்பவர்கள் தான் தமிழக வெற்றி கழகத்தின் முதல் எதிரி. அடுத்து திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா பெயர்களை வைத்து தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கும் ஒரு குடும்ப சுயநல கூட்டம் தான் நம்மோடு நம்முடைய அடுத்த எதிரி. அரசியல் எதிரி என ஆவேசமாக பேசினார் விஜய்..

தவெக மாநாடு-கட்சி கோடியை ஏற்றிய விஜய்…மாலையாக கழுத்தில் போட்ட விஜய்..!

Quick Share

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சற்று முன் தொடங்கிய நிலையில், மாநாட்டு மேடைக்கு விஜய் நடந்து வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், அதன் பின்னர் அவர் கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், இன்று தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்று வரும் நிலையில், சற்று முன் மாநாடு தொடங்கியது என்பதும், தமிழக வெற்றி கழகத்தின் பாடல் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் மேடைக்கு விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா வருகை தந்தனர், மேலும் கட்சியின் நிர்வாகிகளும் மேடையில் வருகை தந்தனர்.

இதனை அடுத்து, விஜய்க்கு பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த பாதையில் விஜய் மேடைக்கு வரும்போது, அவர் தொண்டர்களை பார்த்து கையசைத்தார். தொண்டர்கள் உற்சாகத்தில் கொடியை தூக்கி வீசிய போது, அந்த கொடியை விஜய் எடுத்து தனது தோளில் போட்டுக் கொண்ட காட்சியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை, கட்சியின் தலைவர் விஜய் ஏற்றினார். மாநாட்டு திடலில் 100 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த கட்சி கொடியை அவர் காணொளி வழியாக ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடப்பட்டது. இதனை அடுத்து, மாநாட்டில் கட்சி கொள்கை உறுதிமொழி வாசிக்கப்பட்டது, தலைவர் விஜய் உள்பட விஜய் கட்சி நிர்வாகிகள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

“நீங்கள் எனக்கு வழிகாட்டியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்” – வயநாடு மக்களுக்கு ...

Quick Share

கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் நவம்பர் 13-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக பிரியங்கா காந்தி போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சத்யன் மோக்கேரி மற்றும் பா.ஜ.க வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், வயநாட்டு மக்களுக்கு பிரியங்கா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய அந்த கடிதத்தில், ‘“சில மாதங்களுக்கு முன்பு, நான் என் சகோதரனுடன் சூரமலை மற்றும் முண்டக்காய்க்கு பயணம் செய்தேன். நிலச்சரிவால் ஏற்பட்ட பேரழிவையும், நீங்கள் அடைந்த இழப்பின் ஆழத்தையும் பார்த்தேன். தாங்கள் நேசித்த அனைவரையும் இழந்த குழந்தைகளையும், தங்கள் குழந்தைகளுக்காக துக்கத்தில் இருக்கும் தாய்மார்களையும், இயற்கையின் சீற்றத்தால் முழு வாழ்க்கையையும் இழந்த குடும்பங்களை நான் சந்தித்தேன். இருப்பினும், உங்களுக்கு ஏற்பட்ட சோகத்தின் இருளில், எனக்குப் பிரகாசித்தது உங்களுடைய தைரியமும், துணிவும்தான். நான் இதுவரை கண்டிராத பலத்துடன் நீங்கள் ஒன்று திரண்டீர்கள்.

நீங்கள் என் சகோதரனுக்கு உங்கள் அன்பைக் கொடுத்தீர்கள். அவர் அதை முழுமையாகப் பிரதிபலிப்பார் என்பதை நான் அறிவேன். வயநாடு காங்கிரஸ் வேட்பாளராக என்னைக் கேட்டபோது, ​​மனதுக்குள் பெருமையும் சோகமும் கலந்து அதைச் செய்தார். இங்கே எனது பணி ஆழப்படுத்த உதவும் என்றும், உங்களுக்காகப் போராடவும், நீங்கள் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற விரும்பும் வழியில் உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் நான் அவருக்கு உறுதியளித்தேன். 

அவர் உங்கள் போராட்டங்களை எனக்கு விரிவாக விளக்கினார். மற்றும் வயநாட்டில் கவனம் செலுத்த வேண்டிய மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் குறித்து எனக்கு விளக்கினார். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவேன் என்று நம்புகிறேன். உங்கள் திறன்களை மேம்படுத்துவதற்கும் உங்கள் எதிர்காலத்தை வலுப்படுத்த புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நாம் ஒன்றாக இணைந்து பணியாற்றலாம். 

என்னால் முடிந்தவரை உங்களில் பலரைச் சந்திக்கவும், உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் வகையில் நாங்கள் எவ்வாறு ஒன்றாகச் செயல்படுவது என்பது குறித்த உங்கள் கருத்துக்களைக் கேட்பதற்கும் நான் உண்மையிலேயே ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் பயணத்தில் நீங்கள் எனக்கு வழிகாட்டிகளாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இது ஒரு பொதுப் பிரதிநிதியாக எனக்கு முதலாவதாக இருக்கும், ஆனால் ஒரு பொதுப் போராளியாக என்னுடைய முதல் பயணமாக இருக்காது. ஜனநாயகத்துக்காகவும், நீதிக்காகவும், நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள விழுமியங்களுக்காகவும் போராடுவது என் வாழ்வில் முக்கியமானது. நீங்கள் என்னை உங்கள் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் உங்களுக்கு ஆழ்ந்த நன்றியுடன் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.




You cannot copy content of this Website