அரசியல்

லட்டு விவகாரம்: பவன் கல்யாணை விமர்சித்த சீமான்!

Quick Share

லட்டு விவகாரத்தில் சனாதனம் குறித்து பேசிய பவன் கல்யாணை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், “இங்கு அதிகமான தமிழ் மக்கள் இருப்பதால் தமிழில் சொல்கிறேன். தமிழ்நாட்டில் சனாதன தர்மத்தை வைரஸ் என்று சொல்கிறார்கள்.

இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு ஒன்று சொல்கிறேன். இந்த மாதிரி பல பேர் சொல்லியிருக்கிறார்கள். அதில் நீங்கள் முதல் ஆளும் இல்லை, கடைசி ஆளும் இல்லை.

சனாதன தர்மம் எப்போதும் அப்படியே தான் நிலைத்திருக்கிறது. அதை தடுக்க முடியாது” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் பவன் கல்யாணின் சனாதனக் கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “பெருமாள் ஆடு மாடு மேய்த்த எங்க கூட்டத்தின் இறைவன். நெய் பட்டால் கொழுப்பு பட்டால் தீட்டு என்பது வேடிக்கை. இதில் கூட அரசியல் செய்வதா? இது உணர்வுப்பூர்வமான பிரச்சனை என்று நடிகர் கார்த்தி சொல்லி முடித்துவிட்டார்.

அதோடு நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், மீண்டும் நெறியாளர் கேள்வி கேட்கிறார். 5 நிமிடத்தில் பிரச்சனையை முடித்திருக்க வேண்டும்.

லட்டு உருட்டவே 5 நிமிடம்தான். ஆனால், இதனை 50 நாள்களாக உருட்டிக் கொண்டிருக்கிறார். சனாதனம் குறித்து பவன் கல்யாண் பேசினால் நாங்களும் மேடை போட்டு பேசுவோம்” என்றார்.

“நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது தவறு என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளேன்” – சச்சிதானந...

Quick Share

தமிழகத்திலேயே திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணிக் கட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ஓட்டுகள் கூடுதல் வாங்கி மூன்றாவது இடத்தை பிடித்தார். அந்த அளவுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில் குமார் உட்பட மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பம்பரமாக வேலை பார்த்து கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைத்தனர்.

இவ்வாறு வெற்றி பெற்ற எம்.பி. சச்சிதானந்தம் அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார் அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் எம்.பி.ஆபீஸ் மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் தான் திண்டுக்கல்லில் உள்ள சி.பி.எம். அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடம் எம்.பி. சச்சிதானந்தம் பேசும் போது, “என்னுடைய வெற்றிக்கு இந்தியா கூட்டணி தான் காரணம். இரண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடரில் கல்வி மானியக் கோரிக்கையில் பேசி உள்ளேன். 

மாநில அரசுக்கு நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது தவறு என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளேன். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி உள்ளேன். நிதி மசோதாவில் பேசியுள்ளேன். வரி விதிப்பு ஏற்றத்தாழ்வு இருக்கிறது. ஜிஎஸ்டி மக்களுக்குப் பெரிய பாதிப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளேன். விமான நிலையங்கள் அனைத்தும் தனியாருக்குக் கொடுப்பது பொருத்தமற்றது. லீஸுக்கு கொடுக்கும் போது மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது.

இதுவரை 500 மனுக்கள் வந்துள்ளது. இது சம்பந்தமாக அந்தந்த துறைக்கு அனுப்பி நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெங்களூர் மதுரை வந்தே பாரத் ரயில் அறிவித்தவுடன் திண்டுக்கல்லில் நிறுத்தம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அது உடனடியாக நிறைவேற்றப்பட்டது. 

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை, தலைகாய சிகிச்சை இல்லை. ஆகையால் 292 கோடிக்கான அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது போல் பழநியில் சாலையோர வியாபாரிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர் மற்றும் பழநி சட்டமன்ற உறுப்பினருடன் சேர்த்து அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நிதி ரூ. 5 கோடியினை திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு 80 லட்சம் எனப் பிரித்துள்ளேன். நாடாளுமன்ற அலுவலகம் அமைப்பதற்குத் திண்டுக்கல் மாநகராட்சியில் இடம் கேட்டு இருக்கிறேன். தற்பொழுது கட்சி அலுவலகத்தில் ஆபீஸ் போட்டதின் பேரில் என்னை மக்கள் நேரடியாகச் சந்தித்து குறைகளையும் கோரிக்கைகளையும் கூறி வருகிறார்கள். அவற்றை நிறைவேற்றியும் வருகிறேன். என் அலுவலகம் 24 மணி நேரம் செயல்படும். 

அதுபோல் திண்டுக்கல் – சென்னை ரயில், திண்டுக்கல் – காரைக்குடி புதிய ரயில்கள் தேவை என்பதனை ரயில்வே மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்து இருக்கிறேன். இப்படி நான் வெற்றி பெற்று நூறு நாளில் பல கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறேன்” என்று கூறினார். இந்த பேட்டியின் போது திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி. முன்னாள் மாவட்டச் செயலாளர் பாண்டி உள்படக் கட்சி பொறுப்பாளர்கள் சிலர் இருந்தனர்.

சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது: த.வெ.க தலைவர் விஜய்!

Quick Share

சென்னையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு வேதனையளிப்பதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் சுமார் 15 லட்சம் பேர் கலந்துகொண்ட நிலையில், பலர் வெயில் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர். அவர்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் 5 பேர் உயிரிழந்ததற்கு வேதனை தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், “சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியின்போது அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும், பாதுகாப்பையும் திறம்பட செயல்படுத்துவதில் இனிவரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மெரினாவில் மரணம்: திமுக அரசின் அலட்சியத்தில் விளைந்த படுகொலை என சீமான் கண்டனம்!

Quick Share

ஐந்து பேரின் மரணமென்பது ஆளும் திமுக அரசின் அலட்சியத்தில் விளைந்த படுகொலையாகும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெயில் மற்றும் கூட்ட நெரிசலால் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய வான்படையின் 92வது தொடக்க நாள் நிகழ்வையொட்டி, சென்னை, மெரீனா கடற்கரையில் நடைபெற்ற வான்படையின் வீர தீர செயல் நிகழ்ச்சியின்போது கூட்டநெரிசலில் சிக்கி, உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு ஐந்துபேர் உயிரிழந்திருக்கிற செய்தி பேரதிர்ச்சி தருகிறது.

இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சையிலிருப்பதும், வீர தீர நிகழ்ச்சி ஐந்து உயிர்களின் பேரிழப்போடு நிறைவுபெற்றிருப்பதும் பெரும் வேதனையைத் தருகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்.

15 இலட்சம் பார்வையாளர்களை வரவழைத்து, அதிகப்படியாகப் பார்க்கப்பட்ட வான்படை வீர தீர நிகழ்ச்சியாக லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வில், அவ்வளவு இலட்சம் பேருக்கான முன்னேற்பாட்டை செய்யாத மாநிலத்தை ஆளும் திமுக அரசின் நிர்வாகத்தோல்வியே ஐந்து பேரின் உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைந்திருக்கிறது.

ஓரிடத்திலே இத்தனை இலட்சத்துக்கும் மேலான மக்கள் கூடினால், அங்கு ஏற்பாடு செய்ய வேண்டிய இலவசக் குடிநீர், கழிவறை வசதிகள், முதியோர்-பெண்கள்-குழந்தைகளுக்கான குடில்கள், போக்குவரத்து ஒழுங்கு, மருத்துவ ஏற்பாடுகள், போதிய மீட்புக்குழுக்கள், காவல்துறையினர் உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளும் சரிவர அமைக்கப்பட்டு, நிர்வகிக்கப்படாததே மக்களைப் பெரும் இன்னலுக்கு ஆளாக்கி, ஐந்து உயிர்களைப் போக்கியிருக்கிறது.

ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டுக்கும், பொதுக்கூட்டத்துக்கும் ஏகப்பட்ட நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து, கெடுபிடி செய்யும் ஆட்சியாளர் பெருந்தகைகள், கடற்கரையில் 15 இலட்சம் பேரை எந்த அடிப்படையில் கூடவிட்டார்கள் எனும் அடிப்படைக்கேள்விக்கு என்னப் பதிலுண்டு?

ஒக்கி புயலில் சிக்குண்டு எங்கள் மீனவச் சொந்தங்கள் நடுக்கடலில் தத்தளித்தபோது வராத வான்படை, குரங்கணி காட்டுத் தீவிபத்தில் மாட்டிக்கொண்ட எங்கள் பிள்ளைகளை மீட்க வராத உலங்கு ஊர்திகள், இப்போது கடற்கரையில் வேடிக்கைக் காட்டுவதன் மூலம் தமிழினத்திற்கு கிடைக்கப்போகும் நன்மை என்ன?

கடந்த 29ஆம் தேதி அன்று வான்படை துணைத் தளபதி ஊடகத்தினரிடம் 15 இலட்சம் மக்களை எதிர்பார்க்கிறோம் என்றும் அதற்கான ஏற்பாடுகளை அரசுடன் இணைந்து செய்யவிருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிற நிலையில் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக வந்துவிட்டது என்று இன்று திசை திருப்புவதன் காரணம் என்ன?

‘திராவிட மாடல்’ என தற்பெருமை பேசும் திமுகவின் ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், வன்முறைத்தாக்குதல்கள், போதைப்பொருட்களின் மிதமிஞ்சியப் புழக்கம், வரைமுறையற்ற மது, கள்ளச்சாராயம் என சட்டம்-ஒழுங்கு ஒருபக்கம் சந்தி சிரிக்கையில், மறுபக்கம், மக்கள் ஒன்றுகூடும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்வைக்கூட உயிரிழப்பு இல்லாது நடத்த வக்கற்று அரசின் நிர்வாகம் தறிகெட்டு நிற்கிறது.

விடுமுறை நாளில் மனமகிழ்வடைய கேளிக்கைக்காக கடற்கரைக்குச் சென்ற பொதுமக்கள் பிணமாய் வீடுதிரும்புவதென்பது ஏற்கவே முடியாதப் பேரவலம்; சகிக்கவே முடியாத பெருங்கொடுமை. மொத்தத்தில், ஐந்துபேரின் மரணமென்பது ஆளும் திமுக அரசின் அலட்சியத்தில் விளைந்த படுகொலையாகும்.

நாடு தழுவிய அளவில் கவனம்பெறும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக்கூட சரிவர ஒருங்கிணைத்து நடத்தத் தவறிய ஆளும் திமுக அரசுக்கு என்னுடைய வன்மையானக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

துணை முதலமைச்சரான பிறகு உதயநிதி போட்ட முதல் கையெழுத்து எதில் தெரியுமா?

Quick Share

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் பொறுப்பை ஏற்றதும் அவர் முதல் கையெழுத்தை எதில் போட்டார் என்பது குறித்த விபரம் வெளியாகியுள்ளது. 

உதயநிதியின் முதல் கையெழுத்து

சென்னையில் நேற்று முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசுகையில், “முதலமைச்சர் கோப்பை 2024ம் ஆண்டுக்கான மாநில அளவிலான போட்டிகளை தொடங்கி வைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்திருப்பதை பார்க்கையில் உங்களின் உற்சாகம் என்னை பற்றி கொள்கிறது.

நான் துணை முதலமைச்சரான பிறகு நான் முதலில் கையெழுத்திட்ட முதல் கோப்பு இந்த முதலமைச்சர் விளையாட்டு போட்டிக்கானது தான்.

இதற்கான நிதியை ரூ.82 கோடியாக உயர்த்துவது தொடர்பான கோப்பில் தான் முதல் கையெழுத்திட்டேன் என்பதை பெருமையுடன் கூறி கொள்ள விரும்புகிறேன்” என்றார்.  

‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’ – நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

Quick Share

சென்னை கதீட்ரல் சாலையில் கண்ணாடி மாளிகை, அயல்நாட்டுப் பறவையகம்,பசுமை குகை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பாரம்பரிய காய்கறித்தோட்டம், சிற்றுண்டியகம் முதலான சிறப்பு அம்சங்களுடன் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவைதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (07.10.2024) திறந்து வைக்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ் இலக்கியம், கலை, கலாச்சாரம் என்று தமிழ் வளர்ச்சிக்கும், அடித்தட்டு மக்களின் எழுச்சிக்கும் ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்து தமிழர்தம் வாழ்வில் நீங்கா இடம் பெற்றவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். இவரின் நினைவைப் போற்றுவதற்காக அவர்தம் பெயரில் சென்னை கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில், ‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’ வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு (15.08.2023) சுதந்திர தினவிழா உரையில், ‘சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் 25 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஒன்று அமைக்கப்படும்’ என்னும் அறிவிப்பை வெளியிட்டார். இப்பூங்கா அமைந்துள்ள இடம் முன்னர் ஒரு சங்கத்தின் கட்டுப்பாட்டில் தனியாரிடமிருந்தது. இதனைத் தொடர்ந்து, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அரசால் மீட்கப்பட்டு தோட்டக்கலைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அந்த நிலத்தில் சென்னை மாநகர மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பூங்காவினை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சரால் 27.02.2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பூங்காவில், பரந்து விரிந்த பசுமைச்சூழலில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல்வேறு வகையான அழகிய, அரியவகை தாவரங்கள் மற்றும் மரங்களைக் கொண்டதாக அமைய திட்டமிடப்பட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இயற்கை எழில்மிகு சூழலுடன் கூடிய இப்பூங்காவின் நுழைவாயில் அருகில் அமைந்துள்ள உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி நீளமுடைய பனி மூட்டப்பாதை, 2600 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள ஆர்க்கிட் குடில், அரிய வகை கண்கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரமுடைய 10 ஆயிரம் சதுர அடிப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளைக் கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, அருவி, இசை நீரூற்று. குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறித்தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் இப்பூங்கா 45 கோடியே 99 இலட்சம் ரூபாய் மதிப்பில், அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் இப்பூங்காவில் உள்ள சுவர்களில் தீட்டப்பட்டுள்ள சுவரோவியங்கள் பூங்காவை மேலும் அழகுபடுத்துகின்றன. பூங்கா அனுபவத்தினை என்றென்றும் நினைவுகூரும் வகையில் நினைவு பரிசுகள் விற்கும் விற்பனை மையமும் உள்ளது. இப்பூங்காவினை பார்வையிட நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூ.250, சிறியவர்களுக்கு ரூ.200, குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட பெரியவர்களுக்கு ரூ.150 சிறியவர்களுக்கு – ரூ.75, எனவும், மாலை நேரத்தில் இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு – ரூ.50 எனவும் கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.40 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50 எனவும், புகைப்பட கருவிகளுக்கு (camera) ரூ.100 எனவும், ஒளிப்பதிவு கருவிகளுக்கு (video camera) 5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நுழைவுக்கட்டணங்கள் மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே செல்லதக்கது. இணையதளத்தின் வாயிலாக நுழைவுகட்டணம் குறித்தான தகவல்கள் மற்றும் நுழைவுச்சீட்டினை: https://tnhorticulture.in/kcpetickets பெறலாம். விரைவுத்துலங்கல் குறியீடு வழியாகவும் நுழைவுச் சீட்டினை பெற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைப்புப் பணிகள் அனைத்தும் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு நாளை (07.10.2024 – திங்கட்கிழமை) மாலை 6 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி: அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Quick Share

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாடு முழுவதும் பேரணி நடத்துவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பேரணி சென்னை, கோயம்புத்தூர் மற்றும் தென்காசி என 50க்கும் மேற்பட்ட இடங்களில் (06.10.2024) நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாகச் சென்னை எழும்பூர் பகுதியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் மத்திய இணை இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டார். எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேரணியில் ஈடுபட்டவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு சீருடையுடன் கையில் கொடியை ஏந்திச் சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த பேரணி நடைபெற்றது. இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “1925 ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்று நூற்றாண்டை நெருங்கிய, நமது பாரத தேசத்தில் மட்டுமல்லாது உலகிலேயே பழமையான அமைப்பாக இருந்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.

இந்து சமுதாய மக்களிடையே ஒற்றுமை ஏற்படுவதற்கும், தேசத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு பாதுகாக்கப்படுவதற்கும் எண்ணிலடங்கா ஸ்வயம் சேவகர்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கக் கூடிய இயக்கமாக இருக்கிறது. இத்தனைக்கும் உரித்தான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலத்தில் இன்று கலந்து கொண்டதில் மிகுந்து மகிழ்ச்சி. சென்னை ராஜரத்தினம் மைதானத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தில், நூற்றுக்கணக்கான ஸ்வயம் சேவகர்கள் கலந்து கொண்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து இந்த பேரணிக்கு அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் போலீசாரும் இந்த பேரணிக்கு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

“உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது” – எடப்பாடி பழனிசாமி!

Quick Share

இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் (06.10.2024) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சாகச நிகழ்ச்சியில், விமானப்படையில் உள்ள பல்வேறு வகையான 72 விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டன. இந்த விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 10 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் விமான சாகசங்களைக் கண்டு களித்தனர். மெரினா சாலைகள், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 5 லட்சம் பேர் வரை இருக்கலாம் எனத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதே சமயம் இந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வெயிலின் தாக்கம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தைப் பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது. இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும்.

இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தைப் பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன. ஆனால் இன்று தமிழகத்தில் நிகழ்பெற்ற நிகழ்வில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசுக்கு என் கடும் கண்டனங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி குறித்து அவதூறு பேச்சு.., பவன் கல்யாண் மீது பாய்ந்த புகார்

Quick Share

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பவன் கல்யாண் மீது புகார் 

திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், “இங்கு அதிகமான தமிழ் மக்கள் இருப்பதால் தமிழில் சொல்கிறேன். தமிழ்நாட்டில் சனாதன தர்மத்தை வைரஸ் என்று சொல்கிறார்கள்.இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு ஒன்று சொல்கிறேன். இந்த மாதிரி பல பேர் சொல்லியிருக்கிறார்கள். அதில் நீங்கள் முதல் ஆளும் இல்லை, கடைசி ஆளும் இல்லை. சனாதன தர்மம் எப்போதும் அப்படியே தான் நிலைத்திருக்கிறது. அதை தடுக்க முடியாது.

சனாதன தர்மத்தை உங்களால் எதுவுமே பண்ண முடியாது, யாராலும் அழிக்கவும் முடியாது. அதனை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்” என்று உதயநிதியை சாடி பேசினார். 

இதற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “LET’s WAIT AND SEE” என்று பதில் அளித்திருந்தார். 

இந்நிலையில், பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்துள்ளார்.

அவர் கொடுத்துள்ள புகாரில், திருப்பதி லட்டு விவகாரத்தில் எந்தவித தொடர்பும் இல்லாத உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசியதாகவும், இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் வகையில் பேசியதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், உதயநிதி ஸ்டாலினை ஒருமையில் பேசியதாகவும், சிறுபான்மை சமூக மக்களுக்கு எதிராக வன்மைத்தை கக்கியுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

“கடவுள் பக்தி இருந்தால் சந்திரபாபு நாயுடு மன்னிப்பு கேட்க வேண்டும்” – ஜெகன் மோகன்!

Quick Share

ஆந்திராவில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான கோயிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை அம்மாநில அரசு அமைத்தது.

கலப்பட நெய் கொள்முதல் செய்யப்பட்ட லட்டு விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘அரசியல் சாசனத்தை கையில் வைத்திருக்கும் ஒரு முதல்வர், எதற்காக எடுத்த உடனேயே இந்த விவகாரம் தொடர்பாக பொதுவெளிக்கு கொண்டு சென்றார்?. இது சம்பந்தமான ஆய்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வந்த ஆய்வறிக்கையை, செப்டம்பர் மாதத்தில் ஊடகங்களில் முன்பு தெரிவித்தது ஏன்? இதற்கான உள்நோக்கம் என்ன?. 

லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பான ஆய்வகங்களில் ஆய்வறிக்கை தெளிவில்லாமல் இருக்கிறது. அப்படி இருக்கும் போது, இப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயத்தை ஊடகங்களுக்குச் சென்று இந்த சொல்ல வேண்டிய அவசியம் என்ன?. கலப்படமான நெய் பயன்படுத்தப்படவில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் தனது அறிக்கையில் தெளிவுப்படுத்திருக்கிறார்கள். அதனை ஆய்வு செய்வதற்கு முன்பாக, தானாகவே ஒரு முடிவிற்கு எப்படி வந்தீர்கள்? என்று உள்ளிட்ட பல கேள்விகளை முன்வைத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது, திருப்பதி லட்டு விவகாரத்தை விசாரிக்க மத்திய, மாநில அதிகாரிகள் அடங்கிய புதிய சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “சந்திரபாபு நாயுடுவின் உண்மை முகத்தை உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, மக்களின் உணர்வுகளுடன் விளையாடி, ஆதாரமற்ற கூற்றுக்களை கூறி, பொதுமக்களின் கோபத்தை கிளற முயன்றார். சந்திரபாபு நாயுடுவுக்கு கடவுள் பக்தி இருந்தால், மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சந்திரபாபு நாயுடு அரசியலை மதத்துடன் கலக்கக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்டி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பல ஊடகங்கள் எப்படிச் செய்தியாக்கின என்பதை நாம் பார்த்திருக்கிறோம். முறையான ஒப்புதல் அல்லது ஆதாரம் இல்லாமல், இதுபோன்ற வதந்திகளை பரப்பியிருக்கக் கூடாது. ஆதாரமில்லாமல் மதச் சடங்குகள் சம்பந்தப்பட்ட இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை யாரும் கூறக்கூடாது” என்று கூறினார்.

“அரசு மருத்துவமனைகளில் இத்தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” ...

Quick Share

அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘ஒன்றரை வயது முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கு போடப்படும் DPT Diphtheria-pertussis-tetanus எனும் தடுப்பூசி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த இரண்டு மாதங்களாக தட்டுப்பாட்டில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் தடுப்பூசி போட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசி மருந்து இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்புவதாக செய்திகள் வருகின்றன. அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிரோடு விளையாடுவதையே தொழிலாகக் கொண்ட மு.க.ஸ்டாலினின் தி.மு.க அரசு, பிஞ்சு குழந்தைகளின் நலத்தோடும் விளையாடுவதை, அ.தி.மு.க சார்பில் கண்டிக்கிறேன். 

உடனடியாக அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இத்தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

“தமிழிசை செளந்தரராஜன் மீது மிகுந்த மதிப்பு உள்ளது” – திருமாவளவன்!

Quick Share

கடந்த அக்.2 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற்றது. அதில் விசிக தலைவர் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ”காந்தி மது ஒழிப்பிற்கு போராடியவர். அவருக்கு இவர் மரியாதை செய்யவில்லை மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார். அவருடைய கொள்கைக்கு அது எதிராக இருக்குமோ என்று தமிழிசை சொல்லியுள்ளார்.

தமிழிசை என்ன சொல்ல வருகிறார் என்றால் திருமாவளவன் தினந்தோறும் பாட்டிலை திறக்க கூடிய ஆள் என்று சொல்கிறார். அக்கா தமிழிசை அவர்களே நீங்கள் குடிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்காது என்று நம்புகிறேன். உங்களை போல் எனக்கும் அந்த பழக்கம் இல்லை. தப்பி தவறி கூட நாவில் ஒரு சொட்டு மது கூட பட்டதில்லை” என பேசியிருந்தார்.

திருமாவளவனின் பேச்சுக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழிசை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “விசிக தலைவர் திருமாவளவனை இதுவரை நாகரீகம் தெரிந்த அரசியல்வாதி என நினைத்துக்கொண்டிருந்தேன். மாநாட்டில் பேசியதை பார்த்தால் அவரை வக்கிரத்தின் அடையாளமாக பார்க்கிறேன். பரந்த மனப்பான்மையோடு பிரதமர் மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளார். கொள்ளை வேறுபாடுகள் இருந்தாலும் தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழிசை செளந்தரராஜன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், “ தமிழிசை செளந்தரராஜன் மீது மிகுந்த மதிப்பும், நல்ல நட்பும் உள்ளது. தமிழிசை செளந்தரராஜனின் விமர்சனத்தால் என் மனம் புண்பட்டதா?. என் கருத்து தமிழிசை செளந்தரராஜனைக் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். 

காந்தி மண்டபத்தில் ஆளுநருக்கு பிறகு மாலை அணிவிக்கலாம் என போலீஸ் தடுத்ததால் கிளம்பிவிட்டேன். மாலை அணிவிக்கத்தான் காந்தி மண்டபத்திற்கு சென்றேன். குற்ற உணர்வில் திருப்பிச் சென்றதாக கூறுவது எப்படி சரியாகும்?. பட்டியலின மக்கள் மீதான் ஆளுநர் ஆர்.என்.ரவியின் கரிசனத்துக்கு நன்றி. பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் பட்டியலின மக்களின் நிலை என்ன என்பதை ஆளுநர் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் நிலை குறித்து ஆளுநர் சொன்னது உண்மையெனில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.




You cannot copy content of this Website