அரசியல்

“கடவுள் பக்தி இருந்தால் சந்திரபாபு நாயுடு மன்னிப்பு கேட்க வேண்டும்” – ஜெகன் மோகன்!

Quick Share

ஆந்திராவில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான கோயிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை அம்மாநில அரசு அமைத்தது.

கலப்பட நெய் கொள்முதல் செய்யப்பட்ட லட்டு விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘அரசியல் சாசனத்தை கையில் வைத்திருக்கும் ஒரு முதல்வர், எதற்காக எடுத்த உடனேயே இந்த விவகாரம் தொடர்பாக பொதுவெளிக்கு கொண்டு சென்றார்?. இது சம்பந்தமான ஆய்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வந்த ஆய்வறிக்கையை, செப்டம்பர் மாதத்தில் ஊடகங்களில் முன்பு தெரிவித்தது ஏன்? இதற்கான உள்நோக்கம் என்ன?. 

லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பான ஆய்வகங்களில் ஆய்வறிக்கை தெளிவில்லாமல் இருக்கிறது. அப்படி இருக்கும் போது, இப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயத்தை ஊடகங்களுக்குச் சென்று இந்த சொல்ல வேண்டிய அவசியம் என்ன?. கலப்படமான நெய் பயன்படுத்தப்படவில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் தனது அறிக்கையில் தெளிவுப்படுத்திருக்கிறார்கள். அதனை ஆய்வு செய்வதற்கு முன்பாக, தானாகவே ஒரு முடிவிற்கு எப்படி வந்தீர்கள்? என்று உள்ளிட்ட பல கேள்விகளை முன்வைத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது, திருப்பதி லட்டு விவகாரத்தை விசாரிக்க மத்திய, மாநில அதிகாரிகள் அடங்கிய புதிய சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “சந்திரபாபு நாயுடுவின் உண்மை முகத்தை உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, மக்களின் உணர்வுகளுடன் விளையாடி, ஆதாரமற்ற கூற்றுக்களை கூறி, பொதுமக்களின் கோபத்தை கிளற முயன்றார். சந்திரபாபு நாயுடுவுக்கு கடவுள் பக்தி இருந்தால், மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சந்திரபாபு நாயுடு அரசியலை மதத்துடன் கலக்கக் கூடாது என்பதைச் சுட்டிக் காட்டி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பல ஊடகங்கள் எப்படிச் செய்தியாக்கின என்பதை நாம் பார்த்திருக்கிறோம். முறையான ஒப்புதல் அல்லது ஆதாரம் இல்லாமல், இதுபோன்ற வதந்திகளை பரப்பியிருக்கக் கூடாது. ஆதாரமில்லாமல் மதச் சடங்குகள் சம்பந்தப்பட்ட இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை யாரும் கூறக்கூடாது” என்று கூறினார்.

“அரசு மருத்துவமனைகளில் இத்தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” ...

Quick Share

அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘ஒன்றரை வயது முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கு போடப்படும் DPT Diphtheria-pertussis-tetanus எனும் தடுப்பூசி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த இரண்டு மாதங்களாக தட்டுப்பாட்டில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுடன் தடுப்பூசி போட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசி மருந்து இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்புவதாக செய்திகள் வருகின்றன. அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிரோடு விளையாடுவதையே தொழிலாகக் கொண்ட மு.க.ஸ்டாலினின் தி.மு.க அரசு, பிஞ்சு குழந்தைகளின் நலத்தோடும் விளையாடுவதை, அ.தி.மு.க சார்பில் கண்டிக்கிறேன். 

உடனடியாக அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இத்தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

“தமிழிசை செளந்தரராஜன் மீது மிகுந்த மதிப்பு உள்ளது” – திருமாவளவன்!

Quick Share

கடந்த அக்.2 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற்றது. அதில் விசிக தலைவர் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ”காந்தி மது ஒழிப்பிற்கு போராடியவர். அவருக்கு இவர் மரியாதை செய்யவில்லை மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார். அவருடைய கொள்கைக்கு அது எதிராக இருக்குமோ என்று தமிழிசை சொல்லியுள்ளார்.

தமிழிசை என்ன சொல்ல வருகிறார் என்றால் திருமாவளவன் தினந்தோறும் பாட்டிலை திறக்க கூடிய ஆள் என்று சொல்கிறார். அக்கா தமிழிசை அவர்களே நீங்கள் குடிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்காது என்று நம்புகிறேன். உங்களை போல் எனக்கும் அந்த பழக்கம் இல்லை. தப்பி தவறி கூட நாவில் ஒரு சொட்டு மது கூட பட்டதில்லை” என பேசியிருந்தார்.

திருமாவளவனின் பேச்சுக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழிசை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “விசிக தலைவர் திருமாவளவனை இதுவரை நாகரீகம் தெரிந்த அரசியல்வாதி என நினைத்துக்கொண்டிருந்தேன். மாநாட்டில் பேசியதை பார்த்தால் அவரை வக்கிரத்தின் அடையாளமாக பார்க்கிறேன். பரந்த மனப்பான்மையோடு பிரதமர் மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளார். கொள்ளை வேறுபாடுகள் இருந்தாலும் தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழிசை செளந்தரராஜன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த திருமாவளவன், “ தமிழிசை செளந்தரராஜன் மீது மிகுந்த மதிப்பும், நல்ல நட்பும் உள்ளது. தமிழிசை செளந்தரராஜனின் விமர்சனத்தால் என் மனம் புண்பட்டதா?. என் கருத்து தமிழிசை செளந்தரராஜனைக் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். 

காந்தி மண்டபத்தில் ஆளுநருக்கு பிறகு மாலை அணிவிக்கலாம் என போலீஸ் தடுத்ததால் கிளம்பிவிட்டேன். மாலை அணிவிக்கத்தான் காந்தி மண்டபத்திற்கு சென்றேன். குற்ற உணர்வில் திருப்பிச் சென்றதாக கூறுவது எப்படி சரியாகும்?. பட்டியலின மக்கள் மீதான் ஆளுநர் ஆர்.என்.ரவியின் கரிசனத்துக்கு நன்றி. பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் பட்டியலின மக்களின் நிலை என்ன என்பதை ஆளுநர் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் நிலை குறித்து ஆளுநர் சொன்னது உண்மையெனில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.

“இன்னும் எத்தனை குடும்பங்கள் வீதிக்கு வருவதை அரசு வேடிக்கை பார்க்குமோ?” – ராமதாஸ்!

Quick Share

இன்னும் எத்தனை குடும்பங்கள் வீதிக்கு வருவதை அரசு வேடிக்கைப் பார்க்குமோ? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளுக்கு நாள் ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்து வருகிறது. தீபஒளி திருநாள், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் திருநாள் ஆகியவற்றையொட்டி அக்டோபர் 5-ஆம் தேதி முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை 100 நாட்களுக்கு ரூ. 100 கோடி பரிசு வெல்லலாம் என்று ஆசை காட்டி ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்து வருகிறது.

இதன் விளைவு என்னவாக இருக்குமோ? என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. தொடக்க காலங்களில் லட்சங்களில், பரிசுத்தொகையை அறிவித்த ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள், பின்னர் கோடிகளுக்கு மாறின. இப்போது ரூ.100 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆன்லைன் சூதாட்டம் எந்த அளவுக்கு பேருருவம் எடுத்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இந்த ஆன்லைன் சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டதாகும். கடந்த நிதியாண்டில் ரூ.1070 கோடி வருவாய் ஈட்டிய இந்த நிறுவனம் நடப்பாண்டில் அதை இரட்டிப்பாக்கும் என்றும், அதற்கு முதன்மைக் காரணம் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருந்து ஓர் ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டுகிறது என்றால் ஒட்டுமொத்தமாக தமிழக மக்களின் பணம் எத்தனை ஆயிரம் கோடி சூதாட்டத்தின் மூலம் சுருட்டப்படும்; அதனால் தமிழ்நாட்டில் எத்தனை லட்சம் குடும்பங்கள் வீதிக்கு வரும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது. ஆனால், இதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் எளிதில் அழிக்க முடியாத பெரும் தீங்கு ஆகும். நிலத்தில் வெட்ட வெட்ட முளைக்கும் களைகளைப் போல, ஆன்லைன் சூதாட்டமும் தடை செய்ய, தடை செய்ய சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி மீண்டும், மீண்டும் முளைத்துக் கொண்டிருக்கிறது. பா.ம.க. நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்டது. ஆனாலும், அந்தத் தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறி விட்டதன் காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது.

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு கடந்த 11 மாதங்களில் மொத்தம் 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் தற்கொலைகள் அதிகரிப்பதையும், லட்சக்கணக்கான குடும்பங்கள் வீதிக்கு வருவதையும் தடுக்க முடியாது. ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு 11 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தாலும் கூட கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தமிழக அரசின் மேல்முறையீடு கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இதை சுட்டிக்காட்டி ஆன்லைன் சூதாட்டத் தடை வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவோ, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவோ எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.

கடந்த சில மாதங்களில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; லட்சக்கணக்கான குடும்பங்கள் சொத்துகளை இழந்து தவிக்கின்றன. இதே நிலை தொடருவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறதா? இந்த விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏகப்பட்ட கேள்விகள் வீசுபவர்களுக்கு மாநாட்டின் மூலம் புரியும்.., தொண்டர்களுக்கு விஜய் உற...

Quick Share

தமிழக வெற்றி கழக மாநாடு விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

விஜய் கடிதம் 

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “உங்களை நானும், என்னை நீங்களும் நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன்? நினைக்காத நிமிடம்கூட இல்லை. ஏனெனில், நம்முடைய இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவு. அந்த உணர்வின் அடிப்படையில்தான் இந்தக் கடிதம். அதுவும் முதல் கடிதம்.

தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இன்னமும் முழுமை பெறாத அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிரந்தரமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். அதை, அரசியல் ரீதியாக சட்டப்பூர்வமாக, உறுதியாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இதுதான், என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல், கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும் ஒரு லட்சியக் கனல்.

இன்று, நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டுத் திடல் பணிகளுக்கான தொடக்கம். ஆனால், நம் அரசியல் களப் பணிகளுக்கான கால்கோள் விழா என்பதும் இதில் உள்ளர்த்தமாக உறைந்து கிடக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

நம் மாநாடு எதற்காக என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே? நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், இது நம்முடைய கொள்கைத் திருவிழா. அதுவும் வெற்றிக் கொள்கைத் திருவிழா. இப்படிச் சொல்லும்போதே, ஓர் எழுச்சி உணர்வு, நம் நெஞ்சில் தொற்றிக்கொள்கிறது.

இது, தன் தாய்மண்ணை நிஜமாக நேசிக்கும் அனைவருக்கும் இயல்பாக நிகழ்வதுதான். இந்த வேளையில், ஒன்றே ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதை நாம் எப்போதும் ஆழமாக மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான குடிமகனைத்தான் (Citizen) நாடு மதிக்கும். அதிலும் முன்னுதாரணமாகத் (Role model) திகழும் மனிதனைத்தான் மக்கள் போற்றுவர். ஆகவே, நம் கழகத்தினர் இம்மூன்றாகவும் இருக்க வேண்டும் என்பதே என் பெருவிருப்பம். 

மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும். நாம் உணர வைக்க வேண்டும்.

நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்கப் பெரும்படை. இளஞ்சிங்கப் படை. சிங்கப் பெண்கள் படை. குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை. ஆகவே, நம்மிடம் உற்சாகம் இருக்கலாம். கொண்டாட்டம் இருக்கலாம். குதூகலம் இருக்கலாம்.

ஆனால், படையணியினர் ஓரிடத்தில் கூடினால், அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதையும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா? 

களத்தில் தொடர்ச்சியாக நின்று வென்று காட்ட இயலுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் அதீத விருப்பம் கொண்டவர்களாகச் சிலர் இருக்கின்றனர். இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போதுதான் அவர்களுக்குப் புரியும். 

தமிழக வெற்றிக் கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அன்று. வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப் போகின்ற கட்சி என்பதை நம்மை எடைபோடுவோரும் இனிமேல் புரிந்துகொள்வர். மக்கள் இயக்கமாக இருந்த நாம், மக்களோடு மக்களாக நின்று களமாடி, அரசியல் உரிமைகளை வென்றெடுக்கப் போகும் இயக்கமாக மாறிவிட்டோம். 

அரசியல் களப் பணிகள் வேறு. அதற்கான நடைமுறைகள் வேறு. ஆம். அரசியல் களத்தில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் விவேகமாக இருப்பது. மேலும், யதார்த்தமாக இருப்பதைவிட எச்சரிக்கையுடன் களமாடுவது இன்னும் அவசியம்.

இவை அனைத்தையும் உள்வாங்கி, உறுதியோடும் உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் மாநாட்டுப் பணிகளைத் தொடங்கித் தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்களும் அதுசார்ந்த சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டுக்குஉணர்த்தும் வகையில் மாநாட்டுப் பணிகளைத் தொடர வாழ்த்துகிறேன். இந்நிலையில், மாநாட்டுக்கான நாட்களை மனம் எண்ணத் தொடங்கிவிட்டது. உங்களை வெகு அருகில் சந்திக்கப் போகும் சந்தோசத் தருணங்களை இப்போதே மனம் அளவிடத் தொடங்கிவிட்டது. 

வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

Quick Share

மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று (03.10.2024) நடைபெற்றது. இதில் மூன்று வழித்தடங்களை உள்ளடக்கிய சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, ​​“சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டத்துக்கு ரூ. 63 ஆயிரத்து 246 கோடியில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாகவும், முக்கியமான பொருளாதார மையமாகவும் உள்ளது. 119 கி.மீ. நீளமுள்ள 2 ஆம் கட்டத் திட்டம் 3 தாழ்வாரங்களாகப் பிரிக்கப்பட்டு 120 மெட்ரோ ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும்.

அதிகமான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் மெட்ரோவைப் பயன்படுத்த முடியும். அதற்காக 120 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவின் பார்த்தால், ஒவ்வொரு இடத்திலிருந்தும் நடந்து செல்லும் தூரத்தில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதே போன்ற அமைப்பு சென்னை மெட்ரோவில் பயன்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடராக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த முறை, உங்களுடனான எனது சந்திப்பின் போது வலியுறுத்திய சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு எங்களின் கோரிக்கையை ஏற்று ஒப்புதல் அளித்ததற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதால், இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். அதே சமயம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மராத்தி, பெங்காலி, பாலி, பிராகிருதம் மற்றும் அசாமி ஆகிய 5 மொழிகளுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

விரதம் முடித்துவிட்டு திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பவன் கல்யாண்!

Quick Share

திருப்பதி லட்டு விவகாரத்தில் 11 நாட்கள் விரதம் இருந்த பவன் கல்யாண் திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியான சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியது.

இதனிடையே, லட்டுவின் புனித தன்மையை மீட்டெடுக்க துணை முதலமைச்சர் பவன் கல்யான் 11 நாள் விரதம் இருந்து வருகிறார். அவர் கோவிலின் படிக்கட்டுகளை சுத்தம் செய்யும் வீடியோக்களும் பரவி வருகின்றன.

இந்நிலையில், நேற்றுடன் விரதத்தை நிறைவு செய்த பவன் கல்யாண் திருமலைக்கு அலிப்பிரி மலைப்பாதை வழியாக நடந்து சென்றார். அப்போது அவர் படியில் ஏற முடியாமல் நடப்பதற்கே சிரமப்பட்டார்.

பின்பு, ஆங்காங்கே அமர்ந்து கொண்டு தண்ணீர் குடித்தும், இளைப்பாரியும் தனது பயணத்தை தொடர்ந்தார்.

அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடும் முதுகு வலியாலும் பாதிக்கப்பட்டார். பெரும் சிரமத்திற்கு இடையில் ஆந்திர முதலமைச்சர் பவன் கல்யாண் திருமலைக்கு நடந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘கோவிலோ..மசூதியோ.. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது’ – உச்சநீதிமன்றம்!

Quick Share

நாட்டில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அதிகளவு புல்டோசர் கலாச்சாரம் நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசம், குஜராத், அசாம், ராஜஸ்தான் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு வீடுகளை உடனுக்குடன் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. முக்கியமாக, இந்த புல்டோசர் கலாச்சார நடவடிக்கை சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தான் அதிகளவில் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான புகார் மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் ஆகிறது. இது தொடர்பான வழக்குகள் குறித்த விசாரணையில், இந்த புல்டோசர் நடவடிக்கைக்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றம் இடைக்கால தடை வித்து உத்தரவிட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடை இன்றுடன் முடிவடையும் நிலையில், புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்குகள் மீண்டும் இன்று பி ஆர்.காவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, குற்றம்சாட்டப்பட்ட அரசுகள் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ‘இடிக்கப்படும் வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே இது குறித்து நோட்டீஸ் வழங்கப்படுகிறது. தண்டனைக்குரிய நடவடிக்கையாக இடிப்புகளைப் பயன்படுத்துவதற்கான மனுதாரர்களின் புகார்கள், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட உண்மையான இடிப்புகளில் 2% க்கும் குறைவானது” என்று வாதிட்டார். 

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “நாம் ஒரு மதச்சார்பற்ற நாடு. எங்களது பேச்சு, மதம் அல்லது சமூகத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இருக்கும். சாலையின் நடுவில் ஏதேனும் மதக் கட்டமைப்பு இருக்குமாயின், அது குருத்வாரா (சீக்கியர்களின் புனித கோயில்) ஆக இருந்தாலும், அல்லது தர்காவாக இருந்தாலும் அல்லது கோவிலாக இருந்தாலும், அது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. பொதுமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. புல்டோசர் நடவடிக்கைகளின் போது, அவர்கள் பின்பற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடிமக்களுக்கும் இருக்க வேண்டும். சட்டம் என்பது எல்லோருக்கும் ஒன்று தான்” என்று தெரிவித்தனர்.

பிரச்சாரத்திற்கு நடுவே ராகுல் காந்திக்கு பஜ்ஜி கொடுத்த தொண்டர்!

Quick Share

அரியானாவில் தீவிர பிரச்சாரத்திற்கு நடுவே ராகுல் காந்திக்கு தொண்டர் ஒருவர் பஜ்ஜி கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்திய மாநிலமான அரியானாவில் வருகிற 5 -ம் திகதி ஒரே கட்டமாக 90 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அங்கு பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பலத்த போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அரியானா மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், பகதூர்கர் நகரில் ரோடு ஷோ நடத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்திதீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பிரச்சாரத்திற்கு நடுவே ராகுல் காந்திக்கு தொண்டர்கள் பஜ்ஜி கொடுத்தனர். அப்போது, அதனை எடுத்துக்கொண்ட அவர் பக்கத்தில் இருந்த காவலருக்கும் ஒரு பஜ்ஜி எடுத்து கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆளுநர் அணிந்திருந்த துண்டில் பற்றிய தீ: காந்தி ஜெயந்தி விழாவில் பரபரப்பு!

Quick Share

காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கேரள ஆளுநரின் துண்டில் தீ பிடித்த விபத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. கேரளா மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அகத்தரா பகுதியில் அமைந்துள்ள சபரி ஆசிரமத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி சதாப்தி நிகழ்ச்சியில் கேரளா ஆளுநர் ஆரிப் முகமதுகான் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தியடிகளின் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆரிப் முகமதுகான் மரியாதை செலுத்தினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக உருவப் படத்திற்கு முன்பு ஏற்றப்பட்டிருந்த விளக்கிலிருந்து ஆளுநர் தோளில் அணிந்திருந்த துண்டில் தீ பிடித்தது. முதலில் சிறிய பொறிகள் எழுந்ததைக் கவனிக்காத ஆளுநர், தொடர்ந்து அருகிலிருந்த மற்றொரு படத்திற்கு மலர் தூவிக்கொண்டிருந்தார். 

அப்போது ஆளுநரின் துண்டில் தீ பற்றி எரிவதைப் பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததுடன், ஆளுநரின் துண்டை தோளிலிருந்து அகற்றினர். இதில், ஆளுநர் ஆரிப் முகம்மதுகானுக்கு நல்வாய்ப்பாக எதுவும் நேரவில்லை. 

இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்ட ஆளுநர் ஆரிப் முகம்மதுகான் அதன்பின்னர் திருவனந்தபுரம் திரும்பினார். கேரளாவில் ஆளுநரின் உடையில் தீ பிடித்த விவகாரம் குறித்துப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கான திகதி அறிவிப்பு!

Quick Share

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினரும், தமிழக அமைச்சர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

இதனையடுத்து தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததோடு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழக துணை முதல்வராகவும் அங்கீகரித்து ஒப்புதல் அளித்திருந்தார்.

இந்த உத்தரவின்படி சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள கோவி. செழியன், ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர்களான நாசர் மற்றும் செந்தில் பாலாஜி ஆகிய 4 பேரும் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றனர். அதோடு தமிழக அமைச்சர்களாக இருந்த மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகிய 3 பேர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மேலும் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட கே.ராமச்சந்திரன் அரசு தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டார். 

அதோடு, பொன்முடி, மெய்யநாதன், ராஜகண்ணப்பன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மதிவேந்தன் ஆகிய 6 அமைச்சர்களுக்கு துறைகளும் மாற்றப்பட்டன. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 8ஆம் தேதி (08.10.2024) அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இதற்கான அறிவிப்பைத் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் புதியதாகத் தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும், அரசின் கொள்கை முடிவுகள் குறித்தும், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. 

இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். அமைச்சரவை மாற்றம், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் இது என்பதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசு மற்றும் அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

துணை முதல்வர் பதவி விவகாரம்: இ.பி.எஸ்.ஸுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி!

Quick Share

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ. 1 கோடியே 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டட திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கு. வெங்கடேசன் வரவேற்றார். கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை வகித்துப் பேசினார். பேரூராட்சி மன்ற தலைவர் க. பழனி வாழ்த்துரையாற்றினார்.

இந்த விழாவில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதிய அலுவலக கட்டடத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “அண்ணாமலை நகரில் உள்ள பிரசித்தி பெற்ற பாசுபதேஸ்வரர் கோயில் குளத்தைத் தூர்வாரி சுற்றி நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த மக்கள் திட்டங்களை, மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். அதிமுக பல்வேறு முறை ஆட்சி பொறுப்பேற்றாலும், திமுக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் தான் தனிநபர் பலன் பெறுகின்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தாயிக்கும், சேய்க்கும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்து சாதனை படைத்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். தவப்புதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கும், புதுமைப்பெண் திட்டத்தில் மாணவியர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படுகிறது. ஓரே குடும்பத்தில் தாய், மகன், மகள் ஆகிய மூவருக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம் இந்த திட்டம் தமிழகத்தில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளது” எனப்பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப்பொறுப்பேற்றதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து வருகிறார். முதலில் அவர் எப்படி முதலமைச்சராக வந்தார். அதே போல் முதல்வராக இருந்த ஓ.பி.எஸ். எப்படி துணை முதல்வராக ஆக்கப்பட்டார் என்பதற்குப் பதில் கூறட்டும். சிண்டு முடிக்கிற வேலையைச் செய்யவேண்டாம். திமுகவில் சுயம்பாக வளர்ந்து திறம்படச் செயல்பட்டு 40க்கு 40 வெற்றிக்கு ஒரு தூணாகச் செயல்பட்டவர் உதயநிதி ஸ்டாலின். இவரை எடப்பாடி ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுவிட்டோம்” எனக்கூறினார்.

அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் கோ.பாலமுருகன் நன்றி கூறினார். விழாவில், சரண்யா ஐ.ஏ.எஸ்., வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி, பேரூராட்சி துணைத் தலைவர் வி. தமிழ்ச்செல்வி, திமுக ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், சங்கர், சோழன், முத்து பெருமாள், சிதம்பரம் நகர்மன்ற உறுப்பினர்கள் அப்பு சந்திரசேகரன், ஏ.ஆர்.சி. மணிகண்டன், நகரத் துணை செயலாளர் பா.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் சமுதாய நலக்கூட்டத்தையும், சி. தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியில் சுகாதார துணை மையத்தையும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.




You cannot copy content of this Website