சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ”சின்ன தல” என்று தமிழக கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ரெய்னா இன்று தனது 32- வது பிறந்தநாள் விழாவினை கொண்டாடுகிறார் .
இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த முதல் வீரர் ரெய்னா. தோனி தலைமையிலான இந்திய அணியில் நட்சத்திர வீரராக ஜொலித்தவர் ரெய்னா. பேட்டிங், ஃபீல்டிங் என இரண்டிலுமே அசத்திய ரெய்னா, பார்ட் டைம் பவுலராகவும் சில ஓவர்களை வீசி விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர். ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டர்களில் ஒருவராக ஜாண்டி ரோட்ஸே ரெய்னாவை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
ஒருகாலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா (32). அவருடைய அபாரமான ஆட்டத்தால் பலமுறை இந்திய அணியின் வெற்றிக்கு உதவி உள்ளார். தற்போது 2019 உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
இந்நிலையில் இன்று தனது 32 வது பிறந்த நாள் விழாவினை கொண்டாடும் இவர்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன . ரெய்னாவிற்கு, பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், “ரெய்னா களத்தில் இறங்கினால் உற்சாகம் பிறக்கும்” என்று தனக்கே உரிய பாணியில் அதிரடியாக ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள், இந்நாள் வீரர்களும் சுரேஷ் ரெய்னாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.