தமிழ்நாட்டில் தற்போது வெப்ப அலை அதிகரித்து வருகிறது. ஈரோடு போன்ற சில மாவட்டங்களில், 100 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வெப்ப அலையில் தப்பிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
மேலும், பொது மக்களை அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும், வெளியே வரும் பொதுமக்கள் அதிகளவு நீர் மோர், பழங்கள் உள்ளிட்ட உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் சில பகுதிகளில் மழை பெய்து மக்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
இந்த நிலையில்,‘கல்லக் கடல்’ எனும் நிகழ்வு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சில நேரங்களில் திடீரென எந்தக் குறிப்பும் அல்லது எச்சரிக்கையும் இன்றி ஏற்படும் பலத்த காற்றின் விளைவுதான் “கல்லக்கடல்” என அழைக்கப்படுகிறது.
இந்நிகழ்வு இன்றும், நாளையும் ஏற்பட வாய்புள்ளதால் தமிழ்நாட்டில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலை சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் (செங்கல்பட்டு) மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பு, கடல் அலை சீற்றம் காரணமாக படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும்படியும், கடலோர பகுதியில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.