‘ஜெய்பீம் ‘நிஜ நாயகிக்கு வீடுகட்டும் பணி – முதல்வருக்கு நன்றி தெரிவித...
கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியம் முதனை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு, இவருடைய மனைவி பார்வதி. இவர்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். பார்வதியின் கணவர் ராஜாக்கண்ணுவை 1993 ஆம் ஆண்டு கம்மாபுரம் போலீசார் திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணை என்கிற பெயரில் அழைத்துச் சென்று அடித்து சித்திரவதை செய்து அவரை கொலை செய்தனர். இதுமட்டுமல்லாது, முதனை கிராமத்தில் வசித்து வந்த பழங்குடி மக்கள் பலரையும் துன்புறுத்தியும் சித்திரவதையும் செய்து வந்தனர். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்த மார்க்சிஸ்ட் கட்சி, தொடர்ச்சியாக சட்டப் போராட்டம் நடத்தியது.
இதன் விளைவாக, 2004ஆம் ஆண்டு ராஜாக்கண்ணுவை சித்திரவதை செய்து கொலை செய்த 5 போலீசாருக்கு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த நிலையில்தான், ராஜாக்கண்ணு – பார்வதியின் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘ஜெய் பீம்’ என்ற பெயரில் திரைப்படம் வெளிவந்தது. இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதனை கிராமத்தில் பார்வதிக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.
ஆனால், முதல்வரின் உத்தரவுக்குப் பிறகும், “தனக்கு அரசு அதிகாரிகள் வீடு கட்டிக் கொடுக்கவில்லை என்றும், தான் வீடு இல்லாமல் அக்கம் பக்கம் வீட்டில் வசித்து வருவதாகவும், ஆகவே பழங்குடியின மக்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தனக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்” என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஜனவரி 10ஆம் தேதி பார்வதி மனு அளித்தார்
இதன் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சியர் அந்த மனு மீது நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, தற்போது முதனை கிராமத்தில் பார்வதிக்கு பழங்குடியின மக்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இது குறித்து ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி கூறும்போது, முதல்வர் உத்தரவிட்டும் அதிகாரிகள் காலதாமதத்தை ஏற்படுத்தினர், “மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சியால் ரூ 4.60 லட்சம் செலவில் அரசு எனக்கு தற்போது குடியிருப்பதற்கான வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர், மார்க்சிஸ்ட் கட்சி, மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.