இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

May 3, 2022 at 11:34 am
pc

உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டு வரும் போரை நிறுத்த கோரி அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதற்கு ரஷியா செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து நாலாபுறமும் இருந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கு ஐ.நா. அமைப்பு, போப் உள்ளிட்டோரும் எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகின்றனர். உக்ரைனும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

ரஷியாவின் தாக்குதலை தடுக்கும் முயற்சியாக, மேற்கூறிய நாடுகள் அந்நாட்டுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன. அதனையும் ரஷியா கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், ரஷியாவின் நட்பு நாடாக உள்ள இந்தியாவிடம் உணவு, ரசாயனம் உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்து ரஷியாவுக்கு அனுப்பி வைக்க அந்நாட்டு அரசு இந்தியாவை வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவில் இருந்து கடந்த 2020-21ம் ஆண்டை விட 2021-22ம் ஆண்டில் ஏற்றுமதி விகிதம் 2.7 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதத்திற்கு அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் இருந்து எலெக்ட்ரிகல் பொருட்கள், மருந்து, இரும்பு மற்றும் எஃகு, பிற ரசாயன பொருட்கள், வாகனங்கள், பாய்லர்கள், இயந்திர பொருட்கள், மீன், தேயிலை, காபி, நறுமண பொருட்கள் உள்ளிட்டவை ரஷியாவுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்த பொருளாதார தடையால் இந்தியாவிடம் இருந்து அரசி, டிடர்ஜெண்டுகள், பழங்கள், துணிகள், சோடா மற்றும் பீர் என எல்லாவற்றையும் வாங்க ரஷியா தயாராக உள்ளது. அதிலும், இந்திய கோதுமை மற்றும் உலகின் பிற பகுதிகளில் இருந்து கிடைக்க கூடிய மக்கா சோளம் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்து உள்ளது.

அதிக அளவில் சீனா ஏற்றுமதி செய்ய கூடிய தொழிற்சாலை ரசாயன பொருட்களையும் இந்தியாவிடம் வாங்கி கொள்ள ரஷியா ஆர்வம் காட்டி வருகிறது. நாடுகளின் தடை எதிரொலியாக, விரைவில் அவற்றை அனுப்பவும், ரஷியாவின் விற்பனை நிறுவனங்கள் இந்திய ஏற்றுமதியாளர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

எனினும், இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ள கூடிய முக்கிய சவால்களாக கடல்வழி போக்குவரத்து, காப்பீடு மற்றும் பொருட்களுக்கான தொகை கிடைப்பது ஆகியவை உள்ளன.

இதனால், இந்த மாத இறுதியில் உணவு மற்றும் பானங்களுக்கான குழு ரஷியா செல்கிறது என அதன் தலைவர் விவேக் அகர்வால் கூறியுள்ளார்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை நாங்கள் முறையாக பின்பற்றுவோம் என கூறும் அவர், சுங்க சட்டங்களை தளர்த்த வேண்டிய தேவை உள்ளது என்றும் கூறுகிறார்.

உக்ரைன் மற்றும் ரஷிய மோதலால் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பங்களை அங்கீகரித்துள்ள மத்திய அரசு, போர் முடிந்த பின்னரே ஏற்றுமதிக்கான நடைமுறைகள் தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறி இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்கி கொண்டுள்ளது.

இதுபற்றி ஏற்றுமதியாளர் ஒருவர் கூறும்போது, சில குறிப்பிட்ட பிரிவுகளுக்கு பணம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால், அதனை பயன்படுத்தி ஏற்றுமதி பொருட்களை அனுப்பி வைக்கிறோம். எனினும், ரஷிய அதிகாரிகளுடன் மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் அரசு முறையாக ஆலோசனை நடத்தி திட்டங்களை உறுதி செய்த பின்னரே தெளிவு பிறக்கும் என கூறுகிறார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website