“தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது” – உச்சநீதிமன்றம் அதிரடி!

May 3, 2022 at 11:32 am
pc

இந்தியாவில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் அதிக அளவில் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடுமுழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியது. அதன்படி மாநில அரசுகளும் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தின. பல மாநிலங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 189 கோடியே 23 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தன. மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

அவர்கள் பூங்காக்கள், கடற்கரைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தடுப்பூசி கட்டாயம் என்று பல மாநில அரசுகள் அறிவித்து இருப்பதற்கு எதிராகவும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்று மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதித்ததற்கு எதிராகவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வந்தது.

இந்த வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடி பல்வேறு வாதங்களை முன்வைத்தார். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்பப்பட்டது.

இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 22ந்தேதி விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் வக்கீல் ஆஜராகி வாதாடினார். அனைத்து மாநில அரசுகளும் 100 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை கூறியதாலேயே தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று வாதிட்டார்.

இந்த வழக்கில் வாதம், பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டனர். நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் அமர்வு தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று எந்த ஒரு தனி நபரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. அரசியல் சாசன பிரிவு 21ன் கீழ் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்துவது சட்ட விரோதமானது.

அதேநேரத்தில் பொது சுகாதாரத்தை மனதில் வைத்து மாநில அரசுகள் முக்கியமான கட்டுப்பாடுகளையும், கொள்கை முடிவுகளையும் எடுக்க அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனாலும் கூட தடுப்பூசியை கட்டாயம் என்று சொல்லி இருந்தால் அந்த ஆணையை மாநில அரசுகள் நீக்க வேண்டும்.

பொது இடங்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் வரக்கூடாது என்று மாநில அரசுகள் உத்தரவு மற்றும் அறிவிப்பாணைகளை பிறப்பித்திருந்தால் உடனடியாக அதை திரும்ப பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மீது ஏதாவது கட்டுப்பாடுகள் விதித்திருந்தால் அவை அனைத்தையும் திரும்ப பெறுவது பற்றி மறுபரிசீலனை செய்யுங்கள்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு எதிர்விளைவுகள் ஏற்படுகிறது. உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது. வேறு அறிகுறிகள் தென்படுகிறது என்று புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் அது தொடர்பாக தெளிவான, வெளிப்படையான தகவல்கள் எதுவும் இல்லை. எனவே தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஏதாவது எதிர்விளைவுகள் வந்தால் அது தொடர்பாக முறையாக தெரிவிக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அதே நேரத்தில் தடுப்பூசி போடாதவர்களை பொது இடங்களில் தடுக்கக்கூடாது.

மத்திய அரசு வகுத்துள்ள கொரோனா தடுப்பூசி கொள்கை தன்னிச்சையானதோ, ஒருதலைபட்சமானதோ இல்லை. எனவே சிறிய மாற்றங்களை செய்யுங்கள். தடுப்பூசி போட வந்தால் போடுங்கள். கட்டாயப்படுத்த வேண்டாம்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website