நாட்டையே உலுக்கும் கொரோனா -ஒரே நாளில் 1.84 லட்சம் பேர் பாதிப்பு!

April 16, 2021 at 7:58 am
pc

உலகை இன்றளவும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் முதல் அலையை இந்தியா வெற்றிகரமாக சமாளித்து விட்டது. ஆனால் அதன் இரண்டாவது அலைதான், முதல் அலையைக் காட்டிலும் மிகுந்த வீரியத்துடன் தாக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இதுவரை நாடு கண்டிராத வகையில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 372 பேரை கொரோனா புதிதாக தாக்கி புதிய உச்சம் தொட்டது.

இதனால் மொத்த பாதிப்பு 1 கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்து 825 ஆக எகிறி உள்ளது. உலக அளவில் நோயாளிகள் எண்ணிக்கை அடிப்படையில் கொரோனாவின் மோசமான தாக்குதலுக்கு ஆளான நாடுகளின் பட்டியலில், அமெரிக்காவைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இந்தியா நீடிக்கிறது.

நேற்று முன்தினம் நாடு முழுவதும் 14 லட்சத்து 11 ஆயிரத்து 758 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில்தான் கொரோனா புதிதாக 1.84 லட்சத்துக்கும் அதிகமானோரை தாக்கி அதிர வைத்துள்ளது.

மராட்டியம், உத்தரபிரதேசம், சத்தீஷ்கார், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களில் தினமும் தொற்று பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மராட்டியத்தில் மட்டுமே நேற்று 60 ஆயிரத்து 212 பேர் தொற்றின் பிடியில் சிக்கினர். உத்தரபிரதேசத்தில் 17 ஆயிரத்து 963 பேரும், சத்தீஷ்காரில் 15 ஆயிரத்து 121 பேரும் கொரோனாவின் தாக்குலுக்கு ஆளாகினர்.

கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலி நேற்று ஆயிரத்தை தாண்டியது. 24 மணி நேரத்தில் 1,027 பேர் பலியானதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 18-ந் தேதிக்கு பிறகு இதுதான், கொரோனாவுக்கு ஒரு நாளின் அதிகபட்ச உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றும் வழக்கம் போல மராட்டிய மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 281 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சத்தீஷ்காரில் 156 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை பொறுத்தவரையில், உத்தரபிரதேசத்தில் 85, டெல்லியில் 81, குஜராத் மற்றும் கர்நாடகத்தில் தலா 67, பஞ்சாப்பில் 50 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

இந்தியாவில் கொரோனா உயிர்ப்பலி 1 லட்சத்து 72 ஆயிரத்து 85 ஆக உயர்ந்துள்ளது. 58 ஆயிரத்து 526 பேரை பலி கொண்டு மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.

உயிர்ப்பலி விகிதம் 1.24 சதவீதமாக உள்ளது.

அந்தமான் நிகோபார், அருணாசலபிரதேசம், தத்ராநகர் ஹவேலி டாமன் தியு, லடாக், லட்சத்தீவு, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 11 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கொரோனா உயிர்ப்பலியில் இருந்து நேற்று தப்பி இருப்பது சற்றே ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றதின் பலனாக நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 82 ஆயிரத்து 339 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 31 ஆயிரத்து 624 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 23 லட்சத்து 36 ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா மீட்புவிகிதம் 88.92 சதவீதமாக இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் நாட்டில் கொரோனாவின் பிடியில் இருந்து மீள்வதற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 1 லட்சத்து 1,006 பேர் சிகிச்சையில் சேர்ந்துள்ளனர்.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி 13 லட்சத்து 65 ஆயிரத்து 704 பேர் நாடு முழுவதும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனா மீட்பு சிகிச்சையில் உள்ளனர்.

இது மொத்த பாதிப்பில் 9.84 சதவீதம் ஆகும்.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது என்பது அடிக்கோடிட்டு காட்டத்தக்கது ஆகும்.

சட்டசபை தேர்தலை சந்தித்து, அதன் முடிவுக்காக காத்திருக்கிற தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிவேகம் எடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரகணக்கானோர் தொற்று பரவலால் அவதியுற்று வருகிறார்கள்.

நேற்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இதுவரை இல்லாத புதிய உச்சம் ஆகும். சென்னையில் மட்டுமே 2,564 பேருக்கு கொரோனா தாக்கி இருப்பது கவலை அளிப்பதாக அமைந்துள்ளது.

இதற்கிடையே 3 நாள் தடுப்பூசி திருவிழா, தமிழகத்தில் நேற்று தொடங்கி உள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்து வருகிறது.

இந்தியாவில் 11 கோடியே 11 லட்சத்து 79 ஆயிரத்துக்கும் அதிகமான ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தை மேலும் விரைவுபடுத்த ஏதுவாக பைசர், ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தடுப்பூசி வினியோகத்தை தொடங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் போடுவது அதிகரிக்கிறபோது பெரும்பாலான மக்களுக்கு மந்தை எதிர்ப்புச்சக்தி உருவாகி, கொரோனா பரவல் குறையத்தொடங்கும். தடுப்பூசியும், முக கவசமும் கொரோனாவை தடுத்து நிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website