குரூப்-4 தேர்வில் முறைகேடு, தரவரிசையில் முன்னிலையில் உள்ள 40 பேரிடம் வலுக்கும் விசாரணை !!!

குரூப்-4 தேர்வில் குறிப்பிட்ட இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் மீது எழுந்த தேர்வு முறைகேடு சந்தேகத்தால் தற்போது 40 பேர்களிடம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தீவிர விசாரணை தொடங்கியுள்ளது.
2019ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இதில் 2018- 2019, 2019-2020 ஆகிய ஆண்டுகளுக்கான கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரிதண்டலர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் போன்ற 9398 காலிப்பணியிடங்களை கொண்ட தேர்வில் 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் செப்டம்பர் 1ம் தேதி தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் 12ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் வெற்றியடைந்த தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களை பிடித்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை பகுதி தேர்வுமையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்பதால், இந்த இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய இத்தனைபேர் எப்படி தரவரிசை பட்டியலில் முன்னிலையில் உள்ளனர் என்ற சந்தேகம் எழுந்ததால், அங்கு எதாவது முறைகேடு நடந்திருக்குமா என விசாரனையை மேற்கொண்டனர் அதிகாரிகள்.
இதன் காரணமாக ராமநாத புறம் கிழக்கை தேர்வு மையங்களில் நேரடியாக சென்று அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாது, அந்த தேர்வு இரு தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதிய சுமார் 57 பேருக்கு TNPSC சாரிபில் சம்மன் அனுப்பப்பட்டது. அதில்முதற்கட்டமாக நேற்று 20 பேர் விசாரணைக்காக சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசு தேர்வாணையத்திற்கு வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு எழுதியவர்களிடம் TNPSC செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் மற்றும் அதிகாரிகள் பல சுற்றுகளாக தனித்தனியாக விசாரித்தனர். அப்போது அவர்கள், சொந்த மாவட்டங்களிலேயே தேர்வு மையங்கள் இருக்கும் போது நாமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் என் தேர்வு எழுதினீர்கள் ? எப்படி தேர்வில் தேர்ச்சி பெற்றீர்கள் ? நிலவரம் என்ன? , தேர்வு எழுத யாராவது உதவினார்களா ? என அடுக்கடுக்காக கேள்வி கேட்டு பிழிந்தெடுத்தனர். அதுமட்டுமல்லாமல் அந்த 20 பேருக்கும் புது வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டு புது தேர்வுகள் நடத்தப்பட்டு அப்போதே விடைத்தாள்களும் திருத்தப்பட்டது. காலை 10 மணியளவில் ஆரம்பித்த கெடுபிடி விசாரணை மதியம் 2 மணிவரை தொடர்ந்து நடந்தது. அதன் பின் விசாரணைக்கு வந்த அனைவரிடமும், ஒரு கடிதம் எழுதி வாங்கியுள்ளனர். அந்த கடிதத்தில், TNPSC அதிகாரிகள் எந்த நேரத்தில் விசாரணைக்கு அழைத்தாலும் கட்டாயம் வரவேண்டும். மேலும் தேர்வில் எந்தவித முறைகேட்டில் ஈடுபடவில்லை எனவும் எழுதிவாங்கப்பட்டுள்ளது.
சம்மன் அனுப்பப்பட்ட 57 பேரிடமும் முழுவிசாரணையில் ஈடுபட்டபிறகுதான், குரூப்- 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதா என கண்டறியமுடியும், அவ்வாறு கண்டுபுடிக்கப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு கண்டிப்பாக போடப்படும். மேலும் அவர்கள் இனி தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் எந்த ஒரு தேர்விலும் பங்கேற்கமுடியாது என தகவல்கள் தெரிவிக்கிறன. ஒரு வேளை தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானால், தேர்வை எழுதிய வேறு மாணவர்கள் யாரேனும் நீதிமன்றத்தில் புகார் அளித்தால் நடத்தப்பட்ட தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுவரை தேர்வாணையம் அதிகாரபூர்வமாக எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.