ரஜினியை மாறிமாறி புகழ்ந்த கலைப்புலி தாணு, பாரதிராஜா ! “ரஜினியின் 70 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்”
ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாளையொட்டி நடந்த விழாவில் ரஜினியை புகழ்ந்து பேசிய தயாரிப்பாளர் எஸ்.தாணு மற்றும் இயக்குனர் பாரதிராஜா.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் “எளிமை மனிதரின் எழுபதாவது பிறந்தநாள் விழா ” என்ற தலைப்பில் விழா வேலூர் ரங்காபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. விழாவில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, பட்டிமன்ற பேச்சாளர் எஸ்.ராஜா, பத்திரிக்கையாளர் ரங்கராஜ்பாண்டே உள்பட பலர் பங்கேற்ற விழாவில் 70 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செய்தனர்.
விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.தாணு பேசும் போது, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் வரலாறு படைத்துள்ளனர். அவர்கள் மரபு வழியில் வந்தவராக ரஜினியை நான் பார்க்கிறேன். அவர் ஒரு நல்ல மனிதர் என்பதால்தான் பிரதமரே அவர் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். இவர்தான் தமிழகத்திற்கு துணையானவர். ரஜினி வென்று காட்டுவார், உயர்ந்து காட்டுவார் என புகழ்ந்து பேசினார். பின்னர் பேசிய இயக்குனர் பாரதிராஜா இவ்விழாவில் பங்கேற்பது சூப்பர் ஸ்டாருக்காக இல்லை, சூப்பரான மனிதகருக்காக, மற்றவர் மனதை காயப்படுத்தாதவர், எளிமையானவர், அவரின் பரட்டை தலையை பார்த்துதான் 16 வயதினிலே படத்தில் நடிக்க அழைத்தேன். அதில் அவருக்கான சம்பளம் ரூ.3000 க்கு பேசி முடித்தேன் ஆனால் ரூ.2500 தான் கொடுத்தேன், இன்னமும் ரூ.500 பாக்கியுள்ளது. எனக்கும் ரஜினிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வரும் ஆனால் அவர் மேல் எனக்கு கோபம் வந்ததில்லை ஏனென்றால் அவர் அவ்வளவு நல்ல மனிதர் என பாரதிராஜா பேசினார்.