சூடானில் பயங்கர தீ விபத்து: பணியாற்றிய 3 தமிழர்களின் நிலை என்ன? – பிரதமருக்கு தமிழகமுதல்வர் நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம்…

December 5, 2019 at 10:23 am
pc

சூடானில் தீ விபத்தில் சிக்கிய 3 தமிழர்களின் நிலையை கண்டறிய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டின் தலைநகரான கார்டோமின் பஹிர் தொழிற்பேட்டை பகுதியில் செயல்பட்டுவந்த பீங்கான் தொழிற்சாலையில் வழக்கம் போல நேற்று தொழிலாளர்கள் தங்கள் பணிகளை செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த எரிபொருள் நிரம்பிய டேங்கர் லாரி ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் தீ விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்த அந்நாட்டு அரசின் விசாரணையில், சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் விபத்தை தடுக்க முடியாமல் போனது தெரிந்தது. இந்த தொழிற்சாலையில் மொத்தம் 50 இந்தியர்கள் உள்ளிட்ட பலர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய தூதரகம் அளித்ததகவலின் படி ,சூடானில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்ததாகவும், தமிழகத்தை சேர்த்தவர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டரில், சூடான் தீ விபத்தில் இந்தியர்கள் பலர் காயமடைத்ததாகவும் , பல தமிழர்களும் உயிரிழந்ததாகவும், காயமடைந்த இந்தியர்களுக்கு மருத்துவமனையில் சிகிக்சை நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பாக +249-921917471 என்ற எண்ணை தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்தார் .

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூடான் தொழிற்சாலையில் நடைபெற்ற தீ விபத்தில் காணாமல் போன 3 தமிழர்களின் நிலையை குறித்து கண்டறியவும், 3 தமிழர்களுக்கும் சூடானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website