”தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு” முன்னாள் துணைவேந்தர் உள்பட 4 பேர் மீது ஊழல் தடுப்பு போலீசார் நடவடிக்கை!!!
தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமன மோசடிசெய்தவர்களிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புபிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது .
தஞ்சை தமிழ் பல்கலைக்கழத்தில் 2017 ம் ஆண்டு புதிதாக பேராசிரியர்கள் மற்றும் துணை பேராசிரியர்கள் நியமனத்திற்காக தேர்வு நடைபெற்று 10 பேராசிரியர்கள் ,11 துணை பேராசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டனர் . இந்த நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் பேராசிரியர் முருகேசன், சமூக ஆர்வலர் நெடுஞ்செழியன் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது .
இதுகுறித்த விசாரணையில் தேர்ந்தெடுக்க பட்ட 21 பேரில் பலருக்கு போதிய முதுகலை ஆசிரியர் அனுபவம் இல்லாததும், பல்கலைக்கழக குழு விதிகள் கடைபிடிக்க படாததும், மேலும் 10 பேரிடம் ரூ 15 லட்சம் முதல் ரூ 40 லட்சம் வரை பணம் பெற முயற்சித்தும் தெரியவந்துள்ளது .
இதையடுத்து முன்னாள் துணைவேந்தர் பாஸ்கரன், முன்னாள் பதிவாளர் முத்துக்குமார், நேர்முக உதவியாளர் சக்தி சரவணன், தொலைநிலை கல்வி முன்னாள் இயக்குனர் என் .பாஸ்கரன் ஆகிய 4 பேர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் ,குற்றச்சதி ,நம்பிக்கை மோசடி, ஏமாற்றி நேர்மையின்றி பொருளை பெறுதல், போலி ஆவணங்கள் தயாரித்தல் பொய்யாகப் புனையப்பட்டு உண்மையானதாக உபயோகம் செய்தல், அரசு ஊழியர் சட்டவிரோதமாக பணம் பெறுதல் ஆகிய பல்வேறு பிரிவின் கீழ் தஞ்சை கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை கும்பகோணம் சிறப்புநீதிமன்றத்தில் மற்றும் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.