நாடு நாசமா போகுதே – பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் ஜாதி மோதல்!

May 3, 2022 at 11:26 am
pc

பள்ளி மாணவர்களிடையே தொடரும் ஜாதி மோதல்களை கண்டுகொள்ளாமல் விட்டால், தென் மாவட்டங்களில் மீண்டும் கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளது.திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பள்ளி மற்றும் உயர் கல்வி மாணவர்கள் சேர்க்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அதே வேளை, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ஜாதி ரீதியான மோதல்களில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது. ஜாதிக்கயிறு திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலை பள்ளியில், கை மணிக்கட்டில் ஜாதிக்கயிறு கட்டிக் கொள்வதில் ஏற்பட்ட மோதலில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார். இதில், மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை கண்டிக்காத இரு விளையாட்டு ஆசிரியர்கள், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.அரசியல் கட்சியினர் தேர்தலில் ஓட்டு வங்கிக்காக ஜாதி சங்கங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். ஜாதி சங்கத்தினர் வளரும் மாணவர்களை தங்கள் வசப்படுத்தி விடுகின்றனர்.

அரசு பள்ளி மாணவர்கள் ஜாதி கயிறு கட்டிக்கொள்வது, ஜாதி சங்க வண்ணத்திலான பனியன்களை அணிவது தென் மாவட்டங்களில் சாதாரணமாக நடக்கிறது.அந்தந்த பள்ளிகளில் ஜாதி அபிமானத்தில் ஆசிரியர்களே இம்மாணவர்களுடன் நெருக்கமாக பழகி, ஜாதிய எண்ணங்களை மேலும் துாண்டி விடும் கொடுமையும் உள்ளது.நடவடிக்கைதிருநெல்வேலியில் ஒன்றிரண்டு பாரம்பரியமிக்க அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையின் போதே பெற்றோரை வரவழைத்து, பள்ளி சட்ட திட்ட நெறிமுறைகளை புரிய வைக்கின்றனர்.

மாணவர் சிறிய தகராறில் ஈடுபட்டாலும், பெற்றோரை அழைத்து நடவடிக்கை எடுக்கின்றனர். திருநெல்வேலியில் வேறு சில பள்ளிகளில், ஆண்டுதோறும் மாணவர்களிடையே ஜாதி மோதல்கள் நடக்கின்றன.ஜாதி மோதல்களில் ஈடுபடுவது முக்கியமான மூன்று, நான்கு ஜாதி மாணவர்கள் தான். அரசு உதவி பெறும் பள்ளி களின் நிர்வாகத்திலும், குறிப்பிட்ட ஜாதியினரே கோலோச்சுவதால் பிரச்னைக்குரிய மாணவர்களை கண்டுகொள்வதில்லை. திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஜாதி மோதல்கள் தொடர்கின்றன.

மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஜாதி ஆர்வத்துடன் வரும் மாணவர்களை, துவக்கத்தில் களை எடுத்து அனுப்பி விடுகின்றனர். கருத்துஇம்மாவட்டத்தில் ஜாதி மோதலில் பாதிக்கப்படும் தரப்பினர், அந்த பள்ளிகளுக்கு தொடர்ந்து செல்ல முடியாமல் நகரத்தை நோக்கி கல்வி கற்க செல்கின்றனர். சிலர் தொடர்ந்து கல்வி கற்காமல் இடைநின்று விடுகின்றனர்.வரும் கல்வியாண்டிலிருந்து அரசு, போலீஸ் மற்றும் கல்வித்துறை தென்மாவட்ட பள்ளிகளை அதிதீவிரமாக கண்காணித்தால் மட்டுமே, அடுத்தடுத்த ஜாதி மோதல்களை தவிர்க்க முடியும் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதிரடி நடவடிக்கை அவசியம்!* அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையின் போது பெற்றோரை வரவழைத்து சட்ட நெறிமுறைகளை தெரிவிக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களை அடிக்கடி நடத்த வேண்டும்* ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் உள்ள பள்ளிகளில், மாணவர்களை கண்காணிக்க நியமிக்கப்படும் போலீசாரை அந்த பணியில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும்.

தினமும் காலையில் விளையாட்டு ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மாணவர் வருகையின் போது வண்ணக் கயிறு, ஜாதிய பனியன், மொபைல் போன் வைத்திருப்பதை கண்காணிக்க வேண்டும்* மின்கம்பங்களில் ஜாதி வர்ணங்களை பெயின்ட் தீட்டுவதை தடுக்க வேண்டும். கிராமங்களில் குறிப்பிட்ட ஜாதியினர் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அனுமதி இன்றி அமைக்கப்படும் ஸ்துாபிகள், நினைவு சின்னங்களை அப்புறப்படுத்த வேண்டும்* கோவில் கொடை விழாக்கள், திருவிழாக்களில் ஜாதியை உயர்த்தி பிடிக்கும் வாசகங்கள் கொண்ட போஸ்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும்* திருச்செந்துார், பழநி போன்ற ஆன்மிக யாத்திரை செல்லும் பக்தர்கள் கூட, தங்கள் குழுவில் ஜாதி கொடிகளுடன் செல்வதை காண முடிகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website