அரசுப்பள்ளி ஆசிரியைக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த மாணவர்கள் !
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே மலைக்குடிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 240 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியையான ஜெனிட்டா கடந்த 11 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
4-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வரும் இவர் சக ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுடன் அன்புடன் பழகி வந்துள்ளார். இதனால் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் விரும்பும் ஆசிரியையாக ஜெனிட்டா திகழ்ந்து வந்துள்ளார்.பிரிவு உபசார விழாஇந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பணியிடை மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியை ஜெனிட்டா பதவி உயர்வுடன், புதுக்கோட்டை ஆலத்தூர் அரசு நடுநிலைப்பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, மலைக்குடிபட்டி அரசு பள்ளியில் ஆசிரியை ஜெனிட்டாவுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் ஏராளமான ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டு ஆசிரியை ஜெனிட்டாவை, கட்டியணைத்து கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர். இந்த காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்தது.ஆசிரியர் என்றால் கல்வி மட்டுமே கற்றுக் கொடுப்பவர். கண்டிப்புடன் மாணவர்களிடத்தில் நடந்து கொள்பவர் என்ற நிலையில் இருப்பதை மாற்றி மாணவர்களிடம், பெற்றோர்களிடம், சக ஆசிரியர்களிடம் சகோதரத்துவத்தை பாராட்டி இவர் நடந்து கொண்ட விதத்தை எடுத்து காட்டுவதாகவே பிரிவு உபசார விழா அமைந்தது.