‘உயிரா… பயிரா…’ – வீட்டில் வீசப்பட்ட துண்டுச்சீட்டு; வயலில் அரங்கேறிய கொடூரம்!
திமுக எம்எல்ஏவின் சகோதரி மகன் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ‘உயிரா… பயிரா… இது தொடரும் என எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்துள்ள பந்தநல்லூரில் வசித்து வருபவர் கலைவாணன். இவர் ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏவின் சகோதரி மகன் ஆவார்.
கலைவாணன் அந்தப் பகுதியில் அவர் விவசாயம் செய்துவந்த நிலையில் தன்னுடைய வயலுக்கு தண்ணீர் விடுவதற்காக நேற்று இரவு வயல் பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் வயலுக்கு சென்ற கலைவாணன் வீடு திரும்பாததால் உறவினர்கள் வயல் பகுதியில் தேடினர். அப்பொழுது ஒரு பகுதியில் கலைவாணன் பல்வேறு இடங்களில் உடலில் வெட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பந்தநல்லூர் போலீசார் கலைவாணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முன்னதாக கலைவாணனின் வீட்டில் இருந்த வைக்கோல் போருக்கு தீ வைத்த மர்ம நபர்கள் சுவற்றில் ‘தொடரும்’ என எழுதிவிட்டு சென்றனர்.
சில நாட்களுக்கு முன்பு கலைவாணன் வீட்டுக்குள் காகிதம் ஒன்றை யாரோ வீசி சென்றதாகவும் அதில் ‘உயிரா…. பயிரா…’ என எழுதி இருந்ததும் தெரிய வந்தது. இதனால் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கலைவாணன் இதற்கு முன்பே நான்கு முறை பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கலைவாணன் உயிரிழந்து கிடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.