உரிய விசாரணை நடத்தாமல் இளைஞரின் மூக்கு, பல் உடைத்த போலீசார்- வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்..!!

விழுப்புரம் அருகே, இளைஞர் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கிராம மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் முத்துராமன். இவர் தற்போது அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி வருகிறார்.
வீடு முழுதும் அரசே கட்டிக்கொடுக்கும் என்பதால் வீடு கட்டும் பணிகளை திருமுண்டீஸ்வரம் கிராமத்தை சேர்ந்த மேஸ்திரி சுபாஷ் சந்திரபோஸ் கவனித்து வந்தார்.
கடந்த மாதம் முத்துராமன் வீட்டுக்கு ஒதுக்கப்பட்ட சிமெண்ட் மூட்டைகள் மற்றும் செங்கற்களை சுபாஷ்சந்திரபோஸ் எடுத்துச் சென்றார். முத்துராமன் அதைத் தடுத்த போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த நான்காம் தேதி அன்று முத்துராமன் வங்கி கணக்கிற்கு அரசு செலுத்திய 25,000 ரூபாய் பணத்தை எடுத்து தர வேண்டும் என சுபாஷ்சந்திரபோஸ், கேட்டுள்ளார்.
ஏற்கனவே தன்னிடம் கேளாமல் சிமென்ட், செங்கற்களைத் துாக்கிச் சென்றதால் இப்போது பணம் தர முடியாது என முத்துராமன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கோபத்தில் அங்கிருந்து சென்ற சுபாஷ், திருவெண்ணெய்நல்லுார் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் தங்கவேல் மற்றும் காவலர் முருகன் ஆகியோரிடம், தன்னை முத்துராமன் தாக்கியதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனாத்தூர் கிராமத்திற்கு சென்ற காவலர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முத்துராமனை வெளியே அழைத்தனர்.வெளியே வந்த முத்துராமனிடம் எவ்வித விசாரணையும் நடத்தாமல், உதவி ஆய்வாளர் தங்கவேல் தாக்கியுள்ளார்.
இருசக்கர வாகனத்தின் சாவியால் குத்தியதில் முத்துராமனுக்கு மூக்கில் கடுமையான காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இரண்டு பற்கள் உடைந்தன. அதைப் பார்த்து ஆத்திரமடைந்த அங்கிருந்த கிராம மக்கள் உரிய விசாரணை நடத்தாமல் ஏன் தாக்கினீர்கள் என கேட்டு காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காவலர்கள் இருவரும் தங்கள் பைக்கில் ஏறித் தப்ப முயன்றபோது கிராம மக்கள், பைக் சாவியைப் பறித்துக் கொண்டு அவர்களைச் சூழ்ந்து கொண்டு சிறைப்பிடித்தனர். தகவலறிந்த விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன், விழுப்புரம் கோட்ட டிஎஸ்பி நல்லசிவம் உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சிறைப் பிடித்து வைக்கப்பட்ட இரண்டு போலீசாரையும் கிராம மக்கள் விடுவித்தனர்