கடலில் குளித்த 4 பேர் மாயமான சம்பவம்: கரை ஒதுங்கிய சிறுமியின் உடல்!

வார இறுதி நாட்கள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் உள்ள கடற்கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் புதுச்சேரி நெல்லித் தோப்பு பகுதியைச் சேர்ந்த லேகா (வயது 14) மற்றும் மோகனா (வயது 16) என்ற இரு பள்ளி மாணவிகள் உள்ளிட்ட பள்ளி மாணவன் நவின், கேட்டரிங் ஊழியர் கிஷோர் (வயது 16) என்ற இளைஞர் என 4 பேர் நேற்று (31.12.2023) கடலில் குளித்துக் கொண்டிருந்துள்ளனர்.அப்போது கடல் அலையில் சிக்கிய 4 பேரையும் இழுத்துச் சென்றதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து கடலில் காணாமல் போன 4 பேரையும் ஒதியஞ்சோலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடி வந்தனர். கடலில் குளித்த சிறுமிகள் உட்பட 4 பேர் மாயமான சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் கடலில் குளித்த போது காணாமல் போன 4 பேரில் ஒரு சிறுமியான லேகாவின் உடல் வீராம்பட்டினம் கடல் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.