கல்யாணத்திற்காக சேமித்த பணத்தில் சிமெண்டு சாலை அமைத்த என்ஜினீயர்.!
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சந்திரசேகரன் (வயது 31). இவர் சென்னையில் உள்ள எச்.சி.எல். நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார்.
வருகிற செப்டம்பர் 1-ந் தேதி நிச்சயிக்கப்பட்ட தனது திருமணத்திற்காக ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் சேமித்து வைத்திருந்தார். அவரது சொந்த ஊரான நல்லாவூர் கிராமத்தில் ஈஸ்வரன் கோவில் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த தெருவில் உள்ள சிமெண்டு சாலை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் சீரமைக்கப்படாததால் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் கிராம மக்கள் சிரமத்துக்குள்ளானார்கள்.
இதனால் இந்த சாலையை சீரமைக்க சந்திரசேகரன் முடிவு செய்தார். இதற்காக அவர், வட்டார வளர்ச்சி அதிகாரியை சந்தித்து தன் கிராமத்தில் நிலவரத்தை எடுத்துக்கூறி சாலை அமைத்து தர வேண்டுமென மனு அளித்தார்.
அதற்கு அதிகாரிகள் தரப்பில், நிதி பற்றாக்குறையை காரணம் காட்டினர். போதிய நிதி வந்த உடன் சாலை அமைத்து தரப்படும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் வானூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், குடியிருப்பு பகுதிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் நமக்கு நாமே திட்டத்தில் சாலை அமைக்கக்கோரி, பணிக்கான திட்ட செலவாக 50 சதவீதம் சந்திரசேகரனிடம் கேட்கப்பட்டது. மேலும் பணி முடிந்த பிறகு தான் பில்தொகை வெளியிடப்படும் எனவும் கூறினர்.
இதனை ஏற்றுக்கொண்ட சந்திரசேகரன் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 50 சதவீதம் நிதி செலுத்தி சாலை அமைக்க முடிவு செய்தார். ஆனால் இதிலும் காலதாமதம் ஏற்படும் என தெரியவந்தது. எனவே முழு செலவையும் தானே செய்து தனது கிராமத்திற்கு சாலை அமைக்க திட்டமிட்டார்.
இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக தனது திருமணத்துக்காக சேர்த்து வைத்த பணத்தில் செலவு செய்ய முடிவு செய்தார். பின்னர் தனது விருப்பத்தை தெரிவித்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தை அணுகினார். அதைத்தொடர்ந்து கிராமத்தில் 14 அடி அகலம், 290 மீட்டர் நீளம் கொண்ட சிமெண்டு சாலையை 100 சதவீத பங்களிப்புடன் தொடங்கி ஒரு மாதத்தில் முடித்தார்.
திருமணத்துக்காக சேமித்து வைத்து இருந்த பணத்தை பயன்படுத்தி சொந்த கிராமத்தில் சிமெண்டு சாலை அமைத்து கொடுத்த என்ஜினீயர் சந்திரசேகரனை கிராம மக்கள் பாராட்டுவதுடன் தகவல் அறிந்தவர்களாலும் பாராட்டு குவிந்து வருகிறது