கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து நகைக்கடையில் கொள்ளை-போலீசார் தேடுதல் வேட்டையில் தீவிரம்…!!!

மகாராஷ்டிர நகைக்கடை ஒன்றில் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே வருகின்றனர். ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து மற்றவர்களுக்கு சேவை செய்கின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் திருடர்கள் பாதுகாப்பு உடை அணிந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். நகைகள் திருடு போயுள்ளதாக கடை உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து அங்கு இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையர்கள் சிலர் முகக்கவசம், கையுறைகள், பாதுகாப்பு உடைகள் அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டறிந்தனர்.
சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்துள்ள அவர்கள், கடையில் இருந்து சுமார் 780 கிராம் மதிப்பிலான நகைகளை திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளதால் அவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.