சிக்கும் கொல்கத்தா மருத்துவமனை Ex முதல்வர் சந்தீப்? உண்மையை கண்டறியும் சோதனைக்கு பின் சிபிஐ ரெய்டு
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட போது ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷுக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அவரிடம் நேற்று சிபிஐ அதிகாரிகள் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்திய நிலையில், இன்று அவருக்குச் சொந்தமான இடங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில் கடந்த ஆக. 9ம் தேதி பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதில் சஞ்சய் ராய் என்ற ஒருவர் மட்டும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், இதில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கூறி போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
15 இடங்களில் ரெய்டு: இதற்கிடையே சிபிஐ அதிகாரிகள் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷுக்கு தொடர்புடைய 15 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர். அவர் மீது ஊழல் வழக்கை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக இப்போது ரெய்டு நடத்தியுள்ளனர். கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து சந்தீப் கோஷ் முதல்வராக இருந்த கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நடந்ததாகக் கூறி சிபிஐ அதிகாரிகள் நேற்று தான் வழக்குப் பதிவு செய்தனர். இந்தச் சூழலில் இன்றைய தினமே இந்த ரெய்டை நடத்தியுள்ளனர்.
நேற்றைய தினம் தான் சந்தீப்பிடம் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், மறுநாளே ரெய்டு நடத்தியுள்ளனர். சந்தீப் முதல்வராக இருந்தபோது நிதி முறைகேடு செய்ததாகக் கூறி, மருத்துவமனையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் அக்தர் அலி புகார் அளித்து இருந்தார். அந்த மனுவின் அடிப்படையில் விசாரணை நடத்த சிபிஐ தரப்புக்குக் கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டது.
அங்குப் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை ஏற்கனவே சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இப்போது இந்த ஊழல் புகாரையும் சிபிஐ விசாரிக்கும் எனக் கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக நீதிபதிகள் மேலும் கூறுகையில், “இந்த வழக்கு விசாரணையில் பல முரண்பாடுகள் உள்ளன. தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்க இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது. தேவையற்ற குழப்பங்கள் சிபிஐ விசாரணை மூலம் தடுக்கப்படும். உரிய நேரத்தில் விசாரணை நடப்பது உறுதி செய்யவே சிபிஐக்கு இது மாற்றப்படுகிறது” என்று தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், விசாரணை அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தீப் கோஷ்: ஏற்கனவே கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலையில் சந்தீப் கோஷ் நடவடிக்கைகள் கடும் பேசுபொருள் ஆகியிருந்தது. நேற்றைய தினம் சந்தீப் கோஷ் உட்பட 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் உண்மையைக் கண்டறியும் சோதனையையும் நடத்தியிருந்தனர். சந்தீப் கோஷ் மீது ஏற்கனவே பல ஊழல் புகார்கள் இருக்கும் நிலையில், இந்த சிபிஐ ரெய்டு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஆர்ஜி கர் மருத்துவமனையில் கடந்த ஆக. 9ம் தேதி பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்த போது அப்போது சந்தீப் கோஷ் தான் முதல்வராக இருந்தார். அப்போது அவரது செயல்பாடுகள் பல சர்ச்சைகளைக் கிளப்பின. பயிற்சி மருத்துவர் கொலை குறித்து புகார் கூட அளிக்காதது, முதலில் அதைத் தற்கொலை எனக் கூறி மறைக்கப் பார்த்தது என அவர் மீது பல புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.