தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி: அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

October 7, 2024 at 9:51 am
pc

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாடு முழுவதும் பேரணி நடத்துவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பேரணி சென்னை, கோயம்புத்தூர் மற்றும் தென்காசி என 50க்கும் மேற்பட்ட இடங்களில் (06.10.2024) நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாகச் சென்னை எழும்பூர் பகுதியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் மத்திய இணை இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டார். எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேரணியில் ஈடுபட்டவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு சீருடையுடன் கையில் கொடியை ஏந்திச் சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த பேரணி நடைபெற்றது. இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “1925 ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்று நூற்றாண்டை நெருங்கிய, நமது பாரத தேசத்தில் மட்டுமல்லாது உலகிலேயே பழமையான அமைப்பாக இருந்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.

இந்து சமுதாய மக்களிடையே ஒற்றுமை ஏற்படுவதற்கும், தேசத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு பாதுகாக்கப்படுவதற்கும் எண்ணிலடங்கா ஸ்வயம் சேவகர்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கக் கூடிய இயக்கமாக இருக்கிறது. இத்தனைக்கும் உரித்தான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலத்தில் இன்று கலந்து கொண்டதில் மிகுந்து மகிழ்ச்சி. சென்னை ராஜரத்தினம் மைதானத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தில், நூற்றுக்கணக்கான ஸ்வயம் சேவகர்கள் கலந்து கொண்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து இந்த பேரணிக்கு அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் போலீசாரும் இந்த பேரணிக்கு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website