பெரியார் சிலை அவமதிப்பு – தானாக முன்வந்து கிருஷ்ணன் என்பவர் போலீசாரிடம் சரண்…!!!

கோவையில் பெரியார் சிலை மீது காவி் சாயம் பூசப்பட்ட விவகாரத்தில் பாரத்சேனா அமைப்பை சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்பவர் சரணடைந்துள்ளார்.
கோவை சுந்தராபுரத்தில் உள்ள ஈ.வெ.ரா., சிலை மீது, நேற்று இரவு, காவி சாயம் பூசப்பட்டது.இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஈ.வெ.ரா., ஆதரவாளர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளர்களுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டது.
கடந்த 1995ம் ஆண்டு, கோவை – பொள்ளாச்சி சாலையில், சுந்தராபுரத்தில் ஈ.வெ.ரா.,வின் முழு உருவச்சிலை நிறுவப்பட்டது.
கோவையில் உள்ள மூன்று முக்கிய சிலைகளில் இதுவும் ஒன்று. இந்த சிலையின் முன், திராவிட கழகத்தினரால், பல்வேறு விதமான போராட்டங்களும், பகுத்தறிவு சார்ந்த சிந்தனை நிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் நடைபெறும். திராவிடர் கழகத்தினரால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த சிலை மீது, காவி சாயம் பூசப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈ.வெ.ரா., தொண்டர்களும் தி.மு.க., – ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் இன்று காலை அந்த பகுதியில் ஒன்று கூடி, ‘சாயம் பூசிய நபர்களை கைது செய்ய வேண்டும்’ எனக் கோஷம் எழுப்பினர். குனியமுத்தூர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், போத்தனூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அருண்கிருஷ்ணன் என்பவர் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட விவகாரத்தில் தானாக வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். இவர் பாரத்சேனா அமைப்பை சேர்ந்தவர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.