யமுனை ஆற்றில் குளித்த பாஜக தலைவருக்கு நேர்ந்த நிலை!
அசுத்தமான யமுனை ஆற்றில் குளித்த பாஜக தலைவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள யமுனை நதி கடுமையாக மாசடைந்துள்ளதற்கு ஆம் ஆத்மி அரசு தான் காரணம் என்று டெல்லி பாஜக தலைவர் விரேந்தர் சச்சுதேவ் கூறினார். இதனால் அவர், யமுனை நதிக்கரையில் நீராடினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “யமுனை நதியை சுத்தம் செய்ய இந்திய அரசு 8,500 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. அதற்கு ஆம் ஆத்மி அரசு கணக்கு காட்ட வேண்டும்” என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான சவுரப் பரத்வாஜ், “யமுனை நதிக்கரைக்கு அருகில் எந்தவொரு தொழிற்சாலையும் இல்லை. அரியானாவில் உள்ள பானிபட் மற்றும் சோனிபட் வடிகால்களில் இருந்து தான் தொழிற்சாலை கழிவுகள் யமுனை நதியில் கலக்கிறது.
இதனால் பாஜக தலைவர் அரியானா அரசுடன் பேசி கழிவுகள் கலப்பதை நிறுத்த வேண்டும்” என்றார்.
இந்நிலையில், அசுத்தமான யமுனை நதியில் குளித்த பாஜக தலைவர் விரேந்தர் சச்சுதேவ் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, சுவாச கோளாறு, உடல் அரிப்பு, தோல் பிரச்சனை ஆகியவை ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.