வடசென்னையை வாட்டி வதைக்கும் நச்சு காற்று! 300கும் மேற்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு…
சென்னை திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் அடிக்கடி நச்சு வாயு கசிவு ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதிகள் உள்பட வட சென்னையில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த 3 பகுதிகளிலும் நச்சு வாயுவை வெளிப்படுத்தும் 24 நிறுவனங்களில் இருந்து அடிக்கடி நச்சு வாயு கசிகிறது. இந்த நச்சு வாயு காற்றில் கலப்பதால் காற்றும் நச்சாகிறது. இதை சுவாசிக்கும் பொதுமக்களுக்கு ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஜூலை மாதம் 7-ந்தேதி கியாஸ் கசிவு ஏற்பட்டது போன்ற உணர்வு தென்பட்டது. அந்த பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் இதை பெண்கள் உணர்ந்தனர். நள்ளிரவு மற்றும் அதிகாலையில் மழை பெய்யும் நேரங்களிலும், அதிகாலையில் பனி தோன்றும் நேரத்திலும் இந்த வாடை வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
விசாரணையில் இந்த வாயு கசிவு தொழிற்சாலைகளில் இருந்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த வாயு கசிவால் அந்த பகுதியில் வசிக்கும் சிலருக்கு மயக்கம், கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தபோது மணலியில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது எண்ணெய் நிறுவனத்தில் சல்பர் ஆக்சைடு அளவுக்கு அதிகமாக சேர்த்ததால் நச்சு வாயு வெளியேறி காற்றில் கலந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் சல்பர் ஆக்சைடு குறைவாக சேர்க்கப்பட்டது. அதன்பிறகு 2 வாரம் வரை அதே பாதிப்பு இருந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த பாதிப்பு குறைந்தது. ஆனாலும் மற்ற நிறுவனங்களில் இருந்தும் அவ்வப்போது அம்மோனியா உள்ளிட்ட வாயு வெளியேறி வருகிறது.
அங்குள்ள உரத்தொழிற்சாலையில் இருந்தும் அவ்வப்போது நச்சுவாயு கசிகிறது. நேற்று முன்தினம் அதிகாலையில் மழை பெய்ததால் இந்த நச்சு வாயு காற்றில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தியது. பெரும்பாலும் வட சென்னை பகுதிகளில் இந்த நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து காற்று மாசுவை ஏற்படுத்தி உள்ளது. மழை, பனி நேரங்களின்போது அதை பொதுமக்கள் உணருகிறார்கள். இதனால் சுவாச பிரச்சினைகள் தவிர கை மற்றும் உடலில் தோல் அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
வடசென்னையில் காற்று மாசு அதிகரித்து வருவதால் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சுவாச பிரச்சினை, நுரையீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் நுரையீரல் பிரிவு பேராசிரியர் டாக்டர் வினோத்குமார் கூறியதாவது:-
வடசென்னையை பொருத்தவரை காற்று மாசு அதிகமாக உள்ளது. தொழிற்சாலைகளால் காற்று மாசு ஏற்படுவது ஒரு புறம் இருக்க கட்டிட பணிகள், பழைய கட்டிடங்களை இடித்தல், வாகன பெருக்கம் காரணமாக ஏற்படும் புகை ஆகியவற்றின் காரணமாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு முன்பு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சுவாச பிரச்சினை, நுரையீரல் பாதுகாப்பு காரணமாக உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 150 ஆக இருந்தது. அது தற்போது 300 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு முன்பு ஸ்டான்லி மருத்துவமனைக்கு, சுவாச பிரச்சினை, மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்பு காரணமாக தினமும் 30 பேர் முதல் 40 பேர் வரை வருவார்கள். ஆனால் தற்போது தினமும் 150 பேர் வருகிறார்கள். கொரோனா தொற்றால் முழு அடைப்பின்போது பெரும்பாலான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர். அதனால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அந்த சூழ்நிலைக்கு ஏற்ப மாறிவிட்டது.
ஆனால் சில மாதங்களாக அனைவருமே வெளியே வரத்தொடங்கி விட்டனர். இதனால் காற்று மாசு காரணமாக அவர்கள் சுவாச பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். நுரையீரல் பாதிப்பு காரணமாக வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன தொழில் நுட்ப கருவிகள் உள்ளன. இதன்மூலம் அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.