அத்துமீறிய பள்ளி மாணவர்கள்… அதிரடி காட்டிய வேலூர் ஆட்சியர்!
வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு 12-ஆம் வகுப்பு சி பிரிவில் படிக்கும் மாணவர்கள் சிலர் வகுப்பறையில் மேசைகளை உடைக்கும் காட்சி இணையத்தில் வைரலானது.
சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்பள்ளியில் பொது சொத்துக்களை சேதப்படுத்திய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை அழைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதனை அடுத்து நேற்று முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் ஆகியோர் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பிறகு சம்பவத்திற்கு காரணமான 10 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். மேலும், பள்ளியில் ஒழுங்கீனமாக உள்ள மாணவர்களை கண்டறிந்து கவுன்சிலிங் கொடுக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மாணவர்கள் இனி பள்ளிக்கு செல்போன் எடுத்துவர தடை விதித்திக்கப்பட்டுள்ளது. அதனை மீறி பள்ளிக்கு செல்போன் எடுத்து வரும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.