அரசுப் பள்ளி ஆசிரியையை இட மாற்றம் செய்ததை கண்டித்து பொதுமக்கள் பஸ் மறியல்..!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஊராட்சியை சேர்ந்த மூவராயன்பாளையம் மேலூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 92 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், நான்கு ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்ததாகவும் சில தினங்களுக்கு முன்பு மாணவ-மாணவிகளுக்கு நன்றாகக் கல்வி கற்று கொடுத்து வந்த ஒரு ஆசிரியையை இடமாறுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கூடுதலாக ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தியும் கல்வி அமைச்சர் மற்றும் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. விடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இன்று காலை 10.45 மணிக்கு மூவராயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 50 -க்கும் மேற்பட்ட பெண்கள் கடைவீதி அருகே ஒன்று திரண்டனர்.
இதைத்தொடர்ந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக சித்தாம்பூர் மற்றும் தண்டலை ஆகிய கிராமங்களுக்குச் சென்ற 2 அரசு பஸ்களை திடீரென சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.