இறந்த மனைவிக்கு உயிர் வந்துவிடும் என நம்பி கணவர் செய்த செயல்!

உயிரிழந்த மனைவிக்கு மீண்டும் உயிர் வந்துவிடும் என நம்பி சடலத்தை வீட்டில் வைத்திருந்த கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் மதுரையில் வசித்து வந்த தம்பதி பாலகிருஷ்ணன் – மாலதி. இவரின் மூத்த மகன் ஜெய்சங்கர் மருத்துவ படிப்பை முடித்த நிலையில், இளைய மகன் சிவ சங்கர் மூன்றாமாண்டு மருத்துவபடிப்பு படித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலகிருஷ்ணன் குடும்பத்தார் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதம் மாறி பகுதி நேரம் போதக ஊழியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உடல்நலக்குறைவால் மாலதி கடந்த 8ஆம் திகதி உயிரிழந்தார். அவர் இறப்பு குறித்து பாலகிருஷ்ணன் மற்றும் மகன்கள் யாரிடமும் சொல்லாமல் இருந்ததோடு சடலத்தை வீட்டிலேயே குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தனர்.
அக்கம்பக்கத்தினர் இது குறித்து கேட்ட போது ஏதேதோ கூறி சமாளித்த நிலையில் மூன்றாவது நாளும் சடலத்தை வைத்திருந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் அங்கு வந்த போது தற்கொலை மிரட்டல் விடுத்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரின் மகன்கள் மாலதி மீண்டும் மூன்றாவது நாள் உயிர்த்தெழுவார் என நம்பி ஜெபம் செய்தது தெரிந்தது.
இதை கேட்ட பொலிசார் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் பொலிசார் வீட்டுக்குள் சென்று சடலத்தை மீட்டு மாலதி சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர். மருத்துவ படிப்பு படித்த மகன்களுடன் சேர்ந்து பாலகிருஷ்ணன் இவ்வாறு செய்தது அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.