செல்வராகவனுக்கு பிரச்சனையில் இருக்கும் 4 இரண்டாம் பாக படங்கள்!
“கலை அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா” என்ற எம் ஆர் ராதாவின் கூற்றுக்கு இணங்க கலையின் மீது தீராத தாகத்தை கொண்டிருக்கிறார் செல்வராகவன். கலைக்குரிய தேடலையும்,தேடலின் மூலம் கிடைத்த விடையையும் ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய ஆதங்கத்துடன் தமிழ் திரை உலகில் தனக்கே உரிய பாணியில் காவியம் படைத்து வருகிறார் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்து அதற்கான வேலையில் இறங்கியுள்ளார் செல்வராகவன்.
7 ஜி ரெயின்போ காலனி 2: இது காதலின் அதிசயம் என்றவாறு மிடில் கிளாஸ் மக்கு பையனுக்கும் ஹை கிளாஸ் நன்கு படிக்கும் பொண்ணுக்கும் உருவாகும் காதலையும், பிரிவினால் ஏற்படும் வலியையும் ஒருசேர வெளிப்படுத்தி ரசிகர்களின் இதயத்தை கனக்கச் செய்தார் செல்வராகவன். மீண்டும் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க துணிந்தபோது கதாபாத்திரத்திற்கு பொருந்தும் நட்சத்திரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறாராம். நாயகன் ரவி கிருஷ்ணா நடிக்க நாயகியாக அதிதி சங்கர், இவானா, மலையாள நடிகை அனஸ்வரா போன்றோர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஆயிரத்தில் ஒருவன் 2: கார்த்தி, பார்த்திபன் நடித்த கல்ட் கிளாசிக்கான இப்படத்தின் வெற்றியை தாமதமாக கொண்டாடினர் ரசிகர்கள். ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க ஆயிரத்தில் ஒருவன் 2 கண்டிப்பாக இயக்குவதாகவும் அதில் தனுஷ் நடிப்பதாகவும் செல்வராகவன் கூறியுள்ளதாக ஜிவி பிரகாஷ் பேட்டி ஒன்றில் பகிர்ந்தார்.
நானே வருவேன் 2: திரில்லர் கதையாக இருந்தாலும் சலிப்பு தட்டாமல் பழைய படங்களின் சாயல் இல்லாமல் நானே வருவேன் படத்தை வித்தியாசமாக இயக்கியிருந்தார் செல்வராகவன். தனுஷ் இரட்டை வேடத்தில் அண்ணன் சொல்லி கொடுத்ததை பக்காவாக செய்து முடித்து இருந்தார். ரசிகர்களின் கேள்விக்கு கண்டிப்பாக நானே வருவேன் 2 நிச்சயமாக உண்டு என்று மட்டும் பதிலளித்து உள்ளார் செல்வராகவன்.
புதுப்பேட்டை 2: தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. 18 ஆண்டுகளுக்குப் பின் இதன் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக செல்வராகவன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தில் குப்பை தொட்டியில் போடப்பட்ட குழந்தை பெரியவன் ஆனபின் சந்திக்கும் பிரச்சனைகளின் தொடர்ச்சியாக இருக்கும் என்று கூறியுள்ளார். தனுஷ் பிஸியாக இருந்தாலும் கண்டிப்பாக இந்த ஆண்டு புதுப்பேட்டை 2 தொடங்க உள்ளதாக கூறியுள்ளார் செல்வராகவன்.